

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தங்களுடைய வாழ்க்கை பற்றிய புரிதல் என்பது, 'தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு' என்பதுபோல் வேறுபடும். அந்த பதில்களில் இருந்தே அவர்களது வாழ்க்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
உறவு பந்தங்களோடு நாம் எவ்வளவு அன்யோன்யமாக உறவாடி வாழ்ந்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேவைகள், விருப்பங்கள், மற்றும் வாழ்க்கை முறை வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டால், நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தான் சார்ந்த பணியின் காரணமாகவோ, அல்லது, தன்னுடைய அந்தஸ்தின் நிலை பற்றிய கண்ணோட்டத்திலோ, அவ்வப்போது நிகழும் விஷயங்களில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கொண்டதாக இருக்கும்.
அப்படி இருக்கும்போது, யவர் ஒருவரும் ஒரே மாதிரி சிந்திக்கவும் மாட்டார்கள், ஒரே மாதிரி இருக்கவும் மாட்டார்கள் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொண்டு வாழ்ந்தால், எந்த அழுத்தமும் வந்து சேராமல் நிம்மதியாக வாழலாம்.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை, கடவுள் புண்ணியத்தில் சிறப்பாக இருக்கு, எந்த குறையும் எனக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். பலரது பதிலும் என் வாழ்க்கை மிகவும் சோகமாகவும் வலிகள் நிறைந்ததாகவும் இருப்பதாகத்தான் சொல்லுவார்கள்.
அதில் உண்மை ஓரளவுக்கு தான் இருக்கும். பொய்மை நிறையவே கலந்து இருக்கும். ஏனென்றால், நிறைவான வாழ்க்கை என்று சொல்லி விட்டால், எதிராளி பொறாமைபட்டு, நம் வாழ்க்கையில் அவர்கள் கண் பட்டுவிடும் என்ற அச்ச உணர்வே அதற்கு காரணம். இதற்கு தன்னையே அவர்கள் நம்பவில்லை என்றுதான் அர்த்தம்.
எந்த ஒருவரும், இந்த வாழ்க்கை தனக்கானது, தன்னுடைய உழைப்பு மற்றும் தன்னுடைய முயற்சி இந்த இரண்டாலும் கிடைத்தது என்ற எண்ணம் மேலோங்கும் போதுதான், இந்த எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து வாழமுடியும்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை பற்றிய புரிதலோடு எந்த அளவிற்கு நம்மிடம் உள்ளதோ அந்த அளவிற்கே நம் வாழ்க்கையும் அமையும். இதை யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது, என்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்துகாட்ட வேண்டும்.
வாழ்க்கையில் நாம் அனைவரையும் ஒன்றை கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை சில நேரம் நமக்கான பாடங்களை மிகவும் அழுத்தமாகக் கற்றுக்கொடுக்கும்.
அந்த நிகழ்வுகளை, நாம் எப்படி கையாண்டு, வெற்றிக்கு வித்திடும் வகையில் செயலாற்றும் தன்மை கொண்டு இருக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி ஏற்படும்போது நாம் எந்த விதத்திலும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் கொண்டு செயலாற்ற கூடாது. அப்படி ஏற்ப்பட்டது நமக்கு ஏற்ப்பட்ட பிரச்னை என்று நினைத்து கொண்டால், வாழ்க்கையில் நமக்குள் சோகம், கோபம் பயம் போன்ற எதிர்மறை எண்ண அலைகள் தோன்றி நம் உணர்வுகளை பாதிக்கும்.
எவரொருவரும் போலியான வாழ்க்கை வாழ்ந்து வீண் போகாமல், சவால்கள் நிறைந்த எந்த ஒரு சூழ்நிலையிலும், தன் மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிறர் என்று சொல்லை தவிர்த்து, எல்லோரும், தேனீக்கள் போல், சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டுவோம்!