
"சிந்திப்பது ரொம்பவும் கடினமான வேலை, அதனால்தான் வெகுசிலர் மட்டுமே அதில் ஈடுபடுவது என்பார் ஹென்றி ஃபோர்டு.
கற்பனைக் காட்சியில் கருக்கொள்ளும் எண்ணங்கள், கவனத்தைக் கட்டுப்படுத்துவதில் வளர்ச்சி பெற்று, சரிநுட்பச் சிந்தனையில் மதிப்பீடு செய்யப்பட்டு, செயற்படுத்தப்படுகின்றன.
உங்கள் எண்ணங்கள் அல்லது கருத்துக்களை அறிவுக்கு ஏற்புடைய விதத்தில் மதிப்பிட்டு, சரியான சிந்தனையின் அடிப்படையில் உங்கள் குறிக்கோள்களை உருவாக்க வேண்டும். இல்லையேல் அவற்றை அடைவது சாத்தியமற்றதாகிவிடும்.
மிகவும் நுட்பமான சிந்தனை இருப்பது மூளையின் இடது பக்கத்தில், கற்பனையாகக் காண்பது வலதுபக்க மூளையின் வேலை.
உங்கள் சிந்தனையும் உள்ளுணர்வால் காண்கிற கற்பனைக் காட்சியும் சேர்ந்து உங்களுடைய பிரச்னைகளுக்கு தர்க்க ரீதியாய் தீர்வுகள் பெற உதவுகின்றன. வெற்றிக்கான திறவுகோல் அவ்விரண்டையும் நீங்கள் மிக நல்ல முறையில் இணைப்பதில் தான் இருக்கிறது. டாக்டர் ஜேம்ஸ் பாட்கின் கூறுவார், கற்பனைக்காட்சியும் சரிநுட்பச் சிந்தனையும் இணைந்த நிலையில்தான் புதிய எண்ணங்கள், புதிய உத்திகள் புகுத்தப் படுகின்றன என்று.
வர்த்தக ரீதியாக்கப்படுகிற ஒரு எண்ணம் அல்லது கருத்துதான் தொழிலில், வியாபாரத்தில் செய்யப்படுகிற புதுமை எனலாம். உங்களிடம் 50,000 க்கு மேற்பட்ட தகவல்கள் அத்துப்படியாக யிருந்தால் நீங்கள் புதிதாய் ஒன்றைத் துவங்க முடியும். புதுமை செய்ய முடியும் என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஹெர்பர்ட் சைமன் உங்களுடைய துறையில் 50,000 தகவல்களில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஆக்கபூர்வ சிந்தனையாளராகி விடலாம் என்பது அவருடைய கருத்து. பத்து ஆண்டுகள் போதும் 50,000 தகவல்களில் தேர்ச்சி பெறுவதற்கு என்கிறார் அவர்.
கற்பனைக்காட்சி நுட்பமான சிந்தனையில் இருந்து வேறுபடும். ஆர்வம் தூண்டப்பட்டால்தான் கற்பனையில் காண்பது சாத்தியம். தொழில் என்கிற போது அதுதான் நீங்கள் வேலை செய்வதற்கும், சிந்திப்பதற்கும், சுறசுறுப்பாய் இயங்குவதற்குமான உயிர்ச்சக்தி.
நீங்கள் கற்பனையில் கண்டதை அறிவுக்குப் பொருத்தமான விதத்தில் வெட்டியெடுத்து அதற்கு வடிவம் கொடுக்கலாம்.
நுட்பமான சிந்தனை என்பது ஒரு திறன் (ability) எது உண்மையானது, எது பொய்யானது, எது பொருத்தமானது என்று அடையாளங்கான அது உதவும்.
''பிரச்னை தோன்றுவதற்குமுன்பே அதை அறிய முடிவது சிந்தனை."
ஆற்றல் போர் நடத்த உதவும், ஆனால் நுண்ணறிவோ, போர் மூளக்கூடிய நிலைமைகளை முன்கூட்டியே பார்த்து அவற்றை விலக்கிவிடும்.
நீங்கள் வியாபார உலகில் இருந்தால், ஒரு புதிய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வீர்கள்? உடனே தொழில் நிர்வாகம் தொடர்பான புத்தகத்தை எடுத்துப் புரட்டுவீர்களா அல்லது தொழிலில் உங்களுக்குக் கூட்டாளியாக உள்ளவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வீர்களா? அறிவுக் கூர்மையும் விழிப்புணர்ச்சியும் உள்ளவர்கள் இரண்டில் பின் கூறப்பட்டதைத் தான் தேர்வு செய்வார்கள்.
ஆகவே நுட்பச் சிந்தனையை நுணுக்கமாக கையாளுங்கள்.