Lifestyle articles
Motivational articles

வெறும் தோற்றமா வாழ்க்கை? சொத்தை நிலக்கடலை சொல்லும் நீதி!

Published on

வீட்டு ஹாலில் அமர்ந்து டிவியில் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டே, சுவாரஸ்யமாக வறுத்த நிலக்கடலையை கொறித்துக் கொண்டிருக்கிறோம். கண்கள் இரண்டும் திரையில் ஆழ்ந்திருக்க, கைகள் அது பாட்டுக்கு கடலையை உள்ளே தள்ளுகிறது. திடீரென ஒரு சொத்தைக்கடலை வாயில் அகப்பட்டதும் நமது முகம் அஷ்டகோணலாகிறது. அடுத்து என்ன செய்கிறோம்? என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஒரு சொத்தைக்கடலையை தெரியாமல் ருசித்ததினால், ‘’சே! இனிமேல் நிலக்கடலையை என் வாழ்நாளில் தொடமாட்டேன்’’ என்று முடிவெடுப்போமா? மீதியுள்ள கடலையை குப்பையில் கொட்டுவோமா? இல்லை தானே? இனிமேல் பார்த்து சாப்பிடுவோம் என்று முடிவெடுத்து கடலை உண்ணும் படலத்தை தொடர்வோம் தானே?ஆனால், நடைமுறை வாழ்க்கையில், நினைத்தது நடக்காமல் போனாலோ, அல்லது தாமதமானாலோ சிலர் ஒரேயடியாக மனம் சுணங்கி, வாழ்வை வெறுப்பது ஏன்?

நம் வாழ்வில் தொண்ணூறு சதவீதம் நல்லதும், மீதி பத்து சதவீதம் மட்டுமே கெட்டதும் நடக்கிறது. நல்ல விஷயங்களைக் கொண்டாடாமல், சிக்கலான, எதிர்மறையான விஷயங்களைப்பற்றியே சிந்திக்கிறது மனிதமனம். வாழ்வில் கடுமையாகப் போராடி பிடித்ததை அடைந்த பின், அதை சந்தோஷமாக அனுபவிக்காமல், அடுத்ததைத் தேடிப் போகின்றனர். இதற்கு காரணம் திருப்தி என்ற குணம் இல்லாததுதான்.

குறுகிய வாழ்நாளில் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ்தலே நன்று. எத்தனை பணம், பதவி, புகழ்  இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தேடிக்கொண்டே போவது நிகழ்கால வாழ்வை அனுபவிக்க விடாமல் செய்துவிடும். எல்லாவற்றையும் அடைந்த பின்பு நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுத்தால் அதற்குள் காலம் கடந்து விடும்.

சொத்தைக்கடலையை தூக்கி எறிந்துவிட்டு, நல்ல கடலைகளை ருசிப்பதுபோல, நம்மிடம் என்ன இல்லை என்று எண்ணி ஏங்குவதை விட என்ன இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டால் ஒரு புதையலே கிடைக்கக் கூடும். வாழ்வு முறையும், ஆசைகளும், இலட்சியங்களும் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. அதனால் பிறர் வாழ்வுடன் தன் வாழ்வை மனிதன் ஒப்பிடத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
எளிமையாக வாழுங்கள் - வலிமையாக மாறுங்கள்!
Lifestyle articles

தமக்குக் கிடைத்த வாழ்வை திருப்தியாக வாழும் மனிதனின் மனதில் ஆழமான அமைதி, அன்பு, நன்றியுணர்வு, பிறரை நேசிக்கும் குணம், மற்றவரின் தவறுகளை மன்னிக்கும் பண்பு போன்றவை நிறைந்திருக்கும். இதனால் அவருடைய வாழ்நாளும் நீடித்திருக்கும்.

-எஸ். விஜயலட்சுமி

logo
Kalki Online
kalkionline.com