

ஆறறிவு ஜீவனான மனிதனுக்கும் ஐந்தறிவு ஜீவராசியான விலங்கினத்திற்கும் அதிகமாக காணப்படும் ஒன்று… அதுதான் பாசம்.
பாசம் என்ற ஒன்று இல்லாமல் போனால் மனித உணர்வுகள் மரத்துப்போய் ஒரு கணிப்பொறியைப்போல மாறிப் போவான்.
இன்பமான மனித வாழ்க்கைக்கு அடிப்படை பாசம் பெற்றோர்களிடம் இருக்கும் பாசத்தில் பாதி அளவாவது பிள்ளைகளிடம் இருந்தால்தான் வாழ்க்கை வசந்தமாகும்.
பாசம் என்பது நல்ல குணம் என்பதால் அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்த தயங்க கூடாது. தம்பியோ தங்கையோ தவறு செய்தால் கண்டிப்பது உரிமை என்றாலும் அவர்களது மனம் புண்படாத வகையில் பாசமாக கண்டிக்கவேண்டும்.
இளைஞர்களுக்கு பெற்றோர்கள் தோழன், தோழிகளாக இருப்பதால் அவர்களிடம் மனம் விட்டு பேசி கலகலப்பாக இருக்க வேண்டும் . வாலிப குறும்புகளை நகைச்சுவையுணர்வுடன் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது உங்களது எண்ணமும் பாசமும் விசாலமாகும்.
அம்மா செய்யும் வெண்டைக்காய் பொரியல் நன்றாக இருந்தால், எத்தனையோ உணவகங்களில் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் அம்மா! உங்கள் கைப்பக்குவம் யாருக்குமே வராது என வாயார புகழ்ந்து பாருங்கள் அம்மாவுக்கு அந்த புகழ் மொழியே அமுதமாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் நடவடிக்கையை மூன்றை கண்காணிக்கும் கண்காணிப்பாளரான தந்தையிடம் ஒவ்வொரு காரியத்திற்கும் ஆலோசனை கேட்கும்போது அளவற்ற ஆனந்தம் அடைந்து அற்புதமான யோசனைகளை வழங்குவார்.
அப்பா! நான் இப்படி செய்துவிட்டேன். இதற்கு என்ன வழி என்று கேட்டால் உங்கள் நடவடிக்கையில் தாயும், தந்தையும் உங்களை நெருங்கி வருவார்கள்.
ஆகவே இன்றைய இளைஞர்களே மொபைல் போனும், லேப்டாப்பும், கணிப்பொறியும் உங்களது வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்டாலும் அவை அனைத்தும் உயிரற்ற பொருட்கள்தான் என்பதே என்றும் மனதில் வையுங்கள்.
பாசத்தைப் பற்றி இந்த வயதில் நீங்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான் என்றாலும் எதிர்காலத்தில் நீங்களும் ஒரு தாயாகவோ தந்தையாகவோ மாறும்போது பாசத்தின் அருமை உங்களுக்குத் தெரியும்.
இந்த உலகில் அம்மாவையும், அப்பாவையும் போல பாசத்தை வாரி வழங்க வேறொருவர் இல்லை என்பதே இந்த பூமி உள்ளவரை நிலைத்திருக்கும் கருத்தாகும்.
எந்த பொய்யும் முதுமை அடையும் வரை வாழ்வதில்லை. ஆகவே நீங்கள் தவறு செய்தாலும் பெற்றோர்கள் உங்களுடைய வழிகாட்டிகளாகத்தான் இருப்பார்களே ஒழிய! தண்டிப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு குழந்தைதான் என்பதால் அவர்களிடம் தினமும் அரைமணி நேரமாவது நேரிலோ அல்லது தொலைபேசியிலோ மனம் விட்டு பேசுங்கள். அன்பை அன்பால் அடிமைப்படுத்தி ஆனந்தம் பெறுங்கள்.