
தனிமை என்பது நாம் பிறந்தது முதல் இறக்கும்வரை எப்போதும் தொடரக்கூடிய ஒரு நிரந்தரமான நிலை. இதை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிமை என்பது இனிமை தருமா தராதா என்பது அவரவர் மனநிலையையும், அனுபவத்தையும் பொறுத்தது. சிலருக்கு பிறரிடம் இருந்து விலகி இருப்பது நிம்மதியான மனநிலையைத் தருவதாக தோன்றலாம். தனிமையிலே இனிமை காண விரும்பும் இவர்கள் தங்களுடைய தனித்திறமைகளில் கவனம் செலுத்தி வாழ்வில் உயர்வதற்கு பாடுபடுபவர்களாக இருக்கலாம். படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு தனிமை என்பது ஒரு சிறந்த உந்துதலாக இருக்கும்.
சிலருக்கு தனிமை என்பது அமைதியையும், படைப்பாற்றலையும், சந்தோஷத்தையும் தரக்கூடும். வேறு சிலருக்கோ தனிமை என்பது மிகவும் கொடியதாக, ஏமாற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். தனிமை என்பது சிலருக்கு சூழ்நிலையை பொறுத்து அமையும். எவ்வளவுதான் முயன்றாலும் சிலரால் தனிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலையை மாற்ற முடியாது.
தனிமை என்பது ஒரு உணர்வு. இது சமூக ரீதியாக தனிமைப்பட்டிருப்பதை பற்றியோ அல்லது தனிமையில் இருப்பது பற்றிய உணர்வையோ குறிக்கலாம். சில நேரங்களில் தனிமை என்பது விரும்பத்தக்கதாக இருக்கும். ஆனால் அடிக்கடி அல்லது நீண்ட காலம் தனிமையில் இருப்பது சில மனநல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
சமூகத்தில் உள்ளவர்களுடன் நல்ல உறவு இல்லாமல் இருப்பது, அன்புக்குரியவர்களை இழந்திருப்பது, முதுமை அல்லது உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் தனிமை பட்டிருக்கலாம். தனிமை என்ற உணர்விலிருந்து மீள்வதற்கு நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதும், புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வதும், உடல் நலத்தையும் மனநலத்தையும் நன்கு பேணி காப்பதும் அவசியமாகிறது.
சிலருக்கு தனிமை என்பது பெரிய சுமையாக தோன்றும். அவர்களால் மற்றவர்களுடன் பழகவோ, பேசவோ முடியாத நிலையில் இருக்கலாம். இதனால் அவர்கள் வாழ்வில் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும், சோகத்தையும் பெற்று தனிமையில் வாடலாம். அவர்களே தனிமையாக இருக்க விரும்பாமல் நான்கு பேருடன் சேர்ந்து பழக விரும்பினாலும் சூழ்நிலை அவர்களை தடுத்து நிறுத்தலாம்.
பெரும்பாலானவர்கள் தனிமையை விரும்புவதற்கு காரணம் மற்றவர்கள் தம்மை புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவதும் கூட இருக்கலாம். தானாகவேப் போய் ஒருவருடன் பேசினால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்ற சந்தேகமும் தயக்கமும் காரணமாக இருக்கலாம்.
உண்மையில் மனிதர்கள் சமூகக் கூட்டமாக வாழத்தான் படைக்கப்பட்டவர்கள். தனிமை நாட்டம் என்பது மனித பண்புகளுக்கு விரோதமானது. அதை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் யாருடனும் கலந்து பழகவோ, பேசவோ விருப்பமில்லாமல் போவது பின்பு சுபாவமாகவே மாறி இயல்பாகிவிடும். ஆரம்பத்தில் இது சுகம் தருவது போல் தோன்றினாலும் பணியிடத்திலும், பொது இடத்திலும், இல்லறம் என்னும் கூட்டிற்குள் இணைந்து வாழ தொடங்கும் பொழுதும் விபரீதமான விளைவுகளை உண்டாக்கும்.