

மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையான, நோ்மறை, ஆற்றல் கொண்ட எத்தனையோ விஷயங்கள் அடங்கி உள்ளன. அதேபோல எதிா்மறையான சங்கதிகளும் இருக்கின்றன. நமது மனதிற்கு நல்லது எனத்தோன்றுவது சிலருக்கு பாதகமாகக்கூட அமைந்து விடுவதுண்டு. தனது சொல்லும், செயலுமே நியாயமானது என தேவையில்லாத பிடிவாதங்களும் பலவகையில் எதிாியாக மாறிவிடுவதும் உண்டு. அவைகளை நாம் சரிபாா்த்து திருத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக நம்மிடம் கூடாநட்பாக வலம் வரும் தற்பெருமை நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் வளரவிடுவது எது எனப்பாா்த்தால் நம்மிடம் இருக்கும் தற்பெருமையாகும். இதனில் அந்த போதையிலிருந்து நாம் மெல்ல மெல்ல விலகவேண்டும்.
மது அருந்தியவன் பேசும் பேச்சு மற்றும் அவனது நிலைபாடுகளைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த தற்பெருமை கொண்ட நபர்களின் பேச்சை கேட்கவே முடியாது.
அவர்களது தற்பெருமை போதையானது தெளியவே தெளியாது. நான் அதைச்செய்தேன், இதைச்செய்தேன், நான் இல்லை என்றால் அந்த காாியமே நடந்திருக்காது, என்னால்தான் முடியும், எனது மகள் திருமணத்தை எப்படி நடத்தினேன் பாா்த்தீா்களா, என் பையனை என் வகையறாவில் யாருமே படிக்க வைக்க முடியாத அளவிற்கு படிக்க வைத்துள்ளேன் தொியுமா, என அடுத்தவர் முகம் சுளிக்கும் வகையில் கருத்து கந்தசாமியாக பேசுவதை குறைத்து, தற்பெருமை போதையிலிருந்து வெளியே வரவேண்டும். அதுதான் நமக்கு சாதகமான கிரகப் பெயர்ச்சியாகும்.
எப்போது நாம் நமது பேச்சைக்குறைத்து செயலில் இறங்குகிறோமோ அப்போதுதான் நமது வெற்றி எனும் வாகனத்தை சரிவர இயக்க இயலும். அதேபோல தன்னம்பிக்கை, மனச்சோா்வு, தாழ்வுமனப்பான்மையை அறவே விரட்டிவிடுவதும் நல்லது.
ஒரு விதையானது தடம்மாறி, கைதவறி கீழே விழுந்தாலும் எப்படியோ முளைத்துவிடுகிறதே! அதேபோல வாழ்க்கையில் தடம்மாறி விழுந்த நமக்கு துள்ளி எழமுடியாதா? முடியுமே, நம்மால் முடியும். உன்னால் முடியும் தம்பி தம்பி என்ற பாடல் வாிகளைப்போல நாம் செயல்பட்டு பேச்சைக் குறைத்துக் கொண்டு தன்னம்பிக்கை விதையை காலத்தே விதைத்தால் பருவத்தே அறுவடை செய்யலாமே! சமுதாயத்தில் மதிப்பு கூடுமே!
அதன் சூட்சமம் தொிந்து செயல்பட்டால் வெற்றி நமது பக்கம் தானாகவே தேடிவரும், எனவே பேச்சைக்குக்குறைத்து செயலில் ஈடுபடுவதே நல்லதாகும்.
இந்த வாயால் வடைசுடுதல், மணலை கயிறாக திாித்தல், போன்ற தவறான விதையை நடவு செய்யாதீா்கள். நாம் நமது பேச்சைக்குறைத்து செயலில் ஈடுபட்டு முயற்சி எனும் நிலத்தில் தன்னம்பிக்கை எனும் விதையை நட்டு, நோ்மறை சிந்தனை எனும் நல்ல எண்ணம் கொண்ட நன்நீரை பாய்ச்சி, வளர்ந்து வரும் வாழ்க்கைப்பயிாில் தேவையில்லாமல் பயிராகி வரும் சோம்பல், தற்பெருமை, வெட்டிப்பேச்சு, அளவுக்கு மீறிய அகம்பாவம், போன்ற களைகளை அகற்றிவிட்டு உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை எனும் மருந்தை தெளித்து வந்தாலே வெற்றி எனும் பயிா் நன்கு விளைந்து சமுதாயத்தில் மரியாதை, பண்பாடு எனும் அமோக விளைச்சலாக நமக்கு கிடைக்குமே!
ஏன் நாமும் முயற்சி செய்யக்கூடாது..? செய்துதான் பாருங்களேன் அன்பர்களே!