
ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதிரே மிகப்பெரிய யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. அருகில் யானைப்பாகன் நடந்து வந்துகொண்டிருந்தார். இதைப்பார்த்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அசுர பலம் பொருந்திய யானையின் கால்களில் சங்கிலி இல்லை. யானைக் கூண்டில் அடைப்படவில்லை. ஆனால், யானை அமைதியாக யானைப் பாகனின் கையசைவைப் பார்த்து நடந்து வந்துகொண்டிருந்தது.
"இந்த யானை நினைத்தால் ஊரிலுள்ள பலரையும் அழிக்க இயலும். ஆனால், இது அமைதியாக வருகிறதே? தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வுகூட இதற்கு இல்லையே! அது ஏன்?"- என்று யானைப் பாகனிடம் கேட்டார் அவர். யானைப்பாகன் மெதுவாக சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் தந்தார்.
"இந்த யானை சிறியதாக இருக்கும்போது நாங்கள் அதன் காலில் இரும்புச் சங்கிலியை கட்டிவிடுவோம். இந்தச் சங்கிலியை இளம் பருவத்திலேயே இந்தயானை இழுத்து இழுத்து பார்க்கும். எவ்வளவுதான் இழுத்தாலும் அந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு அந்த யானையால் வெளிவர முடியாது.
எனவே, தொடர்ந்து முயற்சி செய்தும் சங்கிலியை அறுத்துக்கொண்டு வெளிவர முடியாத யானை, தன்னால் இந்த சங்கிலியை நீக்கிவிட்டு வெளிவரமுடியாது என உறுதியாக நம்புகிறது.
இளம்வயதில் இந்த யானை கொண்ட நம்பிக்கை மிகவும் ஆழமானது. அழுத்தமானது. இதனால்தான், இந்த யானை பெரியதாக வளர்ந்த பின்பும், தன்னால் இந்த சங்கிலியை உடைத்துவிட்டு வெளிவர முடியாது என எந்த முயற்சியும் செய்யாமல், எங்கள் கை அசைவுக்கு ஏற்ப அமைதியாக நடந்து வருகிறது" என்றார் யானைப்பாகன்.
பலம் பொருந்திய யானையைப் போன்றே இன்றைய இளைஞர்களில் பலர் "என்னால் இந்த காரியத்தை செய்ய முடியாது” – என மிக அழுத்தமாக நம்புகிறார்கள். (Motivational articles) 'இந்த எதிர்மறை நம்பிக்கை தங்களின் தன்னம்பிக்கையை தகர்த்து விடுகிறது என்பதை உணராமலேயே இவர்கள் செயல்படுகிறார்கள்.
"எல்லாம் என் தலைவிதி" தன்னம்பிக்கையை தகர்த்துவிடுகிறது” -என முடிவு செய்து எந்தவித முயற்சியும் செய்யாமல் வெற்றிபெற ஆசைப் படுகிறார்கள். இதனால்தான், அவர்கள் ஆசைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.
வெற்றியைப் பெற விரும்புகின்ற 'இளைஞர்கள் தன்னம்பிக்கை என்னும் நன்னம்பிக்கையை இளம்வயதிலேயே மனதில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கைதான், வாழ்க்கையில் மனநிறைவையும், மனமகிழ்வையும், வெற்றியையும் தரும்.
ஒருவர் தனது இளம் வயதிலேயே தனது மனநிலையை எப்படி வைத்துக்கொள்கிறாரோ? அதைப்போலவே அவரது வாழ்க்கை அமைகிறது. மனதைரியத்துடன் இளமையில் வாழப்பழகியவர்கள் முதுமையில் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.