
பருவங்கள் மாற மாற ஆசைகளும் மாறுகின்றனவே தவிர அவை இல்லாமல் போவதில்லை; இல்லாமல் போகவேண்டியதும் இல்லை. எல்லைக்குள் நிற்கும் இந்த ஆசைகள்தான் வாழ்வில் வெற்றிபெற நமக்கு உந்து சக்திகள்.
நல்ல வேலையில் அமரவேண்டும் என்ற ஆசை, நன்றாகப் படிப்பதற்கான உந்து சக்தி.
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை, கடினமாக உழைப்பதற்கான உந்து சக்தி.
எல்லோராலும் நேசிக்கப்பட வேண்டும் என்னும் ஆசை, அனைவரிடமும் நாம் எளிமையாகப் பழகுதற்கான உந்து சக்தி.
எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும் என்னும் ஆசை, அதற்கானத் தகுதிகளை நம்மிடம் வளர்த்துக் கொள்வதற்கான உந்து சக்தி.
ஆசைகளே நம்மை வளர்த்தெடுக்கின்றன. ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கைகளே, நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன.
அப்படியானால், 'ஆசைகளே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்; எனவே ஆசைகளை ஒழியுங்கள்' என்று புத்தர் சொன்னாரே, அதன் பொருள் என்ன...? 'அத்தனைக்கும் ஆசைப்படு...' என்று ஜக்கி வாசுதேவ் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா...? அதன் பொருள்.
'ஆசையை ஒழித்துவிடு; அதுவே துன்பங்களுக்குக் காரணம் என்ற சொற்களில், 'ஒவ்வொரு ஆசைக்கும் எல்லை என்பது ஒன்று உண்டு. அதற்கு வெளியே சென்று பேராசைகளை நீ வளர்த்துக் கொண்டால் அழிவு நிச்சயம்...' என்ற பொருள் மறைந்து கிடக்கிறது.
'அத்தனைக்கும் ஆசைப்படு' என்னும் சொற்களில், 'ஒவ்வொரு ஆசைக்கும் எல்லை என்பது ஒன்று உண்டு. அதற்குள் நின்றுகொண்டு உன் ஆசைகளை நீ வகுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்… என்ற பொருள் மறைந்து கிடக்கிறது.
எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் நமக்கு உரமாகின்றன; பேராசைகள் நம்மை அழிக்கின்றன. ஆசை, பேராசை இரண்டுக்குமான எல்லைக் கோட்டினை எப்படி அறிவது...? மேடைகளில் பொதுவாக நகைச்சுவைக்காக சொல்லப்படும் ஒரு சிறுகதை இதனை எளிதாக விளக்கிவிடுகிறது.
தெருத்தெருவாகப் போய் பிச்சையெடுத்து சாப்பிட்டு வாழ்பவன் ஒருவன் இருந்தான். பல வீடுகளுக்கு நடந்து நடந்து பிச்சை எடுத்ததால் ஒரு வீட்டில் இல்லையானாலும் ஒரு வீட்டில் உணவு கிடைத்தது.
கொஞ்ச நாட்களாக ஒரே தெருவில், ஒரே இடத்தில் அமர்ந்திருந்தான் அவன். இருந்த இடத்தில் இருந்தே பிச்சை கேட்பான். வருவோர் போவோர் தூக்கிப்போடும் சில்லரைக் காசுகள் அவன் பசிக்குத் தேவையான உணவுக்குப் போதுமானதாக இல்லை.
ஆள் வாடிப்போய்விட்டான். இருந்தாலும், அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. அங்கிருந்தபடியே பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான்.
அவனுக்குப் பழக்கமான மற்றொரு பிச்சைக்காரன் அவனிடம் "இங்கேயே ஏனடா உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்..? நாலு தெரு நடந்துபோய் பிச்சை கேட்டால்தானே ஏதேனும் கிடைக்கும்..? இப்படி மெலிந்துவிட்டாயே..! எந்திரிச்சி போடா..! போய், வீடு வீடா ஏறி இறங்கி பிச்சை எடுடா..!' என்று கடிந்துகொண்டான்.
'நான் ஏன் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்குடா..!' என்றான் இவன். 'அப்படி என்னடர காரணம்..?' என்றான் அவன்.
அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரில் இருந்த பெரிய வீடு ஒன்றைக் காட்டி, நண்பனிடன் இவன் சொன்னான்: 'அந்த வீட்டில் இருக்கும் இளம்பெண், ஒரு பையனைக் காதலிக்கிறாள். அவனைத்தான் கட்டிக்கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். ஆனால் அவள் அப்பனுக்கு அந்தப் பையனைப் பிடிக்கவேயில்லை!
'ஒரு நாள் நான் பிச்சை எடுக்க அந்த வீட்டு வாசலில் நிற்கையில், அப்பாவுக்கும் மகளுக்கும் கடுமையான சண்டை நடந்துகொண்டிருந்தது. அப்போது, வாசலில் நின்றிருந்த என்னைக் கைகாட்டி அந்தப் பெண்ணின் அப்பா சொன்னான்; 'இதோ இந்தப் பிச்சைக்காரனுக்கு வேண்டுமானால் உன்னைக் கட்டி வைப்பேனே தவிர, அந்தப் பையனுக்குக் கட்டி வைக்கமாட்டேன்.
அந்த வார்த்தை காதில் விழுந்ததில் இருந்து எங்குமே போகாமல் வீட்டுக்கு எதிரிலேயே நான் உட்கார்ந்து விட்டேன். ஒருவேளை, அந்தப் பெண்ணின் அப்பா ஒரு நல்ல முடிவு எடுத்து, என்னைத் தேடி அலையக் கூடாதல்லவா..? அதனால்தான், பக்கத்துத் தெருவுக்குக்கூட பிச்சையெடுக்கப் போகாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என்று கூறினான்.
பேராசை பெரும் நஷ்டம் என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதனின் ஆசைகள் அனைத்துக்கும் பூமியில் இடம் உண்டு பேராசைகளுக்கு இடமே இல்லை.