
"அவனுக்கென்ன! பெரிய கோடீஸ்வரன்! எல்லாம் யோகம்!. எங்கேயோ மச்சம் இருக்கு!"
நானும் கோடீஸ்வரன் ஆகணம். பெரிய பங்களா, கார், வேலையாட்கள் என அவனை மாதிரி பந்தாவாக வாழணம்.!" என பொறாமைப்பட்டு பலர் கூறுவதுண்டு.
ஆனால் ஒருவன் கோடீஸ்வரன் ஆவது எவ்வாறு? அதுபற்றி, சிறந்த அறிஞராகிய சாணக்கியர் கூறிய சில வழிகளைப் படித்து பின்பற்றலாம்.
பேராசை பெரு நஷ்டம்:
ஆசைப்படலாம். பேராசை அதிகமாக நஷ்டப்பட வைக்கும். சாணக்கியரின் கூற்றுப்படி, அதிலிருந்து விலகி நின்று, தன்னுடைய இலக்கை அடைய, அறிவுடன் யோசித்து செயல் படவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் வெற்றிக்காண வழியை அடைய முடியும். மற்றவர்கள் மீது பொறாமைப்படாதவன், பேராசைப்படாமல், அறிவார்ந்த செயல்களில் ஈடுபட்டு, பணத்தை சம்பாதிக்கலாம். கோடீஸ்வரனாகலாம்.
சோம்பேறித்தனம் சோறு போடாது:
சோம்பேறியாக வாழ்க்கையை கடத்தினால், யார் தினமும் சோறு போடுவார்கள்..? வாழ்க்கையில் தோல்வியையே சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின்படி, சோம்பலை விலக்கி வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்கையில், வெற்றி பெற்று கோடீஸ்வரனாகலாம். "சுத்தம் சுகாதாரம் தரும்" என்பதுபோல, சோம்பலடிக்காமல், சுத்தமான ஆடைகளை அணிகையில் தன்னம்பிக்கை கூடுதலாகும்.
வேண்டாத செலவுகள் வேதனையளிக்கும்:
ஒரு பொருள் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி சிந்திக்காமல், பணத்தை விரயமாக செலவழித்து கண்களில் பட்டவைகளையெல்லாம் வாங்கினால், நிதி நெருக்கடி வரும். மேலும் அந்தப் பொருளை உபயோகிக்காமல் இருந்தால், வேதனையை அளிக்கும். சாணக்கியர் சொல்வதின்படி, வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது என்றும் நிறைவைத்தரும். சேமிப்பிற்கென ஒரு தொகையை எடுத்து வைத்துவிட்டு, பிறகு மற்றைய செலவைப் பற்றி பட்ஜெட் போடவேண்டும். வருமானம் அதிகம் வருகிறதென இஷ்டத்திற்கு செலவு செய்வது தவறு. தேவையறிந்து செலவு செய்ய, பணம் சேமிப்பு ஆகும் கோடீஸ்வரனாகலாம்.
சண்டை, சச்சரவு வேண்டாமே:
சாணக்கியரின் நீதிப்படி, வெளியாட்களிடம் கருத்து வேறுபாடு கொள்வது, சண்டை-சச்சரவில் ஈடுபடுவது போன்றவைகளைத் தவிர்ப்பதோடு, வீட்டிலும் இவைகளைத் தவிர்க்க வேண்டும். வெட்டிப் பேச்சில் வீணாக நேரத்தை செலவழிக்கையில், பொருளாதார நிலையில் மந்தம் ஏற்படுகிறது. ஓரளவு செல்வமிருந்தாலும், வீட்டில் அமைதியும் அன்பும் இருந்தால்தான், மேலும் பணம் சேர்த்து கோடீஸ்வரனாகலாம். வீட்டினர் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
ஒன்று கொடுத்தால் பத்து வரும்:
தன்னால் முயன்றதை, வறியவர்க்கு அளிக்கும் நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அவசியம். மனதார, ஒரு மடங்கு கொடுத்தால், அது பத்து மடங்காக திரும்பி நமக்கு வரும். சாணக்கியர் சொல்வதுபோல இத்தகைய நல்லெண்ணம், தான- தர்மம் செய்யும் மனப்பான்மை ஆகியவைகள் ஒருவனை கோடீஸ்வரனாக்க வழி வகுக்கும்.
சாணக்கியரின் அருமையான கூற்றுக்களை பின்பற்றி செயல் பட்டால், பலவிதமான பிரச்னைகள் பறந்து போய், கோடீஸ்வரனாகிவிடலாம். சரிதானே!