

மனிதனுடைய வாழ்க்கையை ஒருபோதும் பணம் நிர்ணயிப்பது இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனின் மனதின் தேடலே, அவனின் எதிர்கால வாழ்க்கைக்கு தூண்டுகோலாக அமைகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று நேர்மறை கருத்தும், மனம் ஒரு குரங்கு என்று எதிர்மறை கருத்தும் பழமொழிகள் சொல்வது, அதனை உறுதிபடுத்துகிறது.
தனக்குள் இருக்கும் உணர்வுகளை, மனம் மட்டுமே அறிந்து செயலாற்ற முனைகிறது. அதனால், மனதை பதறவிடாமல், பதறியக் காரியம் சிதறும் என்பதை நினைத்து, எளிமையாக நகர்த்துங்கள். சிந்திக்கும் நேரத்தை மனம் எடுத்துக்கொள்ள, அதற்கு அனுமதி கொடுங்கள்.
மனதை எவ்வளவுக்கு எவ்வளவு மன உறுதியுடனும், சுதந்திரமாகவும் வைத்துகொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு வைத்திருக்கும் மனமே, தடைகளை தாண்டி, இலக்கை அடைய முயற்சி செய்கிறது. முடங்கிவிடாமல், கணைகளை தொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள்.
மன உறுதியே அதன் பலம். அப்படி இருக்கும் மனமே, எதிர்வினை தீர்த்து, தன்வினை எப்படி இருக்கவேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் செய்கிறது. அதனை பலவீனமான சூழ்நிலைக்கு தள்ளினால், நித்தம் நித்தம் பயத்தின் ரேகைகள் நம்முள் துளிர்விட்டு, நம்மை பயந்தாங்கொள்ளி என்று முத்திரை பதித்து விட்ச் செய்யும். அதனால், எந்த இடத்திலும் மனதை பலவீனப்படுத்தாதீர்கள்.
மனதுக்குள் சோதனைகளையும், கவலைகளையும் ஏற்றி, அமுங்கி விடச் செய்யாதீர்கள். சாதனைகளைப் படைக்கும் துருப்புச் சீட்டு என்பதை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்ற முயலுங்கள். மன பலமே வாழ்வு; இழந்துவிட்டால் வருமே தாழ்வு என்று உணர்ந்து, மனதின் சக்தியை அதிகரிக்கும் உணர்வுகளில் இருந்து ஒருபோதும் பின் வாங்காமல், சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி வாகை சூடுங்கள்.
எந்த காரியத்தையும் மனதோடு திட்டமிடல் அவசியம். அப்படி செய்யும் போதுதான், அது ஏற்புடையதா? அல்லது இல்லையா? என்ற நிலை நமக்கு புரிய வரும். மனதுக்கு ஒப்பாத எந்த செயலுக்கும் செயல் வடிவம் கொடுக்காமல் தவிருங்கள், மனதுக்கு சரியென்று படுவதை, உரக்க சிந்தித்து, செயல்படுத்த முடிவு செய்து, இலக்கை அடைந்தால் வெற்றி நிச்சயம்.
எளிமையாக வாழும் கலையை மனதில் ஏற்றுங்கள், எந்த சூழ்நிலையிலும் படாடோபத்தில் மனதை கிளர்ச்சி செய்யாதீர்கள். படாடோபமும், பகட்டும் போதைக்கு தள்ளி, நம்மை வீழ்த்தி விடும் என்பதை மறந்துவிடாதீர்கள். எளிமையாக வாழும் மனதில்தான் மாற்றமும் ஏற்றமும் நிரந்தரமாக குடியேறும் என்று நம்புங்கள்.
அன்பு கொண்ட மனம் பண்பில் வளர்கிறது; நேர்மை சூடும் மனம் புகழில் சிறக்கிறது; ஒழுக்கம் பேணும் மனம் சிறந்த மனிதராக வாழச் செய்கிறது; எளிமையாக இருக்கும் மனம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்கிறது. இது வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணம் அல்ல. மனிதனாக வாழ நிலை நிறுத்தும் உண்மை பதிவுகள் என்பதை உணர்ந்து, எளிமையான மனதை என்றும் போற்றுவோம்.
எளிமையாக சிந்திக்கும் மனதின் ஆற்றலில், வலிமையான மாற்றங்கள் நிகழும் என்பதை நம்புங்கள். வேறு வழியில் பயணிக்க மனதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். மனம் ஒரு கேணி, அதில் என்றும் ஊற்றெடுக்கும் நேர்மறை எண்ணங்கள், தருமே வலிமையான மாற்றங்கள்.