
வேலை என்பது ஒரு தண்டனை அல்ல. அது உங்களுக்கு இயற்கை வழங்கியுள்ள ஒரு அரிய பரிசு என்பதை உணருங்கள்.
நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் முதலில் அதை நேசியுங்கள். மண்ணை நேசிக்காத மரமும், தண்ணீரை நேசிக்காத மீனும் உயிர்வாழ முடியாது.
அது உங்கள் பொருட்தேவையை மட்டும் பூர்த்தி செய்யத்தக்கது அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க, மனத் திருப்தியை அளிக்க, வாழ்க்கையை முழுமையானதாக ஆக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்துள்ள ஓர் பரிசு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை வாழ்க்கையின் முக்கிய அம்சமாக நினைப்பதில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் பல்வேறு மன உளைச்சல்களுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உண்மையில் உங்களின் திறமைக்கும் மனநிலைக்கும் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றால் உங்களின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.
உங்களின் பணியை ஒரு அரிய பரிசாக நீங்கள் நினைத்தால் போதும், உங்கள் முன்னால் இருக்கும் எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மனவலிமை உங்களுக்குத்தானாக வந்துவிடும்.
உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு முதலில், உங்கள் வேலையை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும். ஏனென்றால், ஒருவருக்குத்தான் செய்கிற வேலை பிடிக்கவில்லை என்றால் அவ்வேலையில் ஈடுபாடு ஏற்படாது.
ஈடுபாடில்லாமல் செய்கிற வேலை எதுவாயினும் அதில் வெற்றி பெறுவது இயலாது. ஆகவே, நீங்கள் செய்கிற வேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல.
அது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. ஆம், அது ஓர் அதிசய அட்சய பாத்திரம். அதை உழைப்பு என்கிற கைகளால் எடுக்கின்றபோது வெற்றி என்கிற அமுதம் கிடைக்கும்.
உங்களுக்கு உதவும் வேலை உங்களுக்குச் சுவையாக இல்லாமல் சுமையாக இருப்பதற்குக் காரணம் உங்கள் மனநிலைதான். ஆகவே மனநிலையை உடனே மாற்றுங்கள்.
உங்களைச் சூழ்ந்துள்ள சோக இருள் விலகி, சந்தோஷ வெளிச்சம் பரவத்தொடங்கும். உத்வேகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்.
செய்கிற வேலை உங்களுக்கு முளைத்துள்ள சிறகுகள் என்பதை உணருங்கள். வானத்தை வசப்பட வைக்கும் வல்லமை அச்சிறகுகளுக்கு உண்டு.
நீங்கள் செய்கின்ற வேலையை நேசிக்கத் தொடங்கும் அந்த நிமிடமே உங்களுக்கு மனத்திருப்தி ஏற்பட்டுவிடும்.
வேலையில் பெறுகின்ற வெற்றிதான் வாழ்க்கையில் பெறுகின்ற வெற்றி!
ஆகவே வாழ்க்கையில் வெற்றிவாகை சூட எண்ணும் நீங்கள் முதலில் பணியில் வெற்றிபெற முயலுங்கள்!