
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் போராடித்தான் வெற்றி பெற்று இருக்கிறான். போராட்டம் இல்லாமல் வெற்றியைப் பெறமுடியாது.
சிறு தோல்வியைக் கொண்டு சோர்ந்தவர்களும் இருக்கிறார்கள். வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமும், விடாமுயற்சியுடன் கூடிய உழைப்புமே முன்னுக்குக் கொண்டுவரும்.
ஆரம்பத்திலேயே பெரிய முதல் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என நினைக்கக் கூடாது. சிறிய தொழிலாக ஆரம்பித்து, அதன் நுணுக்கங்களைத் தெளிவாக அறிந்து படிப்படியாக வளர வேண்டும்.
படிக்க வசதி இல்லையே என்று புலம்பிக்கொண்டு படிக்காமல் இருந்து விடக்கூடாது. இரவல் புத்தகம் வாங்கியும், தெரு விளக்கில் படித்தும் வெற்றி பெற்ற மேதைகளும் இருக்கிறார்கள்.
கிராமத்தில் இருந்து ஒருவர். நகரத்திற்கு வேலை தேடிவந்தார். உணவகத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னுக்கு வந்தார். சிறிய உணவகம் ஒன்று ஆரம்பித்தார். கடுமையாக உழைத்தார். அவரின் உழைப்பின் பலன் இன்று பல உணவகங்களை நடத்தி வருகிறார். எத்தனையோ தொழிலாளர்கள் அவரிடம் பசியாறியும், வேலை பார்த்தும் வருகின்றனர்.
சிறிய விதையில் இருந்து பெரிய ஆலமரம் உருவாகி வளர்ந்து நிற்கிறது. கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் செயல்படவேண்டும்.
எடுத்துக்கொண்ட வேலையை ஆர்வத்துடன் செய்கின்ற மனிதனே வெற்றி பெறுவான்.
ஒரு சிறிய உளி பெரிய பாறையை உடைத்து, சிற்பம் உண்டாக்குகிறது. அதுபோல்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள்.
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு சாதனை படைக்க முயற்சி செய்யுங்கள். சிறிய ஊக்குவிப்பு மட்டும் இருந்தால் போதும். உங்களுக்கு யானைப் பலம் வந்துவிடும்.
முன்னுக்கு வரவேண்டும் என்று முயற்சி செய்பவர் களுக்கு, சிறிய விளக்கு கிடைத்தாலே போதும். அதை வைத்துக்கொண்டு பெரிய பாதைகளையும் கடந்துவிடலாம்.காலத்துக்கு ஏற்றவாறு நல்ல வழியில் நம்மை மாற்றிக் கொள்ளலாம்.
பட்டப்படிப்பு படித்து ஒருவர் வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். அவர் படிப்புக்கு ஏற்ற வேலை உடனே அமையவில்லை. அதற்காக அவர் வருத்தப்படவில்லை.
கிடைத்த வேலை சிறிது எனினும் மனப்பூர்வமாகப் பார்த்தார். அந்தச் சிறிய வேலையில் இருந்து கொண்டே தன் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொண்டிருந்தார்.
முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல் அவருக்கு ஒரு நாள் நல்ல வேலையும் கிடைத்தது. அவரது நேர்முகத் தேர்வில் இப்பொழுது என்ன வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றுதான் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எந்தவிதமான ஒளி மறைவுமின்றி. தற்போது பார்க்கும் வேலையைப் பற்றிக் கூறினார்.
"இவ்வளவு படித்துவிட்டு. தகுதிக் குறைவாக உள்ள சிறிய வேலையைப் பார்க்கிறீர்களே! மனதுக்குப் பிடித்துதான் செய்து வருகிறீர்களா?"
"என் மனதுக்குப் பிடித்துதான் செய்து வருகிறேன்"
"காரணம் கூற முடியுமா?"
பட்டம் படித்து முடித்து அதற்கேற்ற வேலை தேடி அலைந்தேன். உடனே வேலை கிடைக்கவில்லை. அதற்காக நான் மனம் தளரவில்லை. கால நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. எனவே எந்த, நல்ல வேலை கிடைத்தாலும் மனம் ஒன்றிச் செய்கிறேன் என்றவரின் பதிலைக் கேட்டதும் அவர் உடனே வேலையில் நியமிக்கப்பட்டார்.
"உங்களின் வேலை செய்யும் ஆர்வத்தையும் நம்பிக்கையுடன் கூடிய உழைப்பு. கால நேரத்தின் பொறுப்பு. உண்மையைக் கூறும் நேர்மை இவற்றைக் கருத்தில் கொண்டு வேலை தருகிறோம் என்றனர்.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும். அதற்காக அந்த வேலைதான் பார்ப்பேன். இல்லாவிட்டால் வேலை பார்க்காமல்தான் இருப்பேன் என அடம்பிடிக்கக் கூடாது.
நல்ல வேலை எந்த வேலையும் பார்க்கலாம். அதற்காகக் கௌரவம் பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. சிலர் வேலை தேடுகிறேன் என வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டே இருப்பார்கள்.
எனவே, கிடைத்ததைக் கொண்டும் முன்னேற்றம் காணலாம்.