

செல்வத்தை நிறைய சம்பாதிப்பதால் மட்டும் ஆனந்தமாக வாழ்ந்துவிட முடியாது. பொருள் நிறைய சேர்த்து ஆனந்தமாக வாழ்வதற்கான வழி ஒன்று இருக்கிறது. அதுதான் நிறைய சம்பாதிக்க வேண்டும். நிறைய தர்மம் செய்யவேண்டும் என்ற வழியாகும். அவ்வாறு செய்வதால் ஆனந்தம் நம்மை விட்டு அகலாமல் இருக்கும்.
மக்களாக பிறந்தவர்கள் எல்லோருமே தமக்காக வாழவேண்டும் என்று எண்ணாமல் பிறர் நலம் கருதியும் வாழவேண்டும். பிறர் இன்பம் அடைவதை கண்டு நாமும் இன்பமுற வேண்டும். பண்டைக்காலத்தில் ஊரில் பஞ்சம் வந்தபோது செல்வந்தர்கள் பலர் கஞ்சித் தொட்டிகளை வைத்து பசிப்பிணி போக்கும் மருத்துவராய் விளங்கினர். தொண்டுள்ளம் கொண்டவர்கள் நினைத்தால் நாட்டில் வறுமை என்ற ஒன்றே இருக்காது .துயரம் தலை தூக்காமல் எல்லோருமே நல்வாழ்வு வாழ்வர்.
தன்னலம் மட்டும் கருதாமல் சமுதாய நலனையும் பேணி, உலகப் பொதுநலம் உணர்ந்து செயலாற்றுபவர்களே பெரியோர்கள் ஆவர். அவர்களே மக்கள் தலைவர்களாக திகழத் தகுதி வாய்ந்தவர்கள். பிறருக்கு கொடுத்து உதவுவது என்பது பெரும் பேறாகும். நீங்கள் ஆனந்தமாக வாழ அப்பெரும்பேற்றைப் பெற்றாக வேண்டும்.
ஒவ்வொருவரும் ஆனந்தமாய் வாழ வேண்டுமானால் அவரவர் உயர்வுக்கு மட்டும் பாடுபடாமல் பிறர் உயர்வுக்கும் பாடுபடுதல் வேண்டும்.
நீங்கள் நுகரும் இன்பம் எல்லாம் பொதுநல இன்பமாக இன்பத்துள் இன்பமாக இருக்க வேண்டும். பிறருக்கு நீங்கள் தர்மம் செய்யும்போது மனமுவந்து தர்மத்திற்காகவே செய்ய வேண்டும். பேறுக்காகவோ, புகழுக்காகவோ தர்மம் செய்யக்கூடாது.
ஏனென்றால் ஒருவன் பிறருக்கு தர்மம் செய்வதால் தனக்குத் தான் நன்மை தேடிக்கொள்கிறான். மற்றவருக்கு நல்லவராக இருக்கும்பொழுது உங்களுக்கும் நீங்கள் நல்லவராகவே இருக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும்பொழுது உங்களுடைய கை உயர்ந்திருப்பதைக் கண்டு இறுமாப்பு அடைந்து ஏளனமாக எண்ணாதீர்கள். ஏனென்றால் அவன் உங்களுக்கு உபகாரம் செய்வதற்காக ஒரு வாய்ப்பு அளித்து பெரும் நன்மை அளிக்கிறான் என்பதை நீங்கள் நன்கு உணரவேண்டும்.
அப்பொழுதுதான் உங்கள் மனம் ஆனந்தமடையும் .அறம் செய்வதன் மேலான தன்மை என்னவென்றால் நீங்கள் கொடுப்பதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகிறீர்கள்.
ஒலியை விட எதிரொலி அதிகமாகவே இருக்கும். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது பைபிள் வாக்கு. "அறம் செய்ய விரும்பு" என்பது அவ்வையார் கூற்று.
வருந்தி நிற்பவருக்கு செய்யும் உதவிதான் மிகப்பெரிய உதவியாகும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனடியாக அதை செய்துவிட வேண்டும் சிறிது தாமதித்தாலும் மனம் மாறிவிடும்.
பிறருக்கு தொண்டு செய்யும் நல்ல உள்ளத்தால்தான் ஒருவனது பிறவிக்கு பேறு கிடைக்கிறது. இதனை உணர்ந்து வாழ்வில் அடுத்தவருக்கு தர்மம் செய்தால் வாழ்வில் மேலான நிலையை எளிதில் அடையலாம்.