

'கால்ஃப் விளையாட்டில் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் ட்ரிவினோ. இளம் வயதிலேயே தந்தை இறந்ததால் பசி இவரை வாட்டியது. ஆனாலும் இவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் அமைந்திருந்த கால்ஃப் மைதானத்தையே தினமும் பார்த்தபடி இருப்பார்.
ஏழாம் வகுப்பிலேயே படிப்பை முடித்துக் கொண்டாலும் கால்ஃப் விளையாட்டை பார்த்து ரசிப்பதை இவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
கால்ஃப் விளையாட்டில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற உறுதி, பிடிவாதம், அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக தன் லட்சியத்தை நிறைவேற்ற எவ்வகையான உழைப்பையும் ஏற்க தயாரானார் டிரிவினோ.
தன் வீட்டின் எதிரில் அமைந்திருந்த கால்ஃப் மைதானத்தில் முதலில் புல்வெட்டும் தோட்டக்காரனாக வேலைக்கு சேர்ந்தார்.
ஆட்டக்காரர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பிய பின் இவர் விளையாட ஆரம்பிப்பார்.கால்ஃப் விளையாட்டு பணக்கார விளையாட்டு என்பதால் பந்து அடிக்க பயன்படுத்தப்படும் வளைத்தடி மிக விலை உயர்ந்ததாக இருந்தது.
டிரிவினோ சாதாரண வளைந்த மரக்கொம்பையே பந்தடி மட்டை ஆக்கினார். பாட்டிலின் மூடியை துணியில் சுற்றி பசையோடு ஒட்டி அதை பந்தாக்கினார். இதனைக் கொண்டு தினமும் இருட்டில் கண்மங்கும் வரை தனியாக விளையாடினர்.
மெல்ல மெல்ல குறி தவறாமல் பந்தை குழிக்குள் அடிக்கும் திறமை பெற்றார். இவருடைய திறமை வெளிப்பட்டதால் பலரும் பாராட்டினர். உழைப்பு இவருக்கு வெற்றியும் புகழையும் கொடுத்தது.
உலகின் மிகச் சிறந்த மெச்சத்தக்க ஆட்டக்காரர்களில் டிரிவினோவும் ஒருவர். விடாப்பிடியான உறுதியான உழைப்பு இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
லட்சியத்தை அடையவேண்டுமென்றால் வசதி இல்லை. நேரமில்லை. வாய்ப்பு இல்லை என்று கூறுவதை விட என்ன இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். கால்ஃப் பந்துக்கு மாற்றாக பாட்டில் மூடி டிரிவினோவுக்குக் கிடைத்தது.
மாற்று வாய்ப்புகள் வசதிகளை தேடுங்கள். நீங்களே வாய்ப்புகளை உருவாக்குங்கள். இல்லாமையும் உங்களுக்குத் தோழனாகும்.
இலட்சிய வட்டத்துக்குள் எப்படியாவது நேர்மையுடன் நுழைந்து விடுங்கள். உழைத்துக் கொண்டேயிருங்கள். உழைப்பிலே உங்கள் இலட்சியத்தின் பிடிவாதம் பிறர் கண்களுக்குப் படட்டும். 'எனக்குத் தெரியும் என்னால் முடியும்' என நீங்கள் கூறிக்கொள்வதை விட அவன் கெட்டிக்காரன். அவன் செய்து முடிப்பான் எனப் பிறர் கூறும் வரை உழைத்துக்கொண்டே இருங்கள்.
திறமைசாலி தன் திறமையைக் கோட்டை விடும் நேரம் வரும். அந்த நேரத்துக்காகக் காத்திருங்கள். உங்களை விட அதிகம் தெரிந்தவர் ஒரு நாள் சிறிய மறதியினால் மயங்கி நிற்பார். இந்த மயக்க நிலை உங்களது நுழைவாயில் ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
இப்படி உங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை இடைசியத்தைச் சுற்றி உழைத்துக்கொண்டே இருங்கள்.