கோபத்தீயை கனிவான வார்த்தையால் அணைக்க முற்படுங்கள்!

Motivational articles
Motivational articles
Published on

ரான் மன்னர் நெளஷேர்கான் ஒருநாள் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சமையல்காரர் வயதானவர். கை நடுக்கம் உடையவர். அவர் குழம்பு ஊற்றும்போது மன்னருடைய ஆடையில் ஒரு துளி கொட்டிவிட்டது. சமையற்காரர் பயந்துபோனார்.

மன்னரோ மகா கோபக்காரர். சமையற்காரரை மன்னர் எரித்து விடுவது போலப் பார்த்தார். புருவத்தை மன்னர் அசைத்தாலே மரண தண்டனை கிடைத்துவிடும். அப்படியிருக்க வெறித்த பார்வையின் விளைவுகளைப் பற்றி சமையல்காரர் அறிந்திருந்தார்.

சமையற்காரர் ஒரு கணம் திகைத்துப்போனார். திகைப்பு நீங்கியதும் கோப்பையிலிருந்த குழம்பு முழுவதையும் மன்னரின் ஆடையில் எடுத்துக் கொட்டிவிட்டார்.

மன்னர் நௌஷேர்கான் ஆத்திரத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார்.

"ஏய்... முதலில் தெரியாமல் கை தவறிக்கொட்டினாய். இப்பொழுது ஏன் வேண்டுமென்றே முழுக் குழம்பையும் கொட்டினாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.

உடனே சமையற்காரர் "மன்னா! உங்களுடைய கோபப்பார்வையைக் கண்டதுமே நான் இனி உயிர்வாழ முடியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கொரு யோசனை தோன்றியது. ஒருதுளி குழம்புப்பட்டதற்காக அரசர் தம் பழைய சமையற்காரரைக் கொன்றுவிட்டாரே! என்ன இது அநியாயம்! என்று ஊரார் உங்களைக் குறை சொல்வார்கள். அப்படி ஒரு பழி உங்களுக்கு ஏற்பட வேண்டாமென்றுதான் குழம்பு முழுவதையும் தங்கள்மீது சாய்த்துவிட்டேன். இப்போது என்னைத்தானே குற்றவாளி என்பார்கள்?" என்றார்.

இதைக் கேட்டதுமே நௌஷேர்கானின் கோபம் தண்ணீர் பட்ட நெருப்பாய் அணைந்தது. முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. வேறு ஆடையை அணிவதற்கு அமைதியாக எழுந்து சென்றார். சமையற்காரர் தன் பேச்சின் சிறப்பால் தன்னுடைய உயிரைக் காத்ததோடு, மன்னரையும் கோபத்தி லிருந்து விடுபடச் செய்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
கூட்டத்துல இருப்பீங்க ஆனா மனசு ஒட்டாது... புதுசா வந்திருக்கும் இந்த ரகம் நீங்களா என பாருங்கள்!
Motivational articles

இந்நிகழ்ச்சியிலிருந்து நமக்கு ஒரு செய்தி தெளிவாகிறது. அதாவது ஒருவருடைய கோபம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம்முடைய அணுகுமுறையின் மூலம் அக்கோபத்தைத் தணித்துவிட இயலும்.

சின்னத் தவறுக்குக் கூட மன்னிப்புக் கேட்கப் பழகிக்கொள்ளுங்கள். மன்னிப்புக் கேட்பதால் உங்கள் நண்பரைவிட நீங்கள் ஒருபடி உயர்வடைவீர்கள்.

அப்படியில்லாமல், "நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்?" என்று முறுக்கிக் கொண்டு இருந்தால் நட்பையும் முறித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.

நாணல்களைப்போல வளைந்து கொடுத்தால் நட்பு பலப்படும்.

'நெற்றியைக் காயப்படுத்துவதைவிட முதுகை வளைத்துச் செல்வது நல்லது' என்று ஒரு பொன்மொழி உண்டு.

உங்கள் தவறுக்கு மனமார வருந்தி மன்னிப்புக் கேட்பதால் உங்கள் நண்பரின் கோபம் தண்ணீர்பட்ட நெருப்பாய் நிச்சயம் அணைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com