
வாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் அதுவே முழுமையான மகிழ்ச்சியைத் தந்துவிடுமா? எல்லோரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டாலும் அடுத்தநொடி பணம் சம்பாதிக்கும் ரேசில் பறந்தோடுகிறார்கள்.
நிறையப் பணம், ஆடம்பரமான அறைகள் கொண்ட நவீன அடுக்குமாடி வீடு, பி.எம். டபிள்யூ கார், விலையுயர்ந்த ஆடைகள், புஷ்டியான பாங்க் பேலன்ஸ் இவை ஒருவருக்கு சில காலத்துக்கு மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்திருப்பவர்கள் பணக்காரர்களைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். மன அழுத்தமின்றி, உடல் ஆரோக்கியத்துடனும், வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களைச் சமாளிப்பவர்களாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
பணத்தை அதிகமாக வைத்திருப்போர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதன்படி, மகிழ்ச்சி என்பது பணத்திலோ அல்லது வெற்றியிலோ இல்லை எனத் தெரிய வருகிறது.
இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களது கடுமையான வேலைகளுக்கு, இடையே நண்பர்களுடன் அமர்ந்து ஒரு கப் தேநீர் அருந்துவதிலும் அவர்களுடன் உரையாடுவதிலும் இன்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். எவ்வளவு அர்த்தமில்லாத, வெட்டியான அரட்டையானாலும் உற்சாகமாகத்தான் இருக்குமாம்!
வாழ்க்கை என்பது ஒரு கலை. நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் திறமையை, வழிமுறைகளை, அதன் சூட்சமத்தைத் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
பணம் சம்பாதிப்பதற்கு வேலைக்குப் போகிறோம். சம்பாதிப்பதை, உணவுக்கும், துணிமணிக்கும் இன்னும் இதர தேவைகளுக்கும் செலவழிக்கிறோம். தேவைக்கு மேல் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? இப்போது இருப்பதை விட வசதியாக வாழ்வதற்கு. அப்படியானால் நாம் தேடிய மகிழ்ச்சி கிடைத்துவிட்டதா?
பணமானது நாம் வாழ்க்கையை வாழ ஓர் ஆதார சக்தி. அவ்வளவே! சிலரிடம் மிக அதிக அளவு பணமிருக்கிறது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. வெறுமையாக உணர்கிறார்கள்.
நல்ல வாழ்க்கை வாழ்வதென்றால், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது.
பணம் அநேகத் தேவைகளைத் தீர்க்கக்கூடியதுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பணம் சேர்ப்பதிலும் பல நேரங்களில் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆன்மீக சிந்தனை, அமைதி, நன்றியுடன் வாழும் வாழ்க்கை, எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதிருப்பது, மற்றவர்களுக்கு உதவுதல் போன்றவை மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதிகமாக ஆசைப்படாதீர்கள். வாழ்க்கையை சந்தோஷமாகவும், சமநிலையிலும் பாருங்கள். மகிழ்ச்சி என்பது ஒரு இடமல்ல நாம் சென்றடைவதற்கு, அது கண்ணாடி போன்றது, அதை நாம் இருக்கும் இடத்துக்கு வரவழைக்க வேண்டும்.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும், என்னதான் அலுப்பு, களைப்பு இருந்தாலும் சாப்பிட்டு முடித்ததும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாரும் ஒன்றாகக் கூடி அரட்டை அடியுங்கள். அன்றைக்குப் பார்த்த, படித்த, கேட்ட, நடந்த நிகழ்வுகளைப் பற்றி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுங்கள்.
இந்த அரட்டையின்போது நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் குறித்தும் பேசுங்கள். சமூக சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப கௌரவத்தைக் குறித்தும் பேசுங்கள். அது இளைய தலைமுறையினரிடையே தனக்கும் குடும்ப கௌரவத்தைக் காக்கும் கடமை உள்ளது என்பதைப் புரிய வைக்கும். இதனால் தவறுகள் குறையும். ஒவ்வொருவரும் செய்த செலவுகளைக் கட்டாயம் பதிவு செய்யுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது, சிக்கனப்படுத்துவது பற்றிய தெறிவு கிடைக்கும்.
அரட்டை அடித்தால் தகவல் பரிமாற்றம் நடக்கும். நெருக்கம் அதிகமாகும். அறிவு வளரும். மகிழ்ச்சி கூடும். இதை நடை முறைப்படுத்திப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.