
எந்த ஆசைகளும் நம் மனக்கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நன்மையைத்தரும். அளவிலா ஆசைகள் நம் மனதை ஆளவிட்டால், கட்டுப்பாடு இழந்து தவிக்க நேரிடும்.
நல்ல செயல்களையும் தவிர்க்க நேரிடும். ஆசைகளை துறந்து வாழவேண்டாம். கட்டுப்பாடு அளவுடன் ஆசைகள் இருப்பதே ஆரோக்கியமான நிலை ஆகும்.
''பேராசை பெரும் நஷ்டம்" என்பார்களே அது போலும் ஆகிவிடும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே நல்லது. இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்டால், உள்ளதும் போய்விடும்.
விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். வரவுக்கு ஏற்றாற்போல் செலவு செய்தால், வாழ்க்கை செம்மையாக இருக்கும். அதை விட்டு, விட்டு வேதனைப்படவேண்டும். அதற்காக இந்தத் கடன் கிடைக்கிறதே என அதிகமாய் வாங்கிவிட்டு பிறகு ஏன் தவறினைச் செய்கிறார்கள்.
கண்மூடித்தனமான ஆசைகளால் குற்றங்களும் பெருகிவிடுகின்றன. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு, செய்யக்கூடாத தவறினைச் செய்கிறார்கள்.
திருடிப் பிழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் திருடச் செல்லும் போது, கொலை வெறித்தாக்குதலுக்கும் அஞ்சமாட்டேன் என்கிறார்கள்.
இதனால் எத்தனை அப்பாவிகள் உயிர் இழந்து விடுகின்றனர் தெரியுமா? இதற்கெல்லாம் என்ன காரணம்?
ஆசைகளுக்கு அடிமை ஆனதுதானே நியாயமான ஆசைகள் இருக்கலாம். அவை மனிதனை வளர்ச்சியுறச் செய்யும் அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வெற்றி பெறவும் செய்யலாம்.
நியாயமற்ற, பேராசையின் விளைவாக எத்தனையோ வேண்டத் தகாத சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. தேவையற்ற தகாத ஆசைகள் உண்டாக்கும் விபரீதப் புத்தியினால்தான் இவ்வளவு அவலங்களும் ஏற்படுகின்றன.
அக்காலத்தில் தேசப்பற்றுடன், மக்களுக்கு உதவும் பொருட்டு தேர்தலில் நின்றார்கள். ஆனால் இப்பொழுது சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் தேர்தலில் நிற்கிறார்கள்
அன்று நாட்டு நலனுக்காகத் தன்னையும், தங்கள் சொத்துக்களையும் அர்ப்பணித்து நல்ல தலைவர்களாய் வாழ்ந்தார்கள். இன்றோ நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது.
வருமானத்திற்காகத் தன்மானத்தையும் இழக்கத் துணிந்துவிட்டார்கள் . நேரத்திற்கு ஒரு பேச்சும் நேரத்துக்கு ஒரு செயலும் என்று நடந்து கொள்கிறார்கள். இதெல்லாம் எப்படி? பேராசைக்கு அடிமையானதால் தானே தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது.
அனைத்துத் துறைகளிலும் குற்றங்கள் அதிகரித்து விட்டன. மனச்சாட்சியுடன் நடந்து கொள்பவர்கள் குறைவாகிவிட்டனர். ஈரமில்லாத மனம் படைத்தவர்களிடம் ஆசைகளின் பாரம் அளவுக்கு அதிகமாகிவிட்டன. ஆகவேதான் எதையும் செய்யவும் துணிந்துவிட்டனர். இரக்கம் இல்லா அரக்க குணமும் குடி கொண்டுவிட்டது.
ஆசைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் நலம் தரும் வாழ்க்கை அமையும் என்பதே உண்மை.