
எல்லா தேவதைகளும் தமக்குள் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது. உலகில் வலிமையானது எது என்பது தான் கேள்வி. ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொன்றை வலிமையானதாகச் சொல்லவே அவர்களுக்குள் பலத்த விவாதம் எழுந்தது. முடிவு எட்டவில்லை. அனைத்து தேவதைகளும், ‘நம்மைப் படைத்த இறைவனையே கேட்டு விடுவோம்’ என்ற முடிவுக்கு கடைசியில் வந்தன.
அனைத்து தேவதைகளும் இறைவனைச் சந்தித்து தங்கள் கேள்வியைக் கேட்டன. “கடவுளே! உலகில் பாறையை விட வலிமையானது ஏதாவது உண்டா?” கடவுள் அவர்கள் கேட்டதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் கூற ஆரம்பித்தார். “ஏன் இல்லை? பாறையை இரும்பினால் உடைக்கலாமே!” “அப்படியானால் இரும்பையே வலிமையானது என்று சொல்லலாமா?”
“இரும்பைத் தீயில் போட்டால் அது உருகி விடுகிறதே!”
“ஆக, தீயே வலிமையானது என்று சொல்லி விடலாமா?”
“கொழுந்து விட்டு எரியும் தீயைக் கூட நீர் அணைத்து விடுகிறதே!”
“அட, அப்படியானால் நீர் தான் வலிமையானது என்ற முடிவுக்கு வந்து விடலாமா?”
“நீரின் போக்கை நினைத்தபடி காற்று மாற்றுகிறதே. கடலில் நீரை அலையாக அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது. ஏன் நீரைப் பொழியும் மேகத்தைக் கூட அது கலைக்கிறது; சேர்க்கிறதே!”
“அப்படியானால் காற்றை விட வலிமையானது ஏதாவது உண்டா?”
“உண்டு. அன்பான இதயம் தான் உலகிலேயே வலிமையானது. வலது கை கொடுப்பதை இடது கைக்கும் கூடத் தெரியாதபடி அன்பான ஒரு இதயம் கொடுக்கிறது. அதுவே உலகில் வலிமையானது!” தேவதைகள் வலிமையானது எது என்பதைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் கலைந்து சென்றன.
இந்தக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். நியூ ஹோப் கம்யூனிகேஷன்ஸ் (NEW HOPE COMMUNICATIONS) என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டக் கிரீன் (DOUG GREENE) தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு மூன்று கொள்கைகளை முன் வைத்தார்.
அன்பாயிரு! அன்பாயிரு!! அன்பாயிரு!!! (BE KIND! BE KIND!! BE KIND!!!).
அவரது இந்த மூன்று கொள்கைகளைக் கேட்ட பணியாளர்கள் அன்பாய் இருக்க ஆரம்பித்தார்கள்! ஆனால், தங்கள் எஜமானரைத் திருப்திப்படுத்த நேர்மையற்ற வழிகளையும் அவர்கள் கடைப்பிடித்து தாங்கள் 'அன்பாய் இருப்பதை' நிரூபிக்க முயன்றார்கள்.
இதைப் பார்த்த அவர் தனது மூன்று கொள்கைகளைச் சற்று மாற்றினார் இப்படி:
அன்பாயிரு; நேர்மையாயிரு; அன்பாயிரு.
(BE KIND! BE HONEST!! BE KIND!!!)
கடைசியில் தனது மூன்று கொள்கைகளை முத்தாய்ப்பாக இப்படி மாற்றினார்:
அன்பாயிரு: நேர்மையாயிரு; வேடிக்கையும் கொள்.
BE KIND! BE HONEST!! HAVE FUN!!!
உலகில் நமக்கு அறிமுகம் ஆகாதவர்களிடம் கூட எப்படி அன்பாய் நடந்து கொள்ள முடியும் என்பதைத் தெரிவிக்கும் நூற்றுக் கணக்கான நிஜ சம்பவங்களை இணையதளத்தில் பார்க்கலாம். அதிசயிக்க வைக்கும் அந்த அன்பார்ந்த நெஞ்சங்களால் தான் உலகமே!