
வீண் பேச்சு என்பது நேரத்தை வீணடிக்கும் செயல். இதனால் ஒரு விதமான பயனும் கிடையாது. இப்படி தேவையற்ற பேச்சை பேசுவதும் கேட்பதும் கண்டிக்கத்தக்கதாகும். சிலர் பொன்னான நேரங்களை வீண் பேச்சு பேசியே கழித்து விடுகின்றனர். வீண் பேச்சு பேசுபவர்களை தவிர்ப்பதற்கு உரையாடலை வேறு திசையில் திசை திருப்பலாம் அல்லது வேறு ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் வீண் பேச்சு என்பது குறைந்துவிடும்.
சில நேரங்களில் நேரடியாகவே வீண் பேச்சு பேசுபவர்களிடம் நாம் இம்மாதிரி வீண் பேச்சு பேசுவதை விரும்புவதில்லை என்று நேரடியாக முகத்தில் அடித்தது போல் கூறலாம். ஆனால் இது அவர்களுடனான உறவை மேலும் தொடரவிடாமல் பாதிக்கும்.
எனவே பேசுவதை நிறுத்திவிட்டு மௌனமாக இருக்கலாம். அப்படியும் அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் பதில் சொல்லாமல் வேறு எங்கோ சிந்தனை உள்ளதைப்போல் காண்பித்துக்கொள்ள அவர்கள் தாங்கள் பேசுவது வீணானது என்று உணர்ந்து பேசுவதை நிறுத்தலாம்.
சில சமயம் நம்மால் வீண் பேச்சு பேசுபவர்களை தவிர்க்க முடியாமல் போகும். அப்படிப்பட்ட நேரங்களில் சாரி எனக்கு முக்கியமாக வேறு ஒரு வேலை உள்ளது என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகிச் செல்லலாம். சிலர் விடாக்கொண்டனாக இருப்பார்கள். எப்படி செய்தாலும் அவர்கள் பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படி வீணான, பயனற்ற, தேவையற்ற பேச்சை பேசுபவர்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. முடிந்தவரை அவர்களைக் கண்டால் தள்ளி சென்று வடுவதும், அவர்களுடன் பேசுவதை தவிர்க்கவும் செய்யலாம்.
ஒருவருடன் நடக்கும் உரையாடலின் பொழுது ஒருவர் மட்டுமே தேவையற்ற வீண் பேச்சை பேசிக்கொண்டு இருந்தால் அதில் சுவாரஸ்யம் எதுவும் இருக்காது. எப்போது அதை நாம் வீண் பேச்சு என்று உணர்கிறோமோ அப்பொழுதே எதிர் தரப்பினிடம் பேசுவதை குறைத்து விட வேண்டும் அல்லது நிறுத்தி விடவேண்டும். எதிர் தரப்பில் பேசிக் கொண்டே இருப்பவர் நம்மிடமிருந்து பதில் எதுவும் வராததால் தானாகவே புரிந்துகொண்டு பேச்சை நிறுத்தி விடுவார். சிலர் அதையும் மீறி கேள்வி ஏதேனும் கேட்டால் விளக்கமாக எதுவும் சொல்லாமல் ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க தானாகவே வீண் பேச்சு என்பது நின்றுவிடும்.
வீண் பேச்சு பேசுபவர்களை நேரடியாக எல்லா நேரங்களிலும் பேசாதே என்று சொல்ல முடியாது. அதுபோன்ற சமயங்களில் அடிக்கடி கையை உயர்த்தி கடிகாரத்தில் மணி பார்ப்பதுபோல் செய்யலாம் அல்லது கொட்டாவி விடலாம். சுவாரசியமே இல்லாமல் இருப்பது போல் போனை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கலாம்;
விரல்களில் நெட்டி முறித்துக் கொண்டு இருக்கலாம். இப்படி சின்னச் சின்ன செயல்கள் மூலம் நமக்கு அந்த பேச்சில் ஆர்வம் இல்லை என்பதை அவர்களுக்கு எளிதாக உணர்த்தலாம். அப்படியும் விடாமல் தொடர்ந்தால் எனக்கு முக்கிய வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு நழுவி விடலாம்.
உப்பு சப்பில்லாத விஷயங்களை மணி கணக்கில் பேசும் மனிதர்கள் அவர்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் வீணடிப்பதுடன் மட்டுமல்லாமல் நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் கூட வீணடிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த முறை யாராவது வீண் பேச்சு பேசினால் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பித்து விடுவது நல்லது.