
ஒரு சில நினைவுகள் எப்பொழுதும் அழகானது. ஆனால் அவை திரும்பவும் நம் வாழ்க்கையில் வராது. அவற்றை பத்திரமாக பாதுகாத்து பொக்கிஷமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலருடைய நினைவுகள் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாக பதிந்து விடுவதுடன் மனதில் தங்கியும் விடுகிறது. மறக்க முடியாத அந்த நினைவுகள் என்றுமே அழகானவைதான். கரைந்தாலும் ஒளியைத் தரும் மெழுகுவர்த்தியைப்போல் நம் அருகில் இல்லை என்றாலும் அவர்களின் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்காமல் இன்பத் தேன் துளியாக என்றுமே நிலைத்திருக்கும்.
அழகான நினைவுகளைத் தந்தவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் அவர்கள் தந்த நினைவுகள் என்றுமே பசுமையாய் நம் மனக்கிடங்கில் இனிய வாசமுடன் கலந்து நிற்கும். ஒரு காலத்தில் நம் சோகங்களை பகிர்வதற்கும், நம் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் துணையாய் இருந்தவர்களின் நினைவுகள் என்றுமே நம் நினைவலைகளில் மிதந்து கொண்டுதான் இருக்கும்.
எல்லோருக்குள்ளும் அழகான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். அருகில் கிடைக்கும் அன்பு அழகானது தான். ஆனால் என்றோ கிடைத்த, மனதை நெகிழச் செய்த அன்பில் மகிழ்ந்து நெகிழ்ந்து போன நினைவுகள் அதைவிட அழகானது அல்லவா?
சிறுவயதில் நமக்கு கிடைத்த அருமையான நண்பர்கள், அவர்களுடன் கழித்த பொன்னான நினைவுகள் என்றுமே நம் மனதை விட்டு நீங்காது. அவை நம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத இனிமையான தருணங்களாகும். நம்மை எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். மீட்டப்படும் நினைவுக்கு இருக்கும் வலிமை நிஜத்திற்கு இருப்பதில்லை. எவ்வளவு வருடங்கள் ஓடினாலும் அந்த இனிமையான நினைவுகள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அவை நம் வாழ்வின் பொக்கிஷங்கள்.
கடினமான நேரங்களில் ஆறுதலையும், மகிழ்ச்சியான நேரங்களில் இனிமையையும் தருபவை. கடந்த கால நினைவுகள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும், சில நேரங்களில் அழவும் செய்துவிடும்.
நாம் கடந்து வந்த ஒவ்வொரு நினைவுகளுமே ஒரு அனுபவப் பாடமாகத்தான் இருக்கும். சில நினைவுகள் மிக இனிமையாகவும், மனதில் எப்போதும் பசுமையுடன் நிறைந்தும் இருக்கும். சில நினைவுகளோ கசப்பானவை. அவை நம்மை வருத்தமடைய செய்யும். நினைவுகள் என்பது இல்லையென்றால் நம் வாழ்க்கை வெறுமையாக தான் இருக்கும்.
அவைதான் நம்மை மனிதர்களாக ஆக்குகின்றது. நம்மை துடிப்புடன் வளர செய்கிறது. உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது. எனவே அழகான நினைவுகளை போற்றிக் பாதுகாப்பதுடன், கசப்பான நினைவுகளை மனதிலிருந்து நீக்கி விடுவதுதான் நல்லது.
கவலையற்று திரிந்த நாட்கள், சந்தோஷமுடன் விளையாடிக் கழித்த நாட்கள் என்றுமே அழகானவை. நண்பர்களுடன் விளையாடியது, வகுப்பறையில் நடந்த கலாட்டாக்கள், குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்ச்சி பண்டிகைகள், கோடைக்கால விடுமுறையில் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்று செய்த அலப்பறைகள் என்று அளவிட முடியாத அளவிற்கு நினைவலைகள் குவிந்து நம்மை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்துவிடும்.
மொத்தத்தில் நினைவுகள் அழகானவைை. அவை வெறும் நினைவுகளாக மட்டுமல்லாது நம்மை இயங்கச் செய்திடும் இயக்கங்களும் அவைதான். சுகமானதும் சுவாரசியங்கள் நிறைந்ததுமான நினைவுகளை என்றும் போற்றி பாதுகாப்போம்!