

மனித வாழ்வில் நல்லவர்களோடும், வல்லவர்களோடும், கெட்டவர்களோடும் வாழ்ந்துதான் ஆகவேண்டியுள்ளது. அதன்படி பழகும்போது நல்லது கெட்டதை சீா்தூக்கிப் பாா்த்து சிலரிடம் நெருக்கமாகவும், அதேநேரம் சிலரிடம் நெருக்கம் குறைவாகவும், சந்தர்ப்பத்திற்க ஏற்றவாறு பழகவேண்டும் அதுவே நல்லது.
சரி உறவு, மற்றும் நட்பு வட்டங்களில் யாா் நல்லவர், யாா் கெட்டவர் என அலசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவோம்.
ஆனால் நம்மிடமே இருக்கின்ற பலவீனம், பதட்டம், பயம், கவனச்சிதறல் போன்ற மாயாவிகளோடு தினசரி வாழவேண்டிய சூழல் உள்ளதே அதை ஏன் கண்டு கொள்ளவில்லை? அவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டாமா! அப்போதுதானே வாழ்வில் ஒரு பிடித்தம் வரும்.
அது நம் கையில் மற்றும் நமது செயல்பாடுகளில் மட்டுமே உள்ளது. இந்த நான்கும் நமக்கான ஜென்ம விரோதிகள் முதலில் அவைகளை களையெடுக்க வேண்டும், அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும். நின்றால் பயம், நடந்தால் பயம், பாா்த்தால் பயம், பேசினால் பயம், இப்படி அனைத்திற்கும் பயப்படுவதால் எதுவும் நிகழப்போவதில்லை.
பொதுவாக மனோதிடம். நம்பிக்கை, பயமின்மை, துணிச்சல் இவைகளை கடைபிடித்து வாழக்கற்றுக் கொள்ளவேண்டும்.
யாரையும் எப்போதும் சாா்ந்திருப்பதே கூடாது. தனித்துவமாய், தைாியமாய் வாழவேண்டும். அதற்காக பலாிடம் யோசனை கேட்கக் கூடாது என்று அா்த்தம் கிடையாது.
எதுவாய் இருந்தாலும் இறுதி முடிவு நமது கையில் இருக்க வேண்டும் அதுவே சாலச்சிறந்தது. அதேபோல பலவீனம், அதுவும் ஒரு வியாதிதான். உடனிருந்தே கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தது.
எது நம்மை பலவீனப்படுத்துகிறதோ அதை எந்தவித தயக்கமும் காட்டாமல் தூக்கி எறிந்துவிடுங்கள், அதுவே பலவீனத்தை வெல்லும் பொிய ஆயுதமாகும்.
அதேபோல எந்த விஷயத்தை யாா் சொன்னாலும் பதட்டப்படாமல் தைரியமாய் கேளுங்கள். விஷயத்தின் தன்மை அறிந்து பதட்டப்படாமல் அதைக்கையாளுங்கள்.
எப்போதுமே பதறிய காாியம் சிதறிவிடும், பதறாத காாியம் சிதறாது என்பாா்கள், எனவே எங்கேயும், எப்போதும் பதட்டம், படபடப்பு இவைகளை தவிா்ப்பதே முதன்மையான ஒன்றாகும்.
இதோடு மேலும் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று கவனம், எந்த காாியம் செய்தாலும் கவனச்சிதறல் இல்லாமல் கையாளவேண்டும்.
குதிரைக்கு லாயம் கண்களில் கட்டப்படுவதுபோல இலக்கை நோக்கி பயணிக்கும் வேளையில் கவனச்சிதறலை கைவிடுவதே சிறப்பான ஒன்றாகும்.
மொத்தத்தில் வாழ்க்கையில் வேகமாக முன்னேற முடியவில்லையே என வருத்தமோ, தயக்கமோ வேண்டாம். பின் வாங்காமல் செல்கிறோமா என பாருங்கள், அதுவே இமாலய வெற்றியாகும்.
ஆக மேலே குறிப்பிட்ட எதிா்மறைகளை மறைவாக மூட்டை கட்டிவையுங்கள். நோ்மறை எனும் வாசற்கதவு திறந்தேயிருந்து வசந்தமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்!