
என் தோழி சொல்வார் அடிக்கடி நான் கடவுளிடம் கஷ்டமே கொடுக்காதே என்று பிரார்த்தனை செய்யமாட்டேன். அதற்குப் பதிலாக எந்த கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றலை, மன தைரியத்தை எனக்கு வழங்கு என்றுதான் பிரார்த்திப்பேன் என்று கூறுவார்.
அவர் அப்படி கூறுவதுபோல எப்பொழுதும் ஏதாவது ஒரு சங்கடமான சூழ்நிலை அவருக்கு வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் நாளாக ஆக எல்லாவற்றையுமே ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
அதோடு நின்றுவிடாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லையா? சட்டென்று அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்ப்பது, தன்னால் முடிந்த உதவியை செய்து கொடுப்பது, ஒரு முருங்கை கீரை சமைத்தால் கூட அந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் அதை எடுத்துக்கொண்டு போய் கொடுப்பார். இப்படி அவரின் இந்த இயல்பை அனைவருமே விரும்புவார்கள்.
கடந்துபோன எந்த விஷயத்தை பற்றியும் வெளிப்படுத்தி பேசவே மாட்டார். அதேபோல் அவர்கள் வீட்டில் உள்ள பிரச்னைகளையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் மாட்டார் .அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தவர் களுக்குத்தான் அவரின் கஷ்டம் என்ன என்பது தெரியும்.
அவருக்குத் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவன் எப்பொழுதும் படுத்த நிலையிலேதான் இருப்பான். மூளை செயலிழந்த ஒரு பையன் அவன். ஆதலால் அவனால் எது ஒன்றையும் செய்துகொள்ள முடியாது. எல்லாமே என் தோழிதான் செய்ய வேண்டும். அவனுக்கு பேச்சும் வராது. ஆதலால், எந்த வேலைக்காரர்களையும் அவனுக்கான உதவிகளை செய்ய என் தோழி அனுமதிப்பதில்லை.
எல்லாமே அவர்தான் செய்வார். அப்படி செய்யும் பொழுதும் அலுப்பு சலிப்பு இல்லாமல் தொடர்ந்து உழைக்கிறோமே என்ற மன வருத்தம் கொள்ளாமல் எப்பொழுதும் இன் முகத்துடனேயே இருப்பதுதான் அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் அடையும் வியப்பு.
அதோட இல்லாமல் அவரின் மாமியார் மாமனார் எப்பொழுதும் ஏதாவது ஒரு நோய்வாய்பட்ட நிலையில் இருப்பார்கள். இதனால் இரண்டாவது குழந்தையே வேண்டாம் என்று விட்டுவிட்டார். அவர்களுக்கும் பணிவிடை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் என்று எப்பொழுதுமே ஏதாவது ஒரு நோயிலக சிக்கித் தவிப்பார்கள்.
ஆதலால் பம்பரமாக சுழல வேண்டிய சூழ்நிலை அவருக்கு. சில நேரங்களில் என் தோழி படும் பாட்டை பார்த்துவிட்டு அவரின் மாமியாரும், மாமனாரும் கண்ணீர் மல்க நன்றி கூறி கையெடுத்துக்கூட அந்த பெண்ணை கும்பிடுவது உண்டு. இவர்கள் காட்டும் இந்த நன்றி பெருக்கு என் தோழியை இன்னும் உற்சாகத்துடன் சுழல வைக்கும்.
ஆனால் எனக்குள்ளும் இப்படி ஒரு சவாலை ஏற்று சமாளிக்கும் திறன் இருக்கும் என்பது திருமணத்திற்கு முன்பு வரை தெரியாது. சூழ்நிலை என்று வந்த பிறகுதான் இவற்றையெல்லாம் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்.
ஆதலால் சவால்களே இல்லாத வாழ்க்கையில் திறமை என்பது வெளிப்பட வாய்ப்பே இல்லை. சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறும்போதுதான் முனைப்பு, மாறுபட்டுச் சிந்தித்தல், பயன்பாடு சார்ந்த அணுகுமுறை, வாழ்வதன் அர்த்தம் ஆகியவை வெளிப்படுகின்றன.
ஆதலால் எல்லோருமே சவால்களை வரவேற்று எதிர்கொண்டு வெற்றி பெற்று வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்வதற்கு முனைய வேண்டும். அதில் தான் வாழ்க்கையின் அர்த்தமே அடங்கியுள்ளது.