அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை நமது உடமையடா!

Motivation Image.
Motivation Image.

சிலருக்கு நல்ல திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த விடாமல் அச்சம் தடுத்து விடுகிறது . சிறுவயதிலே ஒரு கூட்டத்தில் பேசும்போது அவமானப்பட்ட ஒருவன் அதே நினைவுகளின் சுமையால் பெரியவனான பின்னரும் அத்தகைய கூட்டங்களில் பங்கெடுக்க அச்சப்படுகிறான். இப்படிப்பட்ட குழந்தைகளின் அச்சத்தை போக்குவது பெரியவர்களின் கடமை. கொஞ்சல்,  பாராட்டுகளால் மகிழ்ச்சி கிட்டாமல் வேதனை அடைகிறவர்களை இனங்கண்டு இந்த நிலையினை ஆரம்பகட்டத்திலேயே மாற்ற வேண்டும்.  அவர்களுக்கு 'துணிவே துணை' என்பதை போதிக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்! 

பள்ளி மற்றும் வெளியிடங்களில்   அன்றன்று நடந்த செயல்களை சொல்வதற்கு குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுத்து, அச்சம் தவிர்த்தலுக்கு தக்க மதிப்பு அளிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக இருக்கும் அதே நேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பு,  ஆதரவு மற்றும் அரவணைப்பு காட்டவேண்டும்.

பள்ளிகளிலும் மாணவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் சமமாகவும்,  அன்புடன் பழகும் சூழல் உருவாக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பு, தண்டிப்புடன் அன்பையும் ஆதரவையும் நல்கி அவர்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். சுமாராக படிக்கும் குழந்தைகளை பார்த்து ‘மக்கு, நீ உருப்பட மாட்ட’  போன்ற சொற்களை பேசாமல், 'முயற்சி திருவினையாக்கும்', 'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை', ‘அச்சம் தவிர்’ போன்ற நேர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

வளரிளம் பருவத்தில் உள்ளோர் பால் குடும்பத்தினர் தனிக் கவனம் செலுத்தி பரிவும், பாசமும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள்  முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் அச்சப்படாமல் எந்த செயலையும் செய்யவும்,  பேசவும்  துணிவார்கள். இல்லையேல் அச்சப்பட்டு கொண்டே எதையும் கூறவும் மறுத்து விடுவார்கள்.

மனிதர்கள் மிகவும் அஞ்சுவது நோய்கள், கொரோனா  ஒன்றே போதுமே. அது படுத்திய பாட்டை மறந்துவிட முடியுமா?  விபத்துக்கள், அவமரியாதை, உற்றார் உறவினரை பிரிதல், மரணம் ஆகியவை பற்றி எண்ணங்கள் தொடர்ந்து மனிதனுக்கு கவலை தருகின்றன.  அதற்குத்தான்

'அஞ்சியஞ்சி சாவார் அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே' என்று பாடினார் பாரதி .

எதிலும் மன உறுதி  இல்லாததுதான் அச்சத்துக்கு மூல காரணம். நிலையற்ற மனம் அச்சத்துக்கு ஆணிவேர். நாம் மனதில்  நினைத்ததை வெளியே கூறினால் தவறாகி விடுமோ அல்லது சரி இல்லாததை நாம் கூற முற்படுகிறோமோ,  நாம் சொல்வதைக் கேட்டு பிறர் நம்மை கேலி செய்து விடுவார்களோ என்ற  அச்சம்தான் மேலும் அச்சத்தை உருவாக்குகிறது. இதனால் சிலர் சொல்ல வருவதையும் சொல்லாமல் நிறுத்திக்கொள்கின்றனர்.  இதனால் நல்ல கருத்தும் முடங்கி போவதுண்டு. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல வருவதை சட்டென்றும்  பட்டென்று சொல்லிவிடலாம். நன்மையோ, தீமையோ  நேற்படுத்திக்கொள்ளலாமே! 

"அச்சம் ஒன்றிற்குதான் நாம் அஞ்ச வேண்டும்" என்று கூறினார் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். 

அச்சம், கவலை ஆகியவை எவ்வாறு நம் மனதை ஆட்கொண்டு நம் வாழ்க்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். 

ஒரு விஷயம் நடக்கப்போகிறதோ இல்லையோ, நடக்கும் என்ற எண்ணமும் அவை பற்றிய கற்பனையும் தான் மனிதனிடம் அச்சம் தோன்ற முக்கிய காரணமாகின்றன. நிலையான அச்சமும் அமைதியின்மையும் அவனது மகிழ்வை குலைக்கின்றன. 

சில அச்சங்கள் பொதுவானவை. இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற போர், இது போன்றவைகளால் மனித குலத்துக்கு இன்னும் என்ன தீங்கு விளையுமோ? அணு ஆயுதப் பரவல்,  காய்ச்சல் வகைகள், நோய் பரவல் ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை.  இவையும் மனிதனின் சாந்தத்தன்மையை குறைக்கின்றன. 

அச்ச உணர்வுள்ள அரசன் ஆண்டியாகிறான். அச்சத்தை வென்ற ஆண்டிகூட அரசன்தான். வீரனுக்கு ஒரு முறைதான் சாவு. கோழைக்கு ஆயிரம் முறை சாவு என்பார்கள். அதனால் நெஞ்சில் உள்ள அச்ச உணர்வை அகற்றவேண்டும். யார் மனதிலும் அச்சத்தையும், பீதியையும் நாம் உருவாக்க கூடாது. யாரும் அஞ்சுவதற்கு நாம் மூல காரணமாகவும் இருக்க கூடாது. இவற்றை கடைபிடித்தால் 'அச்சம் என்பது மடமை' என்பதை உணர முடியும். 

அச்சத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அச்சத்தை மறைத்து வைக்க அது பூதாகரமாக உருவெடுக்கும். ஏனெனில் அது அடி மனதில் ஆழம் கொண்டுவிடும். எனவே அதனை நேரடியாக உணர்ந்து எதிர்கொள்வதே சிறந்த முறையாகும்.

மேடையில் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா? பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்து தாராளமாக கலந்துகொள்ளலாம். அப்பொழுது அச்சம் மறைந்து போகும். விளையாட்டு போட்டி, நீச்சல், எழுத்து , பாட்டு, நடனம் எதில் விருப்பம் இருக்கிறதோ? அவைகளில் கலந்துகொண்டு வெற்றி கொடி கட்டலாம். அப்பொழுது அச்சம் 'பகலவனை கண்ட பனி போல' மறைந்துவிடும். இப்பொழுது மிகவும் பெரிதாகத் தோன்றிய அச்சம் மிகச் சாதாரணமாக தோன்றிவிடும். இதனால், நமக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். 

எளிமை, அன்பு, மகிழ்ச்சி, திட்டமிடல், விடாமுயற்சி, இரக்கம், பிறருக்கு உதவுதல், தன்னம்பிக்கை, வீரம் ,இறை நம்பிக்கை ஆகிய நேரியல் எண்ணங்கள் அச்சத்தை அகற்ற உதவும் ஆயுதங்கள். அச்சத்தை அகற்றுவதற்காக போராடி நாம் வெற்றி பெற்று விட்டால் வாழ்க்கையின் பயன்கள் அனைத்தும் நமக்கு எளிதில்  கிட்டும். அச்சம் வெல்லக்கூடியதே என்பதை ஒரே ஒரு வெற்றி உணர்த்தும். 

இதையும் படியுங்கள்:
வெயிட் லாசுக்கு உதவும் வெண்ணெய் பழம்!
Motivation Image.

ச்சத்தையும் பகிர்ந்துகொள்ளலாம் .குறிப்பாக நோய் கண்டு அஞ்சினால் மருத்துவர் அறிவுரை நாடலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் அறுவை சிகிச்சை பற்றி அஞ்சினால், வேறொரு மருத்துவ  நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம். இனம் புரியாத அச்சமாக இருப்பின் உளவியல் நிபுணர் துணையை நாடலாம். சாதாரண அச்சத்தை நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அப்போது அச்ச உணர்வு குறைவதை உணர முடியும். அவர்களும் நாம் அஞ்சும் நிகழ்வை தவிர்க்க தக்க அறிவுரையும், உதவியும் நல்கக்கூடும். 

அச்சத்தின் காரணமாக நடந்த ஒரு நிகழ்வை மாற்ற முடியாது. இனி நடக்கப்போவதை முன் கணிக்க முடியாது.  என்றாலும், அச்சமின்றி எதிர்கொண்டால், தடுத்துக்கொள்ளலாம். அல்லது தாங்கிக்கொள்ளலாம் என்பதால்,  

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! "என்ற வரிகளை மனதில் அழுந்தச் சொல்லி  மன நிறைவடைவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com