

பொதுவாக தங்களுடைய ஏழ்மை நிலைக்கு வறுமையில் வாழ்ந்து வரும் அனைவரும் விதியைதான் குறை கூறுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் வாழ்க்கை எனக்கு கிடைத்து விட்டது. விதி எனக்கு சதி செய்துவிட்டது என்று கூறி, எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் தொடர்ந்து ஏழ்மையிலேயே வாழ்ந்து தங்களுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நம் முன்னோர்கள் சம்பாதித்துவிட்டு சென்ற சொத்தில் தானம் செய்பவனுக்கு எந்த விதமான புண்ணியமும் கிடைக்கப் போவதில்லை. மேலும் அந்த சொத்தை கொண்டு ஆடம்பரமாக வாழ்வதும் போற்றத் தகுந்த செயல் அல்ல.
தங்களுடைய சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையான மிகச்சாதாரண குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறார்கள்.
உலகம் போற்றும் மகாகவிஞரான ஷேக்ஸ்பியரின் தந்தை கம்பளி, ரோமம் போன்றவற்றை விற்கும் சாதாரண வியாபாரியாகதான் வாழ்ந்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த டியோகினிளிடியன் என்பவர் தன்னுடைய முயற்சியால் ஒரு நாட்டின் அரசனாக தன்னை உயர்த்திக்கொண்டார்.
உலகப் புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கனுடைய தந்தை விவசாயியாகவும், தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். மேலும் ஆட்ரியன் என்பவருடைய தந்தை ஒரு பிச்சைக்காரனாக இருந்தார்.
புகழ்பெற்ற கார்டினல் ஆண்டோ நெல்லி என்பவரின் தந்தை இத்தாலி நாட்டில் கொள்ளைக்காரனாக இருந்தார். ஒரு புது கண்டத்தையே கண்டுபிடிக்க காரணமாய் இருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர் ஒரு சாதாரண நெசவாளியின் மகனாக பிறந்தவர்தான். பென்ஃ பிராங்கிளின் என்பவருடைய தந்தை சோப் செய்யும் தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மோசமான நிலையிலிருந்த பலர் மிகப்பெரிய மனிதர்களாக தங்களுடைய முயற்சியால் உலகப் பெயர் பெற்றதோடு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். பல புதிய அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த அறிஞர்களின் பலர் ஏழ்மை நிலையில் மிகவும் அவதிப்பட்டவர்கள்தான்.
ஆகவே இதை படிக்கும் இந்த வினாடியில் இருந்து தங்களுடைய விதியை பிறந்த சூழ்நிலையையும் குறை கூறுவதை விட்டுவிட்டு வீறு கொண்டு எழுந்து உழைப்பின் மூலம் உங்களுடைய எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.
ஏழ்மையில் பிறந்து வளர்ந்து படிக்க வசதியின்றி தொழிலாளியாக வேலையை தொடங்கி தன் சொந்த முயற்சியால் பல கோடிகளுக்கு அதிபதியான ஆண்ட்ரூ கார்னீஜி, "தங்களுடைய விதியை குறை கூறிக்கொண்டு காலம் கழிப்பவர்களுக்கு அவர்கள் வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கையில் இருந்து விமோசனமே கிடைக்காது" என்று கூறுகிறார்.
ஆகவே விதியை மதியால் வெல்லலாம் அதற்கான வழியை கண்டுபிடித்து செல்ல முயலுங்கள்.