
உங்களுடைய குறிக்கோள் திட்டவட்டமாய் இருந்து விட்டால் அதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதும் எளிதாயிருக்கும். உங்கள் குறிக்கோளை அடையும் முயற்சியில் உங்களோடு ஒத்துழைப்பவர்களுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியும்.
குறிக்கோள் எதுவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது செய்யக்கூடியதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். தங்களால் செய்யப்பட்டது என்றும் அவர்களை நம்பச் செய்யவேண்டும்.
குறிக்கோள் திட்டவட்டமானதாய் இருந்தால்மட்டும் போதாது. அதை அடைதற்கான கால எல்லையையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
மிகச்சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தீர்களானால் தெரியும், தாங்கள் அடைந்த புகழால் அவர்கள் எதையும் செய்துவிடவில்லை, தங்களுடைய செயலூக்கத்தையும் தொடர் முயற்சியையும் கொண்டுதான் செய்தார்கள் என்பது.
கிரிகோர்மெண்டல், மரபுக் கொள்கைகள் பற்றி ஆராய்ந்தவர். ஆஸ்திரிய நாட்டு துறவி. தம்முடைய ஆசிரியர் வைத்த தேர்வுகளில் மூன்று முறை அவர் தோற்றிருக்கிறார். ஆனால் அது குறித்துக் கவலைப்படாமல் தாவரக்குடும்பங்கள் பற்றிப் பல சோதனைகளை மேற்கொண்டிருந்திருக்கிறார். என்றும் தொடர்ந்து இருக்கக்கூடிய ஒன்றைச் செய்ததன் மூலம் ஆன்ம திருப்தி அடைபவர்களில் மெண்டலும் ஒருவர். அவர் இறந்து வெகுகாலம்வரை அவருடைய உழைப்பு கண்டுகொள்ளப் படவேயில்லை.
விடாமுயற்சிக்கு இணையாய் சொல்ல இன்னொன்று கிடையாது. திறமை அந்த இடத்துக்கு வரமுடியாது. வெற்றி பெறாதவர்களிடமும் ஒன்றைச் செய்வதற்கான திறன்இருக்கவே செய்கிறது. கல்வியும் விடாமுயற்சியின் இடத்தைத் தொடமுடியாது. படித்திருந்தும் கைவிடப்பட்ட பேர்கள் நிறைய உண்டு. உலகத்தில் மன உறுதியும், விடா முயற்சியும்தான் அனைத்திலும் மேம்பட்டு நிற்பவை.
தங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் வேலையை வெற்றியை யாரும் ஒரே நாளில் அடைந்துவிடவில்லை. வேலை அல்லது வெற்றியின் பின்னணியில் ஆண்டுக்கணக்கான உழைப்பிருக்கும், முயற்சியிருக்கும்."
உங்கள் குறிக்கோளை அடைவதற்கான திறமை உங்களிடம் இருக்கும். எனினும் அதைச்செய்வதற்கான எண்ணந்தான் விளைவை ஏற்படுத்துவது.
ஒவ்வொரு நடவடிக்கையிலும் இறங்குவதற்குமுன் இது என்னுடைய நோக்கத்தை அடைவதற்கு உதவுமா? என்று உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
விருப்பம் இருந்தால்மட்டும் போதாது. தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும். அதுதான் உங்கள் சக்திகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி உதவுவது.
உங்கள் நோக்கம் தெளிவாயிருந்துவிட்டால் உழைப்பதில் சிரமம் இருக்காது. வேலையே ஒரு விளையாட்டாகிவிடும். திடமான நோக்கம் செயல் தூண்டலை வழங்கும். எதைச்செய்தாலும் உவகையோடு, மனப்பூர்வமாய் செய்யுங்கள். நீங்களாகவே சிந்தியுங்கள், திட்டமிடுங்கள். ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டுவிடுங்கள். உங்களுக்குள் கொழுந்து விட்டெறியும் ஆசையை குறிக்கோளை அடையும் விதமாய் தீவிரப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் நோக்கம் தெளிவாய் இருந்தால் குறிக்கோளை அடையும் முயற்சியில் அதற்குத் தேவையான வலிமையைப் பெறுவீர்கள்.