
கடவுள் நமக்கு கொடுத்திருப்பது ஒரு வாழ்க்கை எந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும். எதிலும் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும். காத்திருப்பதும் பொறுமையும் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே நம்மை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை நாம் உணரவேண்டும்.
புகழ் பெற்ற நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா, சிறிய வயதில் மிகுந்த வறுமையினை அனுபவித்தவர். அவருடைய தந்தை குடும்பப் பொறுப்பில்லாமல் இருந்தார். குழந்தைகளுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து, அதில் இருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை அவர் தாயார் நடத்தினார். இதனால் பெர்னாட்ஷாவால் படிக்கமுடியவில்லை.
எனவே, ஒரு அலுவலகத்தில் எடுபிடி பையனாக வேலைக்குச் சேர நேர்ந்தது. ஆனால், அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. எங்கே தன்னுடைய வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்தவர், உடனே தாயாருக்கு கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார். "கடவுள் கொடுத்துள்ளது ஒரே வாழ்க்கை. அதையும் ஆபிஸ் பையனாக வீணாக்க மாட்டேன்."
அதற்குப் பிறகு வாழ்க்கைப் போராட்டத்தை சலிப்பின்றியும், தன்னம்பிக்கையுடனும் நடத்திய பெர்னாட்ஷா, உலகப் பெரும் நாடக ஆசிரியர் என்கிற உயர்வினைப் பெற்றார். அத்துடன் இலக்கியத்துக்கான 'நோபல் பரிசை'யும் பெற்றார்.
இந்த வெற்றி அவ்வளவு சுலபமாக அவருக்கு கிடைத்து விடவில்லை. நாவல்கள் எழுதி தோற்றுப் போனார். கலை, சங்கீத விமர்சனங்களை எழுதினார். உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாடகங்கள் எழுதத் தொடங்கியபோதுதான் மகத்தான வெற்றி பெற்றார்.
கடவுள் கொடுத்த ஒரே வாழ்க்கையை வீணாக்க மாட்டேன் என்று சிறு வயதிலேயே அவர் வெளிப்படுத்திய மன உறுதியும், தன்னம்பிக்கையும்தான் அவருடைய ஒப்பற்ற உயர்வுக்கு காரணமாக அமைந்தன. லட்சியத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட உழைப்பும், காத்திருந்த பொறுமையுமே அவருடைய வெற்றியின் காரணங்களாயின.