
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமானால் முதலில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் கவனத்தை திசை திருப்பாமல் உள்நோக்கி செலுத்த வேண்டியது அவசியம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அதற்கு மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் கொள்வது மிகவும் அவசியம். சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பெரிய விஷயங்களை நம்மால் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கும். குறிப்பாக ஒரு வேலையை எடுத்துக் கொள்ளும்பொழுது அதன் ஒவ்வொரு படியிலும் அதாவது ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்த அதனை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
சிறிய வேலையாக இருந்தாலும் கவனச்சிதறல் நேராமல் பார்த்துக் கொள்வது வேலையை சிறப்பாக முடிக்க உதவும். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது நம் திறமைகளை மேம்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற உதவும்.
நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனிப்பதன் மூலம் நம்மால் சிறிய விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதனை தினமும் பயிற்சி செய்தால் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும், மன உறுதியும், சவாலான காலங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், மீள் தன்மையையும் அளிக்கும். அத்துடன் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் உதவும். சின்ன தலையசைப்பு, அன்பான வார்த்தை, ஒரு சிறு புன்னகை போன்றவை மற்றவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும். சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது சுயவிழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சிறந்த உறுதுணையாக இருக்கும்.
சிறு சிறு விஷயங்கள்தான் வாழ்வில் நமக்கு ஒரு வளமான மற்றும் நிறைவான அனுபவத்தை உருவாக்கும். இது நம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கவும் வழிவகுக்கும். வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சிறிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சிறு விஷயங்கள்தான் வாழ்க்கையை உருவாக்குகின்றன. இவைதான் நம்மை தொடர்ந்து வழி நடத்துகின்றன. எனவே சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது ஒரு பழக்கமாக மாறும் பொழுது பெரிய விஷயங்களில் நம்மால் எளிதில் கவனம் செலுத்த முடியும்.
ஒவ்வொரு நாளும் நாம் எண்ணற்ற சிறிய விஷயங்களை சந்திக்கிறோம். ஆனால் அவற்றில் கவனம் செலுத்த தவறி விடுகிறோம். உண்மையில் அவை தான் நம் விருப்பு வெறுப்புகளையும், பலம் பலவீனங்களையும், தேவைகளையும் வெளிப்படுத்துகின்றன.
அதில் கவனம் செலுத்தினால் நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும் நிறைய கற்றுக் கொள்ளலாம். நாம் வழக்கமாக கவனிக்காமல் விடக்கூடிய விஷயங்களை பாராட்ட ஒரு கணம் ஒதுக்குவது, நமக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தருவதுடன் நம்மை உயிர்ப்புடனும் வைத்திருக்க உதவுகிறது.