

இன்றைய பெற்றோருக்கு பெரும் கவலை தரும் விஷயம், அவர்களின் பிள்ளைகள் ஆர்வமாக படிப்பதில்லை என்பதே. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் “படி படி” “வீட்டுப்பாடம் செய்” என்று திரும்பத்திரும்ப இதே வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக இன்னைக்கு என்ன படிச்சே? டெஸ்ட்டிலே எவ்வளவு மார்க் வாங்கினே? என்பதே பெற்றோர்களின் முதல் கேள்வியாக உள்ளது.
பெற்றோர்களே! இரண்டு விஷயங்களை மட்டும் முதலில் உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். முதலாவது விஷயம் “நான் பள்ளியில் படித்தபோது முதல் ரேங்க வாங்கினேனா?” இரண்டாவது “ஒரு வகுப்பில் படிக்கும் எல்லோருமே முதல் ரேங்க் வாங்க முடியுமா?” இந்த இரண்டு கேள்விகளையும் உங்களுக்குள்ளே கேட்டு பதிலைப் பெறுங்கள்.
இன்றைய பிள்ளைகள் இயல்பாகவே மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். நாம் பிள்ளைகளாக இருந்தபோது செய்யாத விஷயங்களை அவர்கள் சிறப்பாக எளிதாகச் செய்து விடுகிறார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தில் புத்தகங்களைக் கொடுங்கள். அவர்கள் அந்த பருவத்தில் படிக்கமாட்டார்கள். ஆனால் இப்படியும் அப்படியும் திருப்பி அதைக் கிழிப்பார்கள். பரவாயில்லை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அதை அப்படியே விட்டுவிடுங்கள். நாளாக நாளாக அவர்களுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் ஏற்படும். உரிய வயது வந்ததும் அதாவது ஆறு வயதில் வண்ணமயமான படக்கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். முதலில் அவர்கள் படங்களை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குவார்கள். பின்னர் படிப்படியாக எழுத்தைக் கூட்டிப் படிக்கத் தொடங்குவார்கள்.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நூலகங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை அழைத்துச் செல்லுங்கள். அங்கே அமர்ந்து புத்தகம் செய்தித்தாள்களைப் படிப்பவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு நாமும் புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே எழும்.
உங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி நடந்தால் அங்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் ஏதாவது புத்தகங்களை வாங்க விரும்பி உங்களிடம் கேட்டால் மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள்.
உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் அன்று அவர்களுக்கு ஒரு சிறிய புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். அதேபோல உங்கள் பிள்ளைகளின் நண்பர்களின் பிறந்தநாளுக்கு ஒரு புத்தகத்தை வாங்கி உங்கள் பிள்ளையிடம் கொடுத்து அதை அவர்களின் நண்பர்களுக்குப் பரிசளிக்கச் செய்யுங்கள்.
படி படி என்று சொல்லாமல் படிப்பின் அவசியத்தை அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறுங்கள். ஐந்தாவது ரேங்க் வாங்கினால் அவர்களிடம் “ஏன் முதல் ரேங்க வாங்கவில்லை முட்டாள்” என்று திட்டாமல் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்து உன்னால் முடியும் இன்னும் முயற்சி செய் முன்னேறி முதல் ரேங்க வாங்கலாம் என்ற விதமாக அவர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்.
முதல் ரேங்க் வாங்கும் மாணவனோடு உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். முதல் விளைவு முதல் ரேங்க் வாங்குபவனை உங்கள் பிள்ளை பரம எதிரியாகப் பார்க்கத் தொடங்கிவிடுவான். அடுத்தாக படிப்பின் மீது அவனுக்கு இயல்பாகவே எரிச்சல் ஏற்பட்டுவிடும்.
முதல் ரேங்க் வாங்கும் மாணவர்களின் பெரும்பாலோர் நல்ல வேலைக்குப் போவார்கள். கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் பெரிதாக ஏதும் சாதிக்கமாட்டார்கள். சாதாரணமாக படிக்கும் மாணவர்களில் பலர் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களாக மாறியிருப்பதையும் நாம் வரலாற்றில் பார்க்கத்தானே செய்கிறோம்.
படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களை உங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாய் காட்டுங்கள். “நீயும் முயற்சி செய்து படித்தால் அவர்களைப்போல பெரிய பதவிகளுக்குப் போகலாம். மக்களுக்கு சேவை செய்யலாம்” என்று உற்சாகமூட்டுங்கள். உங்கள் பிள்ளைக்கு எந்த துறையில் படிக்க விருப்பம் இருக்கிறோ அதில் அவர்களை ஈடுபடுத்தி உற்சாகமூட்டுங்கள்.
ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது போதனை அல்ல. சொல்ல வேண்டியது அறிவுரைகள் அல்ல. அவர்களுக்கு தினம் தினம் “உற்சாகம்” எனும் டானிக்கைத் தர முயலவேண்டும். இதையெல்லாம் செய்து பாருங்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்கள் பிள்ளை அவர்களாகவே ஆர்வத்துடன் படிப்பார்கள். சாதனை செய்து உங்களுக்குப் பெருமைகளைச் சேர்ப்பார்கள்.