
பிறவிக் குணம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட குணம். சிலருடைய குணங்கள் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்குமானால் அதனை பிறவிக் குணம் என்பார்கள். சிலருடைய எண்ணங்களின் போக்கு, மற்றவர்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் தாங்கள் எண்ணியதை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.
ஔவையார் கூட ஒரு பாடலில் பிறவிக் குணங்கள் எவையெவை என்று கூறியிருக்கிறார். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பதுதான் பாடலின் முதல் வரி. ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலில் ஔவையார் எவையெல்லாம் பிறவி குணங்கள், எவையெல்லாம் பழகப் பழக தானாக வந்துவிடும் குணங்கள் என்று சொல்லியுள்ளார்.
ஓவியம் வரைய வரையப் பழகி அழகான சித்திரம் வரைய முடியும். அதுபோல் தமிழில் பேசப் பேச நமக்கு நல்ல புலமை வந்துவிடும் என்று கூறும் இவர் நட்பும், தயையும், கொடையும் பிறவிக் குணம் என்கிறார்.
நட்போடு பிறருடன் நாம் பழகும் தன்மை என்பது நம் பிறவிக் குணத்தை பொறுத்தது. அதுபோல் பிறரின் கஷ்டத்தைப் பார்க்கும் பொழுது மனம் வருந்தி இரக்கம் கொள்ளும் தயை குணமும் பிறவி குணம்தான் என்கிறார். தன்னிடத்தில் இருக்கும் பொருளையோ பணத்தையோ பலனை எதிர்பார்க்காமல் தானாகவே மனமுவந்து கொடுப்பது கொடை.
இந்த கொடை என்கின்ற குணமும் இயற்கையாக வருவதுதான். அதாவது பிறவி குணம்தான் என்கிறார். மற்ற குணங்கள் எல்லாம் பழகப் பழக தானாகவே வந்துவிடும் என்று கூறும் இவர் பிறவி குணங்களை மாற்ற முடியாது என்று கூறுகிறார்.
ஒரு மனிதனுடைய பிறவியிலிருந்து வரும் குணங்கள் அல்லது இயல்புகள் எவ்வளவு மாற்ற முயற்சித்தாலும் மாறாது. அந்த இயல்பான குணங்களைத்தான் பிறவி குணம் என்பார்கள். கிராமப்புறங்களில் ஒருவன் ரொம்ப குறும்புத்தனமாக இருந்தால் அவனைப் பார்த்து பிறவிக் குணம் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுவார்கள். அதேபோல் ஒருவன் பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தால் பிறவிக் குணம் மட்டை வைத்து கட்டினாலும் தீராது, பிறவிக் குணம் பொங்கல் இட்டாலும் போகாது என்று வசை பாடுவார்கள்.
காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை என்பதுபோல தீயவர்களின் சகவாசம் இருந்தாலும் நல்லோர்கள் கெடுவதில்லைை. ஏனெனில் அவர்களது பிறவி குணம் மாறாது என்பார்கள்.
கரியை பலமுறை கழுவினாலும் அதன் கருப்பு நிறம் போகாது என்றும், நாய் வாலை நிமிர்த்த முடியாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை - இவையெல்லாம் பிறவி குணம் மாறாது என்பதை குறிக்கும் பொன்மொழிகளாகும். நமக்கென்று தனி பிறவிக் குணம் உண்டு. அதை எவ்வளவுதான் மாற்ற முயன்றாலும் தலை தூக்கும்.
விரட்டினாலும், அடித்தாலும் அன்பு பாராட்டுவது நாய் குணம். பால் வார்த்தாலும் நம்மையே கடிப்பது பாம்பின் பிறவிக் குணம்!