
வெற்றிக்குத் தேவை பணமோ, வயதோ, அந்தஸ்தோ இல்லை என்பதை நிறைய பேர் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். "என்னிடம் இவ்வளவு பணம் இருந்திருந்தால் நான் ஜெயித்து இருப்பேன்" என் வயது போய்விட்டது இனி என்னால் என்ன செய்ய முடியும்? "என்னிடம் தகுந்த கல்வி இல்லை அதனால் நான் முடங்கி கிடக்கிறேன்" என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வெற்றியை நோக்கி நகராமல் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள் சாதாரண மனிதர்களாகவே இருந்து மறைகிறார்கள்.
ஆனால் விடாத ஆர்வமும் முயற்சியும் தன்னம்பிக்கையும் ஒருவரை வெற்றி சிகரத்தில் ஏற்றிவிடும் என்பதற்கு பல பேர் நம்மிடையே உதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒரு சாதனைப் பெண்ணைப் பற்றித்தான் இங்கு காணப்போகிறோம்.
பெற்ற தந்தையாலேயே ஆதரவற்ற குழந்தை என்று விடுதியில் விடப்பட்டவர், இளம் வயதிலேயே மணமாகி ரூ.5-க்கு வயல் வேலை செய்தவர் இன்று அமெரிக்க சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆனால் இதுதான் உண்மை.
1970 ஆம் ஆண்டு தெலுங்கானா, வாரங்கல்லில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 4 சகோதரிகளுள் ஒருவராக பிறந்தவர் அனிலா ஜோதி ரெட்டி. வறுமையால் இரண்டு பெண் பிள்ளைகளைத் தாயில்லாப் பிள்ளைகள் என்று பொய் சொல்லி இல்லத்தில் சேர்த்தார் அவர் தந்தை. அதில் ஜோதியும் ஒருவர்.
5ம் வகுப்பில் சேர்ந்து விடுமுறை நாட்களில் கூட மேற்பார்வையாளரின் வீட்டில் வேலை செய்து, அங்கேயே உண்டு உறங்கிய ஜோதி பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வீட்டிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டு அவரைக் காட்டிலும் வயது கூடுதலான கல்வியறிவற்ற விவசாயிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். பின் 5 ரூபாய் சம்பளத்தில் நெல் வயலில் கூலி வேலை செய்த ஜோதி 18 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார்.
சமைக்க ஸ்டவ் கூட வாங்க முடியாமல் விறகடுப்பில் வாடிய வறுமையானச் சூழல். அந்நிலையில் ஜோதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது 1989 ஆம் வருடம். நேரு யுவ கேந்திரா சார்பில் கிராம இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட வகுப்புகள்.
அந்த வகுப்புகளில் பாடம் கற்றுத்தர படித்தவர்கள் இல்லாத நிலையில் ஜோதி அழைக்கப்பட்டார். அத்துடன் இரவு நேரங்களில் தையல் வேலையில் ஈடுப்பட்டார். தட்டச்சும் கற்றுக் கொண்டார். வேலையில் அவர் காட்டிய உத்வேகமும், வித்தியாசமான முயற்சிகளும் அவரை யுவ கேந்திர மண்டல மேற்பார்வையாளராக உயர்த்தியது.
கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட ஜோதி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து நீண்ட தொலைவில் இருந்த பள்ளியில் அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இடையில் தான் தைத்த துணிகளை பயணம் செய்யும் பேருந்துகளில் விற்றார். ஓய்வு நேரத்திலும். வாழ்வில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற வாய்ப்பளிக்கும் பல பணிகளில் ஈடுபட்டவருக்கு அமெரிக்கா சென்று சம்பாதிக்கும் கனவு வந்தது. காரணம் அங்கு சென்று வளமாக இருந்த உறவினர்.
அங்கு செல்ல அவசியமான கணினியை கற்க ஆரம்பித்தார். கடவுச்சீட்டு, விசாவுக்கு பணம் சேர்க்கத் துவங்கினார். பணம் சேர்ந்ததும் தன் இரு மகள்களையும் விடுதியில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற வேட்கையோடு சென்ற ஜோதிக்கு அமெரிக்கா பல சோதனைகள் தந்தது.
பலவிதமான பணிகளை செய்து இறுதியில் வெர்ஜீனியாவில் மென்பொருள் ஆளெடுப்பாளாராக பணியில் சேர்ந்தவர் மகிழ்வதற்குள் விசா பிரச்னையால் அந்த வேலையும் பறிபோனது. விசா காரணமாக தான் சந்தித்த மனவேதனைகளை வேறு எவரும் அனுபவிக்கக் கூடாது என்று விரும்பியவர் கடினமாக உழைத்து அத்துறையில் அனுபவங்களை பெற்றவர் இன்று அரிசோனாவில் இயங்கி வரும் "கீ சாப்ட்வேர் சொல்யூஷன்" எனும் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தின் இயக்குனர்.
இது ஒரே காட்சியில் வரும் சினிமா வெற்றி அல்ல. பல வருட இடைவிடாத போராட்டத்திற்கும், வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்ப்போமே என்று உத்வேகம் தந்த துணிச்சலுக்கும் கிடைத்த பரிசான வெற்றிக்கனி.
இன்று பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் பாடத்தில் இடம் பிடித்திருக்கும் முக்கிய நபராக மாறியிருப்பதோடு, இந்தியா வரும்போதெல்லாம் ஆதரவற்ற குழந்தைகளைத் தேடிப்போய் உதவுபவராக விளங்கும் ஆச்சரியம் தரும் உண்மைக் கதையின் கதாநாயகியாக உள்ளார்.
இவர் போன்றவர்களின் வெற்றிக் கதைகள் நம்மையும் சாதனை நோக்கி செலுத்தும் உந்து சக்தி எனலாம்.