

சாதிக்க நினைப்பவர்களை அடிக்கடி வந்து சந்திப்பது தோல்விகள்தாம். நம் திறமைகளை வெளிக்கொண்டுவரக் கடினமாகப் போராடும்போது தோல்விகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும். (Motivational articles) ஆனால், நாம் தோல்விகளைக் கண்டு மனம் கலங்கிடக்கூடாது.
திறமையுள்ள பல இளைஞர்கள் சில தோல்விகள் எதிர்ப்பட்டதுமே துவண்டுபோய் விடுகிறார்கள். தங்கள் வெற்றிப்பாதையில் நிலை தடுமாறுகிறார்கள். தோல்வியைச் சந்திக்கத் முடியாதவர்களால் வெற்றியை ஒருபோதும் சந்திக்க முடியாது என்பதை நாம் உணரவேண்டும்.
இதுவரை சாதித்தவர்கள் அனைவரும் எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்துதான் வெற்றியின் வாயிலை அடைந்திருக்கிறார்கள். தோல்வியைக்கண்டு துவண்டிருந்தால் நிச்சயம் அவர்களால் வெற்றிபெற்றிருக்க இயலாது.
"சாதாரண மனிதர்களுக்குத் தோல்வி என்பது தடைக்கல். சாதனையாளருக்குத் தோல்வி என்பது படிக்கல்." என்கிறார் ஓர் அறிஞர்.
திறமையுள்ள ஒவ்வொருவரும் தோல்விகளோடு இன்பமாய்க் கை குலுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தோல்வி நேரிடும்போது கப்பல் கவிழ்ந்தாற்போல கன்னத்தில் கை வைத்துவிடக் கூடாது. அடுத்து இந்தத் தோல்லி வராமல் இருக்க நாம் எப்படிச் செயலாற்ற வேண்டும் என் சிந்திக்க வேண்டும்.
ஒரு தோல்வியினால் நம் திறமைகள் அவ்வளவுதான் என்று எண்ணி முடங்கிவிடக் கூடாது. அந்தத் தோல்வியின் அடுத்த கட்டம் வெற்றியாகக்கூட இருக்கலாம்.
சிலர் மிகக் கடினமாக உழைத்திருப்பார்கள். வெற்றி யடைந்து விடலாம் என்று மிகவும் நம்பியிருப்பார்கள். ஆனால், தோல்வி வந்ததுமே பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மனமுடைந்துபோய் திறமைகளை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சாதாரண மனிதர்களைப்போல இருந்துவிடுவார்கள்.
இப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவர்களால் எக்காலமும் வெற்றியடையவே முடியாது.
தோல்வி என்பது இயல்பானது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியைவிடத் தோல்விதான் நம்மை எழுச்சியடையச் செய்து விடுகிறது.
நாம் தோல்வியை அடித்து விரட்டத்தான் எண்ண வேண்டுமே தவிர அதைக்கண்டு கலங்கிவிடக் கூடாது
'விதை முளைக்க வேண்டுமானால் அது உமியை இழந்துதான் ஆக வேண்டும். ஊர்ந்து செல்லும் புழுக்கள் பறப்பதற்கு இறக்கையைச் சுமக்கச் சம்மதிக்க வேண்டும். நீ முன்னேறும்போது சில தியாகங்களைச் செய்துதான் தீரவேண்டும். நிமிர்ந்தவன் வளைந்தாலே அவனுக்கு வாசல் வழிவிடுகிறது."என்கிறார் சீனக் கவிஞர் ஆமிங்க்ஃபூ.
தோல்வி என்பது நம் வெற்றிக்குச் செலுத்தப்படும் காணிக்கை அவ்வளவுதான். தோல்விகள் என்பவை போதி மரங்கள். அதிலிருந்து உங்களுக்கு ஞானம் கிடைக்க வேண்டுமே தவிர இருக்கின்ற நம்பிக்கையையும் குலைத்து விடக்கூடாது.
தோல்விகள் என்பவை அற்பமானவை தோல்விகளை பெரிதாக நினைத்து மனம் நொந்தால் உங்களால் பெரிய செயல்களை சாதிக்க முடியாது என்பதனை மனதில்கொண்டு செயலாற்றி வெற்றி பெறுங்கள்.