

வாழ்க்கையில் எப்போதும் இயல்பாக இருப்பதற்கு முயன்று பாருங்கள். பல நன்மைகள் உங்களைச் சுற்றி வரும். உதாரணமாக மாம்பழம் இயல்பாக பழுத்து, நாம் அதை சாப்பிடும்போது உள்ள தன்மைக்கும், இரசாயன கல்லில் பழுக்க வைத்து சாப்பிட்டால் வரும் தன்னைக்கும் எப்படி மாற்றம் இருக்கிறது என்பதை நினைத்து பாருங்கள். உண்மை புரியும்.
வாழ்க்கையில் தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று நினைப்பது தவறு. மேலும் அதைவிட தவறு, அடுத்தவர்கள் நன்மை பற்றிய அளவீடு செய்ய இடம் கொடுப்பது. நம்முடைய திறமையும் முயற்சியும் நம் மதிப்பீடு மட்டுமே தீர்மானிக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை எந்த வடிவத்திற்குள் வாழ்ந்தாலும் நாமே அதற்கான மையப்புள்ளியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் யாவரும் மையப்புள்ளியாக இருந்து, நம்மை கணக்கு போடும் ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழப் பிறந்தவன் அல்ல நீங்கள் என்பதை உணர்ந்து, தனித்துவம் வாய்ந்த மனிதராக வாழப்பழகுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் தோல்வியில் ஒரு முறை அல்ல, பல முறை விழுந்தபோதும் எழுந்து நின்று, நான் எதற்கும் சளைச்சவன் அல்ல என்று வீரமுடன் களமாடினால், நீங்களே வெற்றி பெறுவதற்கு தகுதியானவன் என்பதை புரிந்துகொள்ளுங்கள். என்றும் கர்வம் கொள்ளாமல், உன்னையே உயர்ந்தவனாக நினைத்து, மனத் தூய்மையுடன் வாழ்ந்து காட்டுங்கள்.
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் வான் உயர்ந்து கட்டிடங்கள் கட்டி, மிகப் பிரம்மாண்டமாக தெரிந்தாலும், அது நம் பார்வைக்கு விருந்து படைக்குமே தவிர, அதுவே தரமான அளவுகோலாக இருக்க முடியாது.
அங்கு பணியாற்றும் தகுதி மிக்க ஆசிரியர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப தரம் போன்றவைகள்தான் அந்த நிறுவனத்திற்கு வலுசேர்க்கும். அங்கு தரமான மாணவச் செல்வங்கள் உருவாகும் தகுதியை உறுதி செய்யும்.
அதேபோல்தான் வாழ்க்கை. புறத்தோற்றம் செப்பனிடும்போது அழகைக் கூட்டிக்காட்டும். அது மட்டுமல்ல வாழ்க்கைக்கான அளவுகோல். அகத்தில் ஒவ்வொரு இடமும் நேர்மறை எண்ணங்களால் செதுக்கப்பட்டு, அறிவு சார்ந்து செயல்களுக்கு புத்துயிர் ஊற்றும் மனதோடு வாழ்த்து காட்டினால்தான் உயர்வும், உன்னதமும் உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்க்கையில் நாம் அனைவரும் நம்பிக்கையோடு வாழப் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தீப்பெட்டிக்கும் தீக்குச்சிகும் இடையே உரசல் ஏற்ப்பட்டதும் தீக்குச்சி வெளிச்சம் தருகிறது. அதேபோல் உங்களுடைய திறமையும், முயற்சியும், ஆற்றலும், மனவலிமை தரும் நம்பிக்கையோடு சேர்ந்து தடம் பதிக்கும்போதுதான் வெற்றியின் வெளிச்சம் உங்களுக்கு தெரியும்.
வாழ்க்கையில், நல்ல மாணவன் பரீட்சை எழுதிவிட்டு, ரிசல்ட் எப்படி வரும், அது எப்போது வரும் என்று யோசிக்கமாட்டான். அடுத்த நிலைக்கு எப்படி போகலாம் என்ற நேர்மறை எண்ணங்களோடு சிந்தனையில், இடைப்பட்ட காலத்தில் பயனுள்ளதாக மாற்றும் எதிர்காலம் பற்றி யோசிப்பான்.
மனிதனாக பிறப்பது அரிது, அதனினும் அரிது நல்ல மனிதனாக வாழ்வது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை பயணத்தை நல்ல எண்ணங்களோடும், செயல்களோடும் வடிவமைத்து, அதற்கேற்ப வாழ்ந்து, காட்டுங்கள். ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமே, சமூக ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் உந்துசக்தி. ஒவ்வொரு தனிமனித ஆற்றலே, சமூக வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்பதில் யாருக்கும் வேவ் வேறு சிந்தனை இல்லை என்பதை புரிந்துகொள்வோம்!