

'பொழுது விடிந்து எழும்போது பணக்காரனாக எழுவேன்' என்று கனவு கண்டபடி தூங்குபவர்களின் கனவு பாதி நிறைவேறி விடுகிறது. ஆம்! அவர்கள் பொழுது விடிந்ததும் எழுகிறார்கள். - இது தாமஸ் ஆல்வா எடிசன் கூறியது.
நம்முடைய பார்வைகள் சாதனைகளை நோக்கித்தான் இருக்க வேண்டுமேயொழிய, சங்கடங்களை நோக்கி இருக்கக் கூடாது!
நம்முடைய சிந்தனைகள் தொலைநோக்குச் சிந்தனைகளாக இருக்க வேண்டுமேயொழிய, தொல்லைகளை நோக்கிய சிந்தனைகளாக அமைதல் கூடாது!
நம்முடைய செயல்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமேயொழிய அழிவுப் பாதையில் அழுத்தக்கூடாது!
தோல்வி என்னும் வீட்டை கட்டுவதற்கு அடிக்கப்படும் ஆணிகளின் பெயர் தான் சாக்கு போக்குகள். ஆகவே வேகமாக செல்ல வேண்டும் என்று துடிக்காமல் வழியில் உள்ள முட்டு கட்டைகளை அகற்றி விட்டால் விரைவாக சென்றுவிடலாம்.
பரிசுகள் வரும்போது பங்கு போட்டுக்கொள்ள வருபவர்களையும் சிக்கல்கள் வரும்போது சிதறுண்டு செல்பவர்களையும் அருகில் வைத்துக்கொள்ளக் கூடாது. எதிர்காலம் என்பது தானாக வருவதில்லை. நாம் எடுக்கும் முடிவுகளால் உருவாக்கப்படுகிறது.
இன்றைய பொருளாதாரத்தில் "இருப்பவன் - இல்லாதவன்" என்ற நிலை மாறி "தெரிந்தவன் - தெரியாதவன்" என்ற வேறுபாடே முன் நிற்கிறது.
ஆம், முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் - தெரியாதர்கள் என்ற நிலைதான் இன்றைய உலகை, உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகிறது!
அப்பாவிகளும், ஏமாளிகளும் முறையாக நேற்று சிந்திக்கத் தவறியதால் ஏற்பட்ட கொடுமையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புத்திசாலிகள் இன்று எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டு, அதற்காக நேற்றே உழைத்துவிட்டு இன்று அதன் பலனை மிகவும் அழகாக அனுபவித்துக் கொண்டாடுகிறார்கள்.
உங்களுடைய நேற்றுதான் இன்றைய நாள்.இன்றைய உழைப்புதான் நாளைய நாள்.
தூக்கணாங்குருவி எத்தனை நூறு ஆண்டுகளானாலும் ஒரே மாதிரி தான் தன் கூட்டைக் கட்டிவரும். மாற்றிக்கொள்ள அதனால் இயலாது.
பசு என்றைக்கும் இறைச்சி உண்ணாது. எவ்வளவு பசித்தாலும் புலி புல்லை உண்ணாது. தேனி அதனுடைய கூட்டில்தான் வாழும்.
ஆனால், குகைகளில் அன்று வாழ்ந்த மனிதன் இன்று மாட மாளிகைகளிலும் பல அடுக்குக் கட்டடங்களிலும் வாழ்கின்றான்.
இப்படி, மனித இனம் வேகமாக முன்னேறிச் செல்வதற்கான காரணம், எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்; இப்போது இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; முன்னேறவேண்டும் என்று சில முடிவுகளை எடுத்து அதற்கு ஏற்றாற்போல செயல் படுவதுதான்!
ஆகவே, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முதலில் முடிவெடுங்கள்.