

வாழ்க்கையில் உங்களுக்கு பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைவிட பெரிய ஒன்று உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள். அந்த ஒன்றுதான் உங்களுடைய மனம். அதனால் மனம் என்னும் திறமையின் மூலம் வெற்றி பெற்று விடலாம். வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம் என்று நினைத்து வாழ்ந்து, வென்று காட்டுங்கள்!
வாழ்க்கையில் ஆம்லெட் போடும் முட்டையாக இருக்காதீர்கள். ஏனெனில் வெளியிலிருந்து உடைக்கும் முட்டைக்கு, அதன் வாழ்க்கை முடிவடைகிறது. அதே முட்டை தானாக உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு வாழ்க்கை துவங்குகிறது.
மனித வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் எப்பொழுதும் நமக்குள்தான் இருக்கிறது. வீணாக வெளியில் தேடி காலத்தை வீண் செய்யவேண்டாம். ஆகையால் முயற்சி செய்யுங்கள். மனம் எனும் குதிரைக்கு கடிவாளம் போடாமல், களமாடுங்கள், வெற்றியின் இலக்கை எட்டிப் பிடியுங்கள்.
இரவு அமைதியாக இருக்கிறது. ஏனெனில், உழைக்கும் உங்களை, இரவு நேரத்தில் தாய் போல் தாலாட்டிவிட்டு, விடியலின் கரங்களில் உங்களை ஒப்படைப்பதற்குதான். இரவு சோம்பேறியை தண்டிக்கும். உழைப்பவர்களை தாங்கிப்பிடிக்கும்.
வாழ்க்கையில் உனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்து கொள். அதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரே பாதையில் கவனம் செலுத்தி, தங்களுடைய வளர்ச்சிக்கான இலக்கினை அடைய முயலுங்கள்.
வாழ்க்கையில் இன்று யாரும் கவனிக்காத உங்கள் உழைப்பு, பிரிதொரு நாள் வெளிச்சத்திற்கு வரும். அப்போது உங்களுக்கான அடையாளம் தெரியவரும். ஆகவே தங்களைப் பற்றிய அளவுகோலை மற்றவர்களிடம் தேடி செல்லாதீர்கள்.
வாழ்க்கையில் உன்னோடு மனம் உண்மையாக இருந்தால் போதும். சில சாதனைகள் தாமதமாக வந்தாலும் உங்களுடைய மனம் அதனை ஏற்றுக்கொள்ளும். அப்போது மனம் இன்னும் வலுவாகவே இருக்கும். ஆகவே அலைபாயும் மனதை தவிருங்கள்.
வாழ்க்கையில் எப்போதும் உங்களை சுயமாக நிலை நிறுத்த முயலும் நேர்மறை எண்ணங்களை மனதில் பதிவிறக்கம் செய்யுங்கள். அப்போதுதான், உங்களால், உங்கள் சக்தியை அறிந்து கொண்டு செயலாற்ற முடியும்.
வாழ்க்கையில் பணம், பொருள், சொந்த வீடு, பதவி இப்படி எல்லா வகையான வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து விடலாம் என்று நினைக்கும் எண்ணங்களை கைவிடுங்கள். அவை அனைத்தும் புறக் காரணிகள். ஒவ்வொரு நாளும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து காட்ட, முதலில் மனம் நிம்மதியாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் இயற்கையை ரசிக்க மனம் வேண்டும். அந்த மனம் தூய்மையாக இருத்தல் வேண்டும். உழைப்பு நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாழும் வாழ்க்கையை மனம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும். இப்படி ஒவ்வொன்றிலும் மனம் ஒன்றி இருந்தால் மட்டுமே வாழ்க்கை செம்மையாக அமையும்.
வாழ்க்கையில் புத்தி கூர்மையாகவும் மனம் சலனப்படாமல் எப்போதும் ஒருநிலைப்படுத்தியும் இருந்தால், உங்கள் செயல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
வாழ்க்கையில் உங்கள் சிறப்பான முயற்சியைக் கொடுங்கள். ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போனாலும் மனம் தளராமல், நம்மால் முடியும் என்ற மன உறுதியோடு செய்து பாருங்கள். வெற்றி தடம் பதிக்கும். வாழ்க்கை சாதனை படைக்கும்!