
‘என்னால் முடியும்' என்ற எண்ணம் உங்கள் மனத்தினுள் நுழைய வேண்டுமானால் முதலில் உங்கள் மனத்திலுள்ள வேண்டாத சில குப்பைகளை முதலில் அகற்றுங்கள். அதுவே பெரிய வேலை. சுத்தமான கரும்பலகையில்தான் நாம் எதையும் எழுதமுடியும். ஏற்கனவே தப்புந்தவறுமாகக் கிறுக்கப்பட்ட இடத்தில் நம்மால் ஒன்றும் எழுத முடியாது. அப்படியே நாம் கஷ்டப்பட்டு எழுதினாலும் அது எதுவும் உபயோகமாக இருக்காது.
மனத்தின் குப்பைகள் என்று சொல்வது நம்மில் சிலருக்கு எந்த குணங்கள் என்றும் தோன்றாலும். ஒருவேளை பொய் சொல்வது, புறம் பேசுவது, வேலையே செய்யாமல் செய்ததுபோல் பாவனை காட்டுவது என்று நம்மில் எத்தனையோ பேரிடம் எத்தனையோ கெட்ட குணங்கள் இருக்கும். அவைகளும் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டிய குப்பைகள்தான்.
நான் குப்பை என்று சொல்வது நம்முடைய ஆழ்மனத்தில் ஊறிப் போயிருக்கும் 'நெகடிவ்' சிந்தனைகளை. இந்த எதிர்மறை எண்ணங்கள் நமக்கே தெரியாமல் நம் மனத்தினுள் நுழைந்து நம்மைக் கேட்காமலேயே நம்மை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டின் நூல் கொண்டு வந்துவிடும். அதன் பிடியில் சிக்கி விட்டோமேயானால் அதிலிருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட வேண்டும் என்பதால் அதற்கு பதில் அதை முதலிலேயே நுழைய விடாமல் தடுத்து விடவேண்டும்.
முதலில் எதிர்மறையான எண்ணம் உள்ளவர்களிடம் ஒரு மிகப் பெரிய பிரச்சினை இருக்கும். அவர்களின் இந்த உணர்வு கிட்டத்தட்ட ஒரு தொற்று நோய் போல்தான். காரணம் நான்கு நபர்கள் ஒன்றாக அமர்ந்து ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் இந்த மாதிரி கடுமையான எதிர்மறையான சிந்தனை உள்ளவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தன்னுடைய இந்த எதிர்மறை சிந்தனைத் தாக்குதலையும் தொடர்ந்து நடத்தி ஒரு கட்டத்தில் மற்றவர்கள் கூட ஒருவேளை இவர் சொல்வதுபோல் நடந்துவிடுமோ என்று நினைக்கும் அளவிற்கு இவர்களுடைய பாதிப்பு இருக்கும்.
இந்த எதிர்மறை உணர்வு என்பது உங்களிடமே உள்ள ஒரு குணமல்ல. மாறாக அது நீங்களாக வரவழைத்துக் கொண்ட தேவையில்லாத ஒரு குணம். குறிப்பிட்ட சில காலங்களாகத் தொடர்ந்து இந்த எதிர்மறை சிந்தனை எதையும் தோல்வி நோக்குடன் பார்க்கும் இருந்தால் வெற்றிகள் கை நழுவி போய்விடும்.
உங்களுடைய சொந்த வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையும் இந்த தோல்வி மனப்பான்மை ஆட்சி செய்து நாசம் செய்வதற்கு முன் நீங்கள் அந்த மனப்பான்மையுடன் போராடக் கற்றுக் கொள்ளுங்கள். இந்தத் தோல்வி மனப்பான்மையை ஜெயிப்பதற்கு ஒரே வழி அதோடு போராடுவதுதான் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.