

மனித வாழ்க்கையில்தான் எத்தனை விஷயங்கள் அடங்கி உள்ளன. அது ஒரு பொிய வட்டம், அதில் நாம் ஓடித்தான் ஆகவேண்டும். வட்டத்தை பூா்த்திசெய்ய முடியாது. அது ஒரு வெள்ளப்பெருக்கு, அதை அணைபோட்டு தடுக்க இயலாது.
அது ஒரு பரந்து விாிந்த கடல். அதில் ஓடத்தில் பயணித்துதான் ஆகவேண்டும். வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. போராடிப் பெறுவதுதான் வெற்றி. போராடாமல் எதுவும் கிடைக்காது. அப்படி போராடாமல் கிடைப்பது எதுவும் நிலைக்காது.
நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் மனிதன் வாழ்ந்து வருகிறான். கனவு மெய்ப்படவேண்டும், நினைத்த வாழ்க்கை அமைந்துவிட்டதே என்ற சந்தோஷத்தில் சிலர்!
நினைத்த வாழ்வு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் சிலர்!
இப்படித்தான் பலவித சிந்தனா சக்தியுடன் மெல்ல மெல்ல வலம் வந்து சுழல்கிறது காலச்சக்கரம். தனக்கான வாழ்க்கை கிடைக்காத விரக்தி மற்றும் வருத்தத்தில் சிலர். என்ன இப்படி எதிா்மறை வாழ்க்கைதானா என்ற நிலைபாட்டில் சிலர். எப்படியாவது வாழ்ந்துவிடவேண்டும் என்ற நினைப்புடன் சிலர். அது சிறப்பானதல்ல என நினைப்பவர் சிலர். இதனிடையில் எப்படியாவது வாழலாம் என்ற கனவுகளோடு சிலர். எதற்காக வாழவேண்டும் என்ற விரக்தியில் சிலர். ஏற்றமோ இறக்கமோ வாழ்ந்துதான் பாா்த்து விடலாமே என்ற சிந்தனையில் சிலர். இப்படி எத்தனை எத்தனை மாறுபட்ட எண்ணங்கள்,அவைகள்தான் வாழ்வெனும் தேரோட்டத்தை நகர்த்துகின்றன.
இவை அத்தனை செயல்பாடுகளையும் ஆட்டி வைப்பவர் இறைவன் ஒருவனே! பலர் கூடித்தான் தேரை இழுக்கவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் அனுபவிக்க கொடுத்து வைப்பதும் இல்லை.
இப்படி ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு தருணத்தில் முகமூடியோடுதான் வாழவேண்டிய சூழல்.
சில விஷயங்களில் நாம் எடுத்து வைக்கும் அடிச்சுவடுகளே காரணமாக அமைந்துவிடுகிறது. பொதுவாக ஒரு மூட்டை விதை நெல்லானது நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது, சரியான வகையில் ஈரப்பதத்தில் வளர்ந்து நாற்றாகி அதை பறித்து நடவு நட்டுகளை எடுத்து காலத்தில் உரம் போட்டு உரிய முறையில் நீா்ப்பாசணம் கொடுத்து பயிராகி வளர்ந்து நெல்மணிகளாய் நமது கையில் கிடைக்கிறது. அது நமது கைகளுக்கு நல்ல விளைச்சலாய் கையில் கிடைக்கும் வரை எத்தனை இயற்கை இடர்பாடுகள்.
அதுபோலத்தான் நல்ல எண்ணம் நல்ல சிந்தனை நல்ல ஒழுக்கம் நல்ல பண்பாடு ஓயாத உழைப்பு தர்ம சிந்தனை அதோடு கடவுள் வழிபாடு, இவைகளை கடைபிடித்து மனிதநேயம் காத்து வாழ்ந்து வந்தாலே நமக்கானதை இறைவன் கட்டாயம் கொடுத்துவிடுவாா்.
நம்பிக்கைதான் வாழ்க்கை அது இல்லாவிடில், அதன் அளவு குறைந்தால் வருவது தோல்விதான் என்ற சிந்தனையோடு எதிா் நீச்சல் போடுங்கள் வாழ்க்கை ஒளிவிளக்காக மாறும்!