

வாழ்க்கையில் ஏதோ ஒன்று ஒரு நேரம் நமக்கு தேவைப்படுவது, வேறொரு நேரம் அது நமக்கு தேவைப்படாது என்று ஆகிவிடும். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை நாம் வைத்துக்கொண்டு இருக்கும் வரை வாழ்க்கை நமக்கு போராட்டமாகத்தான் இருக்கும்.
வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு இரண்டாலும் ஏற்படுகிற தீமை என்பது, அதன் அடிப்படையில் நீங்கள் இவ்வுலகத்தை பார்க்கும் போது, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. அதனைக் கடந்து வாழும் வாழ்க்கையே முழுமையாக திருப்தி அடைந்து வாழும் வாழ்க்கை.
ஆனந்தம் என்பது நம் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது. ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருந்துவிட்டால் சராசரி இன்ப துன்பங்கள் அவனை பாதிப்பதும் இல்லை. விருப்ப வெறுப்பு இரண்டாலும் அவன் அவதிப்படுவதும் இல்லை.
வாழ்க்கையில் கவலைகள் ஏற்படும்போது, என்னவோ தன்னுடைய வாழ்க்கையில் இடி விழுந்ததுபோல், பயந்துபோய் விடுவது முட்டாள்தனம். ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுதான் அக்கரைக்கு செல்ல முடியும். அதேபோல்தான் வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளை எதிர்கொண்டு, அதனை கடந்து வரவேண்டும்.
எப்போதும் வாழ்க்கையை அதன் தன்மை மாறாமல் ஏற்றுக் கொள்ளப் பக்குவப்பட வேண்டும். நம்மிடம் இருக்கும் வசதிக்கேற்ப வாழ்ந்து வரும்போது, மனதில் குறை என்பதே வராது. மாறாக மனதில் திருப்தியான எண்ணம்தான் நிலைத்து நிற்கும்.
வாழ்க்கையில் சில விஷயங்களை கடந்து போகும் எண்ணம் இல்லாமல் இருக்கும்போதே சில எதிர்பார்ப்புகள் நம்மிடையே முளைத்து விடுகின்றன. அந்த எதிர்பார்ப்புகளை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம், எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, அகந்தையாக மாறிவிடுகிறது.
நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், உங்களுடைய அறிவு என்னும் கனல் கொண்டு அதனை எரித்து விடுவது நல்லது. அகந்தை என்ற கயறு எரிக்கப்படாத வரையில் அது உங்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து விடுகிறது.
வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக எதிர்ப்பாளர்கள் இருக்கும் இடத்தில், அவர்களுடைய விருப்பங்கள் என்றும் கானல் நீர்தான். நிறைவேறாத தருணங்களில் வெறுப்பு உள்ளத்தில் புகுந்து ஆட்டிப் படைக்கும். வாழ்க்கையில் எதிர்பார்ப்பதை விட, ஏற்றத்திற்கான சூழ்நிலை அறிந்துகொண்டு செயலாற்ற முனையுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.
வாழ்க்கையில் நீங்கள் சொல்வது சரிதான் என்று தெரிந்து விட்டால், அது விவாதப் பொருளாக மாறும். மாறாக அதுவே உங்கள் உள்ளுணர்வு ஏற்றுக்கொண்டால் போதும், அதனை ஊருக்கே அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
முட்டாளும் ஞானியும் எப்போதும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவரின் அமைதியும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
முட்டாள் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருப்பான். ஞானியோ விவாதம் பயன் தராது என்று அமைதியாக இருப்பான். இதில் நீங்கள் ஞானியாக இருக்கப் பாருங்கள். வாழ்க்கையில் என்றும் அமைதி நிலவும்.
வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சரியான தடத்தில் பயணித்தால் விரும்பும் வாழ்க்கை கைகூடும். தடம் மாறினால், வெறுப்பின் உச்சம் தொட்டு, வாழ்க்கை சரியும். வாழும் காலம் முழுவதும் சரியான வழித்தடத்தில் பயணம் செய்து, நிம்மதியாக வாழுங்கள்!