
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு திறமைகள் இருந்தால் மட்டும் போதாது. நல்ல சுபாவமும் வேண்டும். பொறுமை, கருணை, சாந்தம் போன்றவைகள்தான் மனநிலையை சீராக வைக்கும். நீங்கள் அடுத்தவருக்கு நன்மை தேடும்போது உங்களுக்கும் இது கிடைத்துவிடும்.
நல்ல மனநிலை உடையவர்கள் சோகத்தில் கூட தனக்குத் தேவையான ஆறுதலையும் தேறுதலையும் பெறமுடியும். இருண்ட மேகத்திலும் ஒரு ஒளிக்கற்றை அவர் கண்டுபிடித்து விடுவார். அப்படிப்பட்டவராக நாம் ஆகமுடியுமா என்பதைப் பாருங்கள். உங்கள் மனநிலை சீராக இருக்குமெனில் சந்தோஷம் கிரணங்கள் உங்கள் கண்களில் தானே வந்து தங்கிவிடும். அப்போது சுமைகள் சுகமாகிவிடும். வீணான புலம்பித் நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்.
பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் எல்லோரும் உத்சாகமும் நம்பிக்கையும் பெற்றவர்களாகவே விளங்குவார்கள். அவர்களுடைய விசாலமான பார்வை இருண்ட மேகத்திடையே ஒளிக்கீற்றை விரைவாக கண்டுபிடித்துவிடும். மற்றவர்கள் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
தீமைகளில் நல்லதைப் பார்ப்பதும், நோய்களில் தங்கள் சுபாவத்தின் மூலமே ஆரோக்கியத்தைப் புதுப்பித்துக் கொள்வதிலும், துயரத்திலிருந்து துணிச்சல் பெறுவதும் எல்லோருக்கும் வந்துவிடுமா என்ன?. எப்போதுமே வாழ்க்கைக்கு இரண்டு பக்கங்கள், நாணயத்தைப் போல். எதை தேர்வு செய்வது என்பது அவரவர் மனோசக்தியைப் பொறுத்தது.
மன வேகத்தை எப்படிச் சமாளிப்பது. அதற்கு மூன்று உபாயங்கள் உண்டு ஒன்று, இரண்டு, மூன்று உற்சாகம்தான். களிப்பு நிறைந்த இதயமே சகலநோய்களையும் தீர்க்கின்ற சஞ்சீவினி. உத்சாகமே அருமருந்து என்கிறார் டாக்டர் மார்ஷல் ஹால். சுயசரிதையை புரட்டிப் பாருங்கள்.
மகத்தான மனிதர்கள் எல்லோரும் உத்சாகம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். பல சோதனைகளிலும் துன்பங்களிலும் சிக்கி அவதிப்பட்ட மில்டன் கூட இணக்க சுபாவமும் உத்சாகமும் கொண்டிருந்திருக்கிறார். குருடாகி நண்பர்களை இழந்த போதும் நம்பிக்கையை விடவில்லை. வயது ஏற ஏற இதயம் வளர்ச்சியடைவது இல்லை. அது கடினப்பட்டு போகும் என்றார் டாக்டர் செஸ்டர் ஃபீல்ட்.
அறிவியல் உன்னதர்களாகிய கலிலியோ, ந்யூட்டன், லாப்லாஸ் போன்றவர்கள் பொறுமை உத்சாகம், உழைப்பு கொண்டவர்களாக திகழ்ந்தனர். அன்பின் வலிமையில் பாதிகூட அதிகாரத்திற்கும் கிடையாது என்றார் லே ஹண்டர்.
சின்ன சின்ன தொந்திரவுகளையும் பூதக்கண்ணாடி வழியே பார்த்து கவலைப்படுபவர்கள், நமக்கு சின்னதாக வருகிற எரிச்சலும், அற்பமான துயரங்களும் நம்முள் விஸ்வரூபம் எடுக்கிறது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த உலகம் உங்கள் கண்களுக்குப்படும்.
நல்லதை பின்பற்றுவதும் தீய சிந்தனைகளை விலக்குவதும் உங்களால் முடிகிற காரியம்தான். மனித மனம் கடுமையானவற்றை எதிர்க்கும். மென்மைக்கு வளைந்து கொடுக்கும்.
சாந்தமான வார்த்தை கோபத்தைக் தணித்துவிடும். அன்பு பாலை நிலத்திலும் பயிர் வளர்க்கும். நம்பிக்கைதான் எல்லா முயற்சிக்கும், உழைப்புக்கும் தாய். ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் மனோபாவத்தை நல்லவிதமாக வைத்துக்கொள்ளுங்கள்.