
நீண்ட நேரம் நாம் யாருக்காவது அறிவுரை கூறினால் அதை பார்க்கும் பெரியோர்கள் நீ எந்த குற்றம் குறையும் இல்லாமல் நடந்து கொள்கிறாயா? அதை முதலில் பார். அதை விடுத்து மற்றவர்களுக்கு நீண்ட நேரம் அறிவுரை கூறுவதால் எந்த பயனும் ஏற்படாது.
உனக்குள் நீ எப்படி இருக்கிறாய் என்பதை ஆலோசி. அடுத்து மற்றவர்களுக்கு ஆலோசனை கூறு என்று கூறுவார்கள். அவர்கள் கூறுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. தொடர்ந்து ஒருவருக்கு அறிவுரை கூறினாலும் அறிவுரை கூறுபவர்களை யாரும் அதிகமாக விரும்புவதும் இல்லை. நாம் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு முன்பு நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ.
மற்றவர்களுடன் பழகும்போதும், உறவை பேணும்போதும், நட்பை காக்கும் போதும் எந்தவித எதிர்பார்ப்பும், உள்நோக்கமும் இல்லாமல் நல்லெண்ணத்துடன் நேர்மையாக இருக்கிறோமா? என்பதை நமக்குள் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
உலக மாற்றங்களை எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறோமா? ஏற்றுக்கொண்டால் செயல்படுத்து கிறோமா? அப்படி எதை எதை செயல்படுத்தினோம். அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருந்தது.
மற்றவர்களிடம் கூச்சமின்றி சகஜமாக பழகுகிறோமா? அல்லது அதிகமாக எதையாவது பேசிவிட்டால் நம்மை தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று தயங்குகிறோமா? அப்படி ஒரு தயக்கம் இருந்தால் நாம் இன்னும் பக்குவப்படவில்லை என்பது அர்த்தம். இதையெல்லாம் இப்படி சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறப்படுவதன் காரணம் எப்பொழுதும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிதானமாக பேசும்பொழுது வார்த்தையில் கவனம் வைப்போம். அப்பொழுது தேவையில்லாத வார்த்தையைப் பிரயோகிக்க மாட்டோம்.
வரவில்லாமல் செலவுகள் செய்து வாழ்ந்த காலம் எல்லோரின் இளமைப் பருவம்தான். அதுபோல் மற்றவர்களது தயாள குணத்தை, நேரத்தை மற்றவர் பணத்தை துஷ்பிரயோகம் செய்யாது வாழ்ந்தோமா? வாழ்கிறோமா? என்பதை எல்லோரும் தனக்குள் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஏனெனில் நன்றாக சம்பாதிப்பவரிடம் பணம் வாங்கி அதை துஷ்பிரயோகம் செய்து வாழும் அண்ணன், தம்பிமார்கள் சில குடும்பங்களில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களும் தனக்குள் தானே இந்த கேள்வியை பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும்.
அன்று என்னை பார்த்து அவர் அப்படி ஒரு கேள்வி கேட்டார். அதிலிருந்து நான் அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டேன் என்று சொல்பவர்களை பார்த்து இருக்கிறோம். அப்படி விலகிப்போவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதை மறந்து, துணிச்சலாக அந்த செயலை மன்னித்து, பிறகு அவர்களிடம் முகம் கொடுத்து இயல்பாக பழகும் தன்மை நம் மிடம் இருக்கின்றதா? என்பதை நிலை நிறுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உலகத்திலேயே மிகப்பெரிய துணிச்சல் ஆன செயல் பரம எதிரியையும் மன்னித்து மறப்பதுதான்.
ஆதலால் கேள்வியும் நானே பதிலும் நானே என்ற முறையில் சிந்தித்து செயல்படுவோமானால் நாமே நம்மை அழகாக சீர்படுத்தி செப்பனிட்டுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாலும் அவர்களும் நாம் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
நல்லவர் கெட்டவர் என்று எல்லோரிடமும் பழகுவோம். எப்படி பழக வேண்டும் என்பதை நல்லவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். எப்படி பழகக்கூடாது என்பது கெட்டவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். இதுதான் வாழ்க்கைப் பாடம் என்பது.