
என் தோழி எப்பொழுதும் கல்லூரியில் இருக்கும் லைப்ரரியில் புத்தகம் எடுத்து படிப்பாள். அப்படி படிப்பவள் எங்கள் அனைவருக்கும் அழகாக அதை விவரித்துக் கூறுவாள். அவள் கூறுவதை கேட்பதற்காகவே முன்கூட்டியே பரீட்சை நாட்களில் கல்லூரிக்கு வருவதும் உண்டு.
ஒருமுறை அதுபோல் புத்தகம் எடுக்க சென்றபொழுது, அவள் விருப்பப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை எல்லாம் மற்றவர்கள் எடுத்துச் சென்று விட, அவளுக்கு யாரும் எடுக்காமல் விட்ட ஒரு புத்தகம்தான் கிடைத்தது. வேறு வழி இல்லாமல் அதை எடுத்து வந்தாள். எடுத்து வந்தவளுக்கு அதைப் பிரித்துப் பார்க்கவும் பிடிக்கவில்லை. இவ்வளவு சிறிய புத்தகத்தில் அவ்வளவு பெரிதாக என்ன எழுதியிருக்கப்போகிறது. இந்த முறை செமஸ்டரில் நாம் சரியாக மதிப்பெண் வாங்கிவிட முடியாது. அவ்வளவுதான். இப்படி ஒரு ஏமாளியாக இருந்து விட்டோமே என்று மனக்குழப்பத்தில் அழுதுக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டாள்.
தூங்கி எழுந்ததும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பரீட்சை. அதற்கு தயார்செய்ய வேறு வழி இல்லாமல் அந்தப் புத்தகத்தையும் திறந்து படிக்க ஆரம்பித்தாள். அதில் அழகாக, சின்னச் சின்ன வாக்கியங்களாக, பக்க தலைப்புகள் கொடுத்து நிறைய விஷயங்கள் எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு படிப்பதற்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
ஆர்வம் மிகுதியால் இந்த புத்தகத்தையா நாம் வேண்டாம் என்று ஒதுக்கினோம்? என்று ஒரே இரவில் அப்படியே படித்து முடித்துவிட்டு நிம்மதியாக தூங்கிவிட்டாள். பரிட்சைக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் அவளிடம் கேள்வி கேட்பதற்கும், அவளின் விளக்கம் கிடைப்பதற்கும் காத்துக்கிடக்கும் தோழிமார்கள் யாரும் அன்று வரவில்லை.
ஏனெனில் அவள் எடுத்த புத்தகம் மிகவும் சிறியது என்பதால், அதில் என்ன எழுதி இருந்து விடப்போகிறது என்ற அலட்சியம்தான். பிறகு அவளும் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் பரிட்சை எழுதிவிட்டு காத்திருந்தாள்.
ரிசல்ட் வந்தவுடன் அந்த குறிப்பிட்ட ப்ரொபசர் வகுப்பிற்கு வந்து என் பாடத்தில் ஒரு பெண் எக்ஸ்டீரிமாக மதிப்பெண் வாங்கி இருக்கிறாள். அவளுக்கு கைதட்டுகள் என்று கூறி, அவள் பெயரைச் சொல்லி எழுந்து நிற்க சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம் அந்த சப்ஜெக்ட்டில் இவள் எப்படி? என்பதை கேள்வி கேட்க ஆரம்பித்தோம்.
அதற்கு அவள் சொன்ன பதில் நானும் அலட்சியமாகத்தான் அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்கத்தான் எழுதப்பட்டிருந்த ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
அதைப் படிப்பதற்கு எனக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகிவிட்டது. ஆதலால் இனிமேல் எந்த எழுத்தாளர் எழுதியிருந்தாலும் அந்த புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது, எப்படி எழுதி இருக்கிறார்கள் என்பதை படிக்கவேண்டும் என்று அதிலிருந்து புரிந்து பாடம் கற்றுக் கொண்டேன் என்று கூறினாள்.
அதன் பிறகு நாங்களும் அவள் வழியைப் பின்பற்ற ஆரம்பித்தோம். ஆதலால் புத்தகம் பெரியதா சிறியதா என்று பார்ப்பதை விட, அதில் உள்ள விஷயம் என்னவென்று பார்ப்பதுதான் அறிவின் ஆழத்தை மெய்ப்பிக்கும். இப்படி நாம் சிறியது என்று நினைக்கும் அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பது புரியவந்தது.
கடுகைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்தி குறுகத் தரித்தக் குறள் என்று படிக்கிறோம்.
எண் என்ப ஏனைய எழுத்தென்ப இவை இரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிறார் வள்ளுவர்.
இதையே இன்னும் சுருக்கி எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிறார் ஔவையார். இப்படி இரண்டு அடியிலும் நாலே வார்த்தையிலும் மிகப்பெரிய விஷயத்தை கூறிய திருவள்ளுவரையும் அவ்வையாரையும் நாம் போற்றாமல் இருக்கிறோமா? இருக்கத்தான் முடியுமா? எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக அவர்களைத்தானே கூறுகிறோம்.
ஆக கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரிது என்பவற்றையெல்லாம் நினைவில் வைத்து, எந்த புத்தகத்திலும் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவோம் ஆக!