வெற்றிக்கு வழிவகுக்கும் ஆழ்ந்த நம்பிக்கை!
நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் இருக்கும் ஒருவர் வெற்றியைப்பற்றி அஞ்சவேண்டியதே இல்லை. அதுவே அவரைத்தேடி வரும். அதோடு எப்பொழுதும் புன்னகையுடன் 'ஜெயமுண்டு பயமில்லை' என்று திட நம்பிக்கையுடனேயே இருங்கள். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
ஆமையை யாராவது தொட்டாலும் சரி, ஏதாவது ஆபத்து வரும் என்று அது கருதினாலும் சரி, உடனே தன் தலையை உள்ளிழுத்துக் கொண்டு இறந்துபோன பிணம் போல் பாசாங்கும் செய்யும்.
ஆனால் அதேசமயத்தில் ஒரு தவளையைத் தொட்டுப் பார்த்தால் உடனே துள்ளிக்குதித்து ஓடும். அதோடு நில்லாமல் மீண்டும் குதித்து சென்று கொண்டேயிருக்கும். தவளையைப் போல், ஆசையால் துள்ளிக்குதிக்க முடியாதுதான் இருந்தாலும் செத்த பிணமாக ஆகவேண்டாம். அதே மாதிரிதான் பலர் வாழ்க்கையில் ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் 'ஐயோ' என்று தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்.
அந்த வருடம் மழையில்லை என்றாலோ விளைச்சல் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுவிட்டது என்றாலோ உடனே ஆமையாகிவிடுவார்கள். ஆனால் சிலரோ கேணித் தண்ணீரை இறைத்து கொஞ்சமேனும் பயிரிட முயலுவார்கள். பயிரில் இறங்கிய பூச்சிகளை அழிக்க மருந்தைத் தேடிச்செல்வார்கள். அரைநிமிடம் கூட சும்மாயிருக்க மாட்டார்கள். இவர்கள் தவளையை போன்றவர்கள்.
வளமான வாழ்வு பெற, வாழ்க்கையில் முன்னேற்றமடைய நமக்கு ஆசையும், ஆர்வமும் எப்பொழுதும் வரவேண்டும். அதுவே மனோ வலிமையை எழுப்பும். ஆனால் அளவுக்கு மீறிய ஆசைகளை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
நடைமுறையில், நமது ஆசைகள் கட்டுப்படுத்தப் பட்டால், அவை அவசியம் நமக்கு அடங்கியே நடக்கும். நல்ல வேலைக்காரனைப் போல் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால் சக்திக்கு மீறிய ஆசையாக அமைந்துவிட்டாலோ நம்மை அடக்கி நடத்திக் கொடுமைப்படுத்தும். கெட்ட எஜமானாக மாறிவிடும்.
ஆசைகளை வளர்த்துக் கொள்வதிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அறிவுப் பெருக்கம் ஏற்பட ஏற்பட அதற்கேற்றாற போல் நமக்கு மனோவலிமை உண்டாகும். எந்தக் காரியத்தையும் எளிதில் தீர்மானிக்கக் கூடிய சக்தி ஏற்பட்டு வடும். பல காரியங்களில் ஈடுபட்டோ, அல்லது அவற்றைக் கற்றுத் தெரிந்து கொண்டோ, பல மக்களுடன் பழகியோ, பல அறிவு நூல்களைப் படித்தோ தவறாமல் பொது அறிவைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படிப் பலவிதக் காரியங்களில் ஈடுபடும் பொழுது, உடனுக்குடன் இது கெட்டது இது நல்லது என்று இனம் பிரித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் மனத்தில் ஊற்றெடுத்து அவற்றில் வெற்றியும் காணலாம்.
மனோவலிமை உள்ள இடத்திலேயே பகுத்தறிவு பளிச்சிடும். அளவான ஆசையே ஆனந்தம் தரும். ஆசையைக்கூடக் கட்டுப்படுத்தி வாழும் போதுதான் அமைதி வந்து தவழுகிறது. ஆசைக்கு அளவில்லை என்று கூறுவதுகூடத் தவறு. ஆசைக்கும் அளவு உண்டு என்பதே சரியாகும்.

