

இன்றைய 'இன்டர்நெட்' காலத்தில் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் வெற்றியும் செல்வமும் வராது. அந்த உழைப்பைச் சரியான திசையில் செலுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நேரத்தை விற்றுப் பணம் சம்பாதிப்பதை விட, அறிவைப் பயன்படுத்தி உயர வேண்டிய காலம் இது. கடின உழைப்பைத்தாண்டி, புத்திசாலித்தனமாக முன்னேறுவதற்கான எளிய 4 வழிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
(Naval Ravikant) நாவல் ரவிகாந்த்தின் வெற்றிக்கான 4 மந்திரங்கள்:
நாவல் ரவிகாந்த் நவீன யுகத்தின் தத்துவவாதி மற்றும் முதலீட்டாளர்; புத்திசாலித்தனமான உழைப்பு, தனித்துவமான அறிவு மற்றும் மன அமைதி மூலம் செல்வம் சேர்ப்பதை உலகுக்குக் கற்பிப்பவர். அவர் சொல்லும் வெற்றிக்கான 4 மந்திரங்கள்.
1. உழைப்பு ஒரு கருவி மட்டுமே, அதுவே இலக்கல்ல!
“அதிக நேரம் உழைத்தால் அதிகப் பணம் கிடைக்கும்." என்பது தவறான கூற்று. உண்மையில், முடிவெடுக்கும் திறன்தான் செல்வத்தை ஈர்க்கிறது. ஒரு மாலுமி கப்பலை 24 மணிநேரமும் ஓட்டலாம், ஆனால் திசையைத் தவறாகத் தேர்ந்தெடுத்தால் அந்த உழைப்பு வீண். உங்கள் உழைப்பைவிட, உங்கள் தேடல் மிக முக்கியமானது. எப்படி ஸ்மார்ட்டாக உழைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அதிக நேரம் செலவிடுங்கள்.
2. உங்களுக்கென ஒரு "டிஜிட்டல் ராணுவத்தை" உருவாக்குங்கள்:
பழைய காலத்தில் செல்வம் ஈட்ட ஆட்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் இன்று, நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்காக வேலை செய்ய ஒரு ராணுவத்தை உருவாக்க முடியும். அதுதான் Media மற்றும் Code. நீங்கள் எழுதும் ஒரு கட்டுரை, நீங்கள் பதிவு செய்யும் ஒரு வீடியோ, நீங்கள் உருவாக்கும் ஒரு மென்பொருள், இவை அனைத்தும் உங்களுக்காக 24/7 உழைக்கும் ஊழியர்கள். இவர்களுக்குச் சம்பளம் தேவையில்லை, ஓய்வு தேவையில்லை. ஒருமுறை நீங்கள் உருவாக்கும் தளம், பல கோடி மக்களுக்கு உங்களைச் சென்றடையச் செய்யும்.
3. நீங்கள் நீங்களாக இருங்கள்:
உலகில் மற்றவர்களைப் போல மாற முயற்சிப்பவர் களுக்குத்தான் போட்டி அதிகம். ஆனால், உங்களைப் போல மாற உலகில் ஒருவரால் கூட முடியாது. உங்கள் தனித்துவமான ஆர்வம் எதுவோ, அதைத் தொழிலாக மாற்றுங்கள். மற்றவர்கள் எதைக் கடினமான வேலையாகப் பார்க்கிறார்களோ, அதை நீங்கள் விளையாட்டாகச் செய்யத் தொடங்கும்போது, அங்கே போட்டி மறைந்துவிடுகிறது. உங்கள் இயல்பான குணமே உங்களை உலகின் விலையுயர்ந்த மனிதராக மாற்றும்.
4. பொறுமையே வெற்றியின் ரகசியம்:
செல்வம் என்பது ஒரே நாளில் விளையும் காளான் அல்ல; அது பல ஆண்டுகள் வளரும் ஆலமரம். உறவுகள், அறிவு, பணம் என எதிலும் 'கூட்டு வட்டி' வேலை செய்ய கால அவகாசம் கொடுங்கள். பாதியிலேயே பின்வாங்குபவர் களுக்குக் கடைசி நேரத்தில் கிடைக்கும் மிகப்பெரிய பலன் கிடைப்பதில்லை. சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்றால், அங்கேயே நிலைத்து நில்லுங்கள். காலப்போக்கில் உங்கள் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
நேரத்தை மதியுங்கள்: உங்கள் நேரத்தை மலிவான வேலைகளுக்கு விற்காதீர்கள். அந்த நேரத்தில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
பதற்றத்தைக் குறையுங்கள்: அமைதியான மனம் மட்டுமே தெளிவான முடிவுகளை எடுக்கும்.
சுய அதிகாரம்: உங்கள் தோல்விகளுக்கும் வெற்றி களுக்கும் நீங்களே பொறுப்பேற்கத் துணியுங்கள். உங்கள் பெயரில் ஒரு பிராண்டை உருவாக்குங்கள்.
வாழ்க்கை என்பது வெறும் போராட்டமல்ல, அது ஒரு விளையாட்டு. விதிகளையும் கருவிகளையும் சரியாகப் புரிந்துகொண்டால், நீங்கள் கடினமாக உழைக்கத் தேவையில்லை; புத்திசாலித்தனமாக விளையாடினால் போதும். உங்களை ஒரு கூலியாளாகப் பார்க்காதீர்கள், உங்களை ஒரு முதலீடாகப் பாருங்கள்! வெற்றி உங்களைத் தேடிவரும்.