

ஆண்கள் இப்போது சேவிங் செய்து கொள்வதற்கு பல்வேறு வடிவங்களில் எளிமையான ரேசர்கள் வந்து விட்டதால் சேவிங் செய்ய ஒரு நிமிடம்தான் ஆகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சுவரில் கடினமான தோல்பட்டையை தொங்கவிட்டு சேவிங் செய்யும் கத்தியை கூர்மையாக்கிய பிறகே சேவிங் செய்து கொள்ள முடியும். இப்படி செய்வதால் நீண்ட நேரம் ஆவதோடு பல நேரங்களில் கன்னத்தில் ரத்தம் சிந்தவும் செய்ததால் பலர் தாடி வளர்த்திருந்தனர்.
கிங் காம்ப் ஜில்லட் என்ற தொழிலதிபர் இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க எண்ணினார். அதாவது சிலமுறை மட்டுமே சேவிங் செய்து ,தூக்கி எறியக் கூடிய விலை மலிவான மெல்லிய மற்றும் பயன்படுத்த எளிதான ரேசரை உருவாக்க வேண்டும் என கனவு கண்டார்.
இதைக்கேட்ட அனைவரும் சிரித்தனர். விஞ்ஞானிகளும் இரும்பை மெல்லியதாக ஆக்கி, பிளேடுகளை உருவாக்குவது சாத்தியம் இல்லை என கூறியதோடு, மலிவு விலை ரேசர்களை உருவாக்க முடியாது என நிதி கொடுக்க முதலீட்டாளர்களும் மறுத்து விட்டனர்.
தன்னுடைய முடிவில் பின்வாங்காத ஜில்லட் நான்கு ஆண்டுகள் யாருக்காகவும் காத்திருக்காமல் உழைத்து ஒரு ரேசரை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்தார். முதல் ஆண்டில் 51 ரேசர்கள் மட்டுமே விற்பனையானது.எல்லா ஆண்களும் பயன்படுத்தும் பொருள் நிச்சயம் பெரிய அளவில் விற்பனையாகும் என்ற நம்பிக்கையுடன் பெரிய அளவில் ஜில்லட் விளம்பரம் செய்ய அடுத்த ஆண்டு விற்பனை பல மடங்கு அதிகரித்தது.
ஜில்லட் ஆண்கள் சவரம் செய்வதில் உலகெங்கும் பெரும் புரட்சியை அவரது முயற்சியினால் ஏற்படுத்தினார் . ஆகவே நெருக்கடியான நேரங்களில் ஏதாவது அற்புதம் நம்மை வந்து காக்கும் என நிறைய பேர் எதிர் பார்க்கிறார்கள்.இதனால் அதுவரை அரை மனதோடு வேலை செய்வதால் அவர்களுடைய முயற்சி பலனடையாமல் போகிறது.
ஆனால் ஜில்லட் வாய்ப்புக்காக காத்திருக்காமல் தன் மீது கொண்ட நம்பிக்கையினால் ,பெயர் புகழ் பெற்றதோடு அதிக அளவில் சம்பாதித்து சரித்திரத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இல்லாமல் இன்றே மிகச்சிறந்த நாள் என்று நினைத்து செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். மேலும் இது போலவே ஒவ்வொரு நாளும் நினைத்து செயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால் எதிர்பார்த்ததைவிட அதிக பலன் பெறலாம்.