
உயர்ந்த வாழ்க்கைக்கு அடிகோலுவதில் எளிமையும் ஒன்று! எளிமையாக நடப்பது நம் ஏழ்மையைக் காட்டிவிடும், பிறர் நம்மை ஏழ்மையானவர்கள் என்று எண்ணிவிடுவார்கள் எனச் சிலர் கருதுகிறார்கள். அந்தச் சிலருக்காக நாம் வாழவில்லை.
இந்த நாட்டில் மிகப்பலர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான். வசதியிருந்தும் - வாய்ப்பிருந்தும், பளபளப்பான உடைகளை அணிந்து படாடோபம் காட்டாமல் இருக்கிறார். ஆடம்பரத்தின் உச்சியிலேறி ஆட்டம் போடாமல் இருக்கிறார். இவ்வளவு வசதியிருந்தும் தம்மைப்போல் சாதாரண உடைகளை உடுத்துகிறார்' என்ற நற்பெயரே அந்த எளிய பண்பாளரை அண்டும்.
எளிமை என்ற பெயரில் கஞ்சத்தனமாக கந்தல் உடையை அணிய வேண்டும் என்பதில்லை. இது உண்மையிலேயே ஏழ்மையைக் காட்டிவிடும். நம்மைப்பற்றி பிறர் உருவாக்கிக்கொண்ட நல்ல எண்ணமும் போய்விடும்.
விழாக்களுக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போதும் மிக முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கச் செல்லும் போதும் அதற்குத் தக்கபடி உயர்ந்த உடைகளை உடுத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட உடைகளில் இயன்றவரை அந்தந்த நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பும் இருக்கவேண்டும்.
சென்னை மாநகராட்சியின் தந்தையாக விளங்கியவர் சர்.பிடி தியாகராயர் அவர் காலத்தில் இங்கிலாந்திலிருந்து சென்னை வருகை தந்த வெள்ளைக்கார ஆளுநரை வரவேற்க சம்பிரதாயப்படி மேனாட்டு உடையை அணிய வேண்டுமென்றார்கள்.
தியாகராயரோ, தாம் எப்போதும் அணியும் வெள்ளாடைதான் அணிந்து வரவேற்பேன் என சம்பிரதாயத்தையே உடைத்தெறிந்தார். வெள்ளைக்கார ஆளுநரோ, தியாகராயரின் உள்ளத் திண்மையைப் பெரிதும் பாராட்டினார். அப்படிப்பட்ட செயல்களாலன்றோ, இன்றும் 'வெள்ளாடை வேந்தராக' நம் உள்ளத்தில் பதிந்துள்ளார்.
எத்தரப்பினரையும் கவரும் வண்ணம் நம் அணுகுமுறை இருக்க வேண்டும். உடையில் எளிமை, உணவில் எளிமை, இருப்பிடத்தில் எளிமை என எளிமைக்கு மாபெரும் எடுத்துக் காட்டாகவே விளங்கியவர்தான் போரறிஞர் அண்ணா என்பது நாடறிந்த செய்தியேயாகும்.
உலகப் பெரியார் காந்தி, தந்தை பெரியார் போன்ற சமுதாய மேம்பாட்டுச் சிற்பிகள், எளிமையில் ஏற்றம் பெற்றவர்கள்.
தீரமுடன் போராடி அமெரிக்காவை வென்ற வியட்நாம் அதிபர் ஹோசிமின் மிக மிக எளிமையானவர். இரண்டு உடைகள்தான் வைத்திருப்பார். தினமும் துவைத்துத் துவைத்தே அணிந்து கொள்வார்.
ஹோசிமின் இந்தியாவுக்கு வருகை தந்த போதுகூட தன் உடைகளைத் தாமே துவைத்துப் போட்டுக் கொண்டாராம். என்னே! அவரது எளிமை.
எளிமை, தன்னடக்கத்தின் பெரும் பண்பாகும். தன்மதிப்பை உயர்த்தவல்லது. சிக்கனத்தைத் தந்துநம் வாழ்வுக்குச் சிறந்த பாதுகாப்பைஅளிக்கிறது. இயன்றவரை பிறருக்கு உதவிசெய்யும் இனிய பண்பையும் அளிக்க வல்லது, எளிமை.
இத்தகைய அரிய பண்பான எளிமையை எளிமையாகவே கடைபிடித்து, வாழ்வில் என்றும் ஏற்றம் பெறுவோமாக.