

சுயசிந்தனையைச் சுதந்திரமாகச் செயல்படுத்துகின்ற போது, நமது ஆற்றல் எல்லையற்றதாகி விடுகிறது, மனத்தால் சிந்திக்கின்ற போது, கட்டுப்பாடுகள் இல்லாத சிந்தனை வானில் நாம் பறக்கத் தொடங்கி விடுகிறோம். பழைய எண்ணங்களால் பாதிக்கப்படாத புதிய ஆகாயத்தைச் சிந்திக்கத் தொடங்குகிறோம். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையைப் பற்றி புதிய கண்ணோட்டத்தைப் பெறுகிறோம்.
"உன்னையே நீ அறிவாய்" என்றார் கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரடீஸ். நம்மை நாமே அறியாத காரணத்தால், நம்முடைய இயற்கைத் தன்மையினை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம். பிணி, மூப்பு ஆகியவை வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகிவிட்டன. 'இயற்கையில் மாற்றம்தான் நிகழமுடியும்; தவிர அழிவு ஏற்படுவதில்லை. ஒரு மெழுகுவத்தி எரியும்போது எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை' என்றார் விஞ்ஞானி லவாய்ஷியர். மெழுகுவர்த்தி எரிகின்றபோது, அதன் ஒரு பகுதி வெளிச்ச சக்தியாகவும், இன்னொரு பகுதி கரியாகவும் மாற்றம் பெறுகிறது. இது மாற்றமே தவிர, அழிவு அல்ல.
மனிதனைப் பொறுத்தவரையில், அவன் படைப்பின் சிகரமாகக் கருதப்படுகிறான். மற்ற பிராணிகளைவிட அவனுடைய உடல் அமைப்பு உன்னதமாக அமைந்திருப்பதோடு படைப்பின் சிகரத்தை எட்டிய அவன், பிரபஞ்சப் பேராற்றலோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய மனத்தையும் பெற்று இருக்கிறான். இந்த அரிய மனம் என்கிற அமைப்பினை அவன் உணராமல், வெறும் அறிவை மட்டுமே பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டதால், நாகரிகம் என்ற பெயரில் வசதிகளைப் பெருக்கிக் கொண்டானே தவிர, தன்னைப் பற்றி அறியத் தவறிவிட்டான்.
சேர்ந்து சமுதாயமாக வாழ்ந்ததால், அதைக் கட்டிக் காக்கும் முயற்சியில் பல ஏற்பாடுகளை உருவாக்கினானே தவிர, தன்னுடைய உடல் அமைப்பும், அதிலிருந்து செயல்படுகின்ற மனமும், அந்த மனம் பிரபஞ்சப் பேராற்றலோடு கொண்டு இருக்கின்ற தொடர்பும் எத்தன்மையானது என்பதைப் பற்றி அவன் அதிகம் சிந்திக்கவில்லை. இதன்விளைவாக நாகரிகம் வளர்ந்தது. சாதனங்கள் பெருகின. மனிதன் தன்னுடைய மன வாழ்க்கையைப் பெருமளவுக்கு சுருக்கிக் கொண்டுவிட்டான் நினைப்பது மட்டும்தான் மனத்தின் வேலை என்கிற தவறான முடிவுக்கு வந்துவிட்டான். அவன் உணர்ந்த மனம் வேறு. நிஜமான மனம் வேறு
நாம் உணர்கின்ற மனம் ஓர் எல்லைக்கு உட்பட்டது. அது நாமே வகுத்துக் கொண்ட எல்லை. பழக்கவழக்கங்களால் உருவான எல்லை. நிஜமான மனத்திற்கு எல்லையே கிடையாது. பிரபஞ்சத்திற்கு எவ்வாறு எல்லை இல்லையோ அதைப் போல நிஜமனத்திற்கு எல்லை என்பதே கிடையாது. எதை நினைக்கிறோமோ, அதுதான் மனம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எதை வேண்டுமானாலும் மனத்தால் நினைக்கவும் முடியும், செயல்படுத்தவும் முடியும். இயல்பான மனதின் ஆற்றலுக்கு எல்லையே கிடையாது.
ஆகவே, மனத்தைப் பாதிப்பு இல்லாமல் வைத்துக் கொண்டால் எதையும் நம்மால் சாதிக்க முடியும்.
பிரசவ வேதனை அதிகம் இருந்தாலும், ஒரு தாய் அந்த வேதனை யிலும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறாளே, அது எப்படி அவளுக்குச் சாத்தியமாகிறது? சாதனை புரிந்தவர்கள் இரவு, பகல் தூக்கமின்றி உழைக்கிறார்களே, அதற்குத் தேவையான சக்தி அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
உடலின் அனைத்து நடவடிக்கைகளையும் மனம்தான் கட்டுப்படுத்துகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அந்த மனத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், தேவைப்படுகின்ற உணர்வை நம்மால் உண்டாக்கிக் கொண்டுவிட முடியும்.