

எந்த ஒரு செயலை செய்யவேண்டும் என்றாலும் அறிவு எவ்வளவு தேவையோ அதே அளவு துணிச்சலும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் எடுத்த காரியத்தில் தொய்வின்றி வெற்றிபெற முடியும்.
அன்று வயலில் உழுவதற்கு பயன்பட்ட ஏர், கலப்பை இன்று டிராக்டராக வடிவெடுத்தது. இதனால் வேலை நேரம் குறைந்து ஆள் கிடைக்காத குறையை தீர்க்க முடிகிறது. அன்று அனைத்திற்கும் ஓலைச்சுவடிதான். அது இன்று வலைத்தளமாக மாறியது.
அன்று அனைத்திற்கும் பயன்பட்டது கட்டை வண்டிதான். இன்று அது பேருந்து, இரயில் கப்பல், விமானம் என்று வளர்ச்சி அடைந்துள்ளது.
இப்படி மனிதன் ஒவ்வொன்றிலும் தன் தனித்திறமையை காட்டி நல்ல அறிவார்ந்த சிந்தனையோடு துணிச்சலாக முடிவெடுத்த பொழுதுதான் மாற்று பொருளை கண்டுபிடித்து, அதை உலகிற்கு அறிமுகப்படுத்த முடிந்தது. அப்படி அறிமுகப்படுத்தியதால்தான் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றம் அடைந்து, இன்று வேற்று கிரகத்திற்கு சென்று பயணம் செய்யும் அளவுக்கு அறிவும், துணிவும் மனிதர்களை உயர்த்தி இருக்கிறது.
உலகத்தாரின் கருத்தை பின்பற்றி இவ்வுலகில் வாழ்வது மிகவும் எளிது. அல்லது நம் கருத்தைக்கொண்டே தனிமையில் வாழ்வதும் கூட எளிதுதான். ஆனால் கூட்டத்தின் இடையே சுவை குன்றாமல் தனிமையின் தனித்துவத்தை, தனி சுதந்திரத்தை நிலை நாட்டுபவனே மகத்தான மனிதன் என்றார் எமர்சன்.
அதற்கு இலக்கணமாகக் கூறவேண்டும் என்றால் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸை. ஸ்டீவ் ஜாப்ஸ் எளிதாகச் சொன்னார். "மாறுபட்டு சிந்தியுங்கள்" (Think Differently) அதுதானே அவரை உலகப் புகழ்பெற்றவராக ஆக்கியது.
அன்றிருந்த வழியில் இருந்து மாறுபட்டு மனித குலத்திற்கு அறிவு வெளிச்சத்தை தந்தவர்கள் ஐன்ஸ்டீன், கலிலியோ, எடிசன் போன்ற விஞ்ஞானிகள்தான். இவர்கள் மாற்றி தனித்தன்மையோடு சிந்தித்ததால்தான் மனிதர்களான இவர்கள் விஞ்ஞானிகளானார்கள். இந்த மாறுபட்ட சிந்தனை என்பது ஒருவொரு துறையிலும் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்து வருகிறது. கலைத்துறையில் நாட்டுப்புறப் பாடல்களின் ஒவ்வொரு விதமான தொடர் முயற்சியின் பரிமாண மேம்பாடுதான் பிகாசோ, அல்லது பீத்தோவான் என்று மாறுபட்ட சிந்தனைக்கு வித்திட்டவர்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.
ஒரு மனிதன் ஒரே பாதையில் தினசரி செல்லும்பொழுது அதில் நிறைய கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். அதை விடுத்து காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்யும்பொழுதே ஒவ்வொரு பாதையாகச் சென்றால் அங்கு வந்து புதிதாக தோன்றியிருக்கும் கடைகளில் இருந்து, வித்தியாசமான தொழில் செய்பவர்கள் என்று பார்ப்பதற்கும் பழகுவதற்கும் வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் அதிகம் கிடைக்கும். அந்தச் சந்தர்ப்பங்கள்தான் நம் அறிவைத்தூண்டி புதியவற்றை படைப்பதற்கு ஆயத்தப்படுத்தும்.
ஆதலால் எப்பொழுதும் தனித்தன்மையோடு, மற்றவர்கள் சென்ற வழியே செல்லாமல் புது வழி பற்றி சிந்தித்து அதில் துணிந்து நடப்பதன் மூலம் எத்தகைய தற்காலிக இழப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், தோல்விகள், துன்பங்கள் தொடர்ந்தாலும் இறுதியில் நிரந்தர வெற்றியும், நீண்ட புகழும் கிடைக்கும். அப்படி வித்தியாசமாக தன்வழி தனிவழி என்று சிந்தித்த மனிதன்தான் மாமனிதனாக வரலாறு படைப்பான். அந்த வரலாறு அப்பொழுதே புகழ்பெறத்தக்கதாக இல்லை என்றாலும் பிற்காலத்தில் போற்றப்படுபவையாக இருக்கும்.
ஆதலால், புதுமையாய் சிந்திப்போம்; புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம்!