
மனதில் இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று வைராக்கியம் வைத்துவிட்டால் அதை நல்லபடியாக செய்துவிட முடியும். நம் வீடுகளில் மழை பெய்யும் காலங்களில் நன்றாக தண்ணீரை செலவழிப்போம். அதேபோல் வறட்சி என்று வந்துவிட்டால் ஒரு டம்ளர் தண்ணீரை செலவழிப்பதற்கு மிகவும் தயங்குவோம். அதை எப்படி எல்லாம் இன்னும் சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த வழிகள் அனைத்தையும் பின்பற்றுவோம்.
அப்படித்தான் ஒருமுறை என் தோழி ஒரே வாளி தண்ணீரில் குளித்து துவைத்து வெளியில் வந்தாள். இது எப்படி சாத்தியம்? என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் முதலில் வாளியில் இருக்கும் தண்ணீரில் துணிகளை நனைத்துவிட்டு அந்தத் தண்ணீரிலே குளித்துவிட்டால் போகிறது. இப்படி செய்வதால்தான் தண்ணீர் பஞ்சத்தில் சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது என்று பதில் சொன்னார். இது தண்ணீர் இல்லாததால், அப்படித்தான் அந்த நேரத்தில் வாழ்ந்தாக வேண்டும் என்பதால் நாம் பின்பற்றும் முறை.
ஆனால் கங்கை நதி பாயும் நாட்டில் நம் மகாத்மா என்ன செய்தார் தெரியுமா? மகாத்மா காந்தி ஒரு சமயம் தன்னுடைய ஆசிரமத்தில் குளித்துக் கொண்டிருந்தார். ஒரு வாளி தண்ணீரிலேயே குளித்து தன்னுடைய ஆடைகளையும் அதிலேயே துவைத்து அலசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நேரு அதை வியப்புடன் பார்த்து "பாபுஜி! கங்கை நதி பாயும் திருநாட்டில் தண்ணீருக்கா பஞ்சம்? இன்னும் இரண்டு வாளி தண்ணீரைப் பயன்படுத்தி துணிகளை அலசி கொள்ளலாமே. ஒரு வாளி தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கொண்டீர்களே?" எனக் கேட்டார்.
உடனே காந்தி, கங்கை நீர் நம் இருவருக்கும் மட்டும் சொந்தம் என்று நினைத்தீரோ? நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது சொந்தம். அதனால் எனக்கு உரிய பங்கை மட்டும் நான் பயன்படுத்திக்கொண்டேன் என்று பதில் அளித்தார். அதைக் கேட்டு நேரு அசந்து போய்விட்டார்.
ஒரு மனிதன் எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டை கூற முடியாது. இப்படி ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய உண்மையை, நேர்மையை, நடந்து கொள்ளும் விதத்தை மூடி மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவித்து, வாழ்ந்து முத்திரை பதித்தவர்தான் காந்திஜி. இவையெல்லாம் நமக்கு போதிப்பது என்ன? நாமும் இது போன்ற சிக்கனங்களை செயல்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
மகாத்மா என்றால் இதையெல்லாம் சேர்த்துதான் அந்த பெயர் அவருக்கு நிலைத்து நிற்கிறது என்றால் மிகையாகாது. இது போன்ற செயல்களை இந்நாளில் மட்டுமல்ல. எந்நாளிலும் நினைவு கூர்வோம். அவர் வழி நடப்போம்!