

ஒரு நல்ல நண்பர் என்பவர் ஒருவருடைய நலனில் அக்கறை கொண்டவராக இருப்பார். அவருக்கு எப்போதும் பக்க பலமாகவும் தேவைப்படும் நேரத்தில் உதவவும் செய்வார். நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது மற்றும் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அதே நேரத்தில் நமக்கு நாமே நல்ல நண்பனாக இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதற்கான வழிகளைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
1. சின்ன வெற்றி; பெரிய சந்தோஷம்;
உங்களுடைய சிறந்த நண்பர் உங்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவராக இருப்பார். வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் மிகவும் சந்தோஷப்படுவார். எனவே உங்களுடைய சின்ன சின்ன வெற்றியையும் சந்தோஷதமாக அனுபவியுங்கள். ஒரு நாள் பெரிய வெற்றியை கண்டிப்பாக நீங்கள் அடைவீர்கள். நிறைய அனுபவங்களும் வெற்றிகளும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
2. நம்பிக்கையை கொடுங்கள்;
எல்லாருடைய வாழ்விலும் கடினமான காலங்களும் பிரச்சனைகளும் இல்லாமல் இருக்காது; நம்முடைய முயற்சிகளில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து வெளியே வந்து நாம் சாதிப்போம் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்; தோற்கும் நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் மிக சுலபமாக ஆட்கொண்டு விடும். எனவே கடினமான நேரங்களில் எதிர்மறை எண்ணங்களின் பிடியில் சிக்காமல் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து முயற்சியை தொடருங்கள்.
3. உங்களுடன் மோதுவதை நிறுத்துங்கள்:
அடிக்கடி உங்களுடன் சண்டையிடும் அல்லது மோதும் ஒரு நபருடன் நீங்கள் நண்பராக இருக்க முடியாது. உங்களுடைய தோற்றத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். அது உங்களுக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம். அதற்காக ‘’நான் பார்க்க அழகாக இல்லை’’ என்று சொல்வதை நிறுத்துங்கள். ‘’இதை என்னால் செய்து முடிக்கும் அளவுக்கு எனக்கு மன வலிமை இல்லை’’ என்றும் சொல்லக்கூடாது. அதை விடுத்து உங்களை நீங்களே விரும்பத் தொடங்க வேண்டும். உங்களிடம் மிக மிகக் கருணையோடு நடந்துகொள்ளுங்கள்.
4. வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்:
வாழ்க்கையில் எல்லா நேரமும் எல்லாவற்றையும் சரியாக செய்ய முடியாது சிலர் பல தோல்விகளை சந்திக்கலாம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படியே ஏதாவது தவறு செய்தாலும் உங்களை நீங்களே மன்னித்துக் கொண்டு மீண்டும் அதை செய்யாமல் முன்னேறிச் செல்ல வேண்டும்.
5. கனவுகளை நிஜமாக்க உழைத்தல்;
உங்கள் உள் மனதில் சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் கொழுந்து விட்டு எரிவது உங்களுக்கு நன்றாக தெரியும். எடுக்க வேண்டிய முயற்சிகள், சந்திக்க வேண்டிய சவால்கள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். கனவுகளை நிஜமாக்க உங்களில் நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து உழையுங்கள்.
6. ஒப்பீடை தவிருங்கள்;
எப்போதும் ஒப்பீடு கூடாது, ஒப்பீடை தவிருங்கள். இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம். அதனால் எப்போதும் இன்னொருவருடன் நம்மை ஒப்பீடு செய்து கொள்ளவே கூடாது. இதனால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. நீங்கள் ஒரு தனி மனிதன். உங்களுக்கான தனிச்சிறப்புகள் உங்களுக்கு உண்டு.
7. உள் மனம் சொல்வதை கவனியுங்கள்;
ஒரு நல்ல நண்பன் நீங்கள் பேசும் வார்த்தைகளை பொறுமையாக செவி மடுப்பான். சரியான விதத்தில் புரிந்தும் கொள்வான். அப்போது நம் மனம் மிகவும் மகிழும். அதே போல உங்களுடைய உள் மன என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து கவனியுங்கள். இது சரி அல்லது தவறு என்று மனசு சொல்லும்போது அதன்படி நடங்கள். நம்முடைய எண்ணங்கள் நல்ல வழி காட்டும். எப்போதும் உங்களுக்கு நல்ல நண்பனாக இருங்கள்.
-எஸ். விஜயலட்சுமி