
வெற்றியும் தோல்வியும், சராசரி மனிதனின் வாழ்க்கையில் வந்து போகிற சாதாரணச் சங்கதிகளே. இவற்றை எண்ணி எண்ணி வெந்து போவது என்பதுதான் வேண்டாத வீண் சமாச்சாரம். நெஞ்சிலே துணிவில்லாதவனுக்குத் தோல்விகள் எல்லாம் தடைக்கற்கள் துணிவுள்ளவனுக்கோ, தடைக்கற்கள் கூட அவனைத் தூக்கி நிறுத்துகிற படிக்கற்கள்.
தோல்வி என்பது நம்மோடு நிரந்தர வாசம் புரிய வருகிற ஒன்றல்ல. சில சந்தர்ப்பங்களில் சில சமயங்களில், சில இடங்களில் அது நம்மை உரசி விட்டுச்செல்லும், அவ்வளவே.
தோல்வி, வாழ்வின் ஓர் அங்கமே என்பது தெரிகிறது. அதிலிருந்து, பல அனுபவ அறிவுகளைப் படிக்க முடியும் என்பதும் தெரிகிறது. இருந்தாலும், தோல்வியை நாம் வெறுக்கிறோம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் 'அனுபவத்தை வளர்த்துக்கொள்கிற வகையில் எப்படித் தோற்பது' என்கிற கலையை இதுவரையிலும் நமக்கு யாரும் கற்றுத்தந்ததில்லை.
வர்ஜீனியர் சுட்டீர் என்கிற அறிஞன் சொல்வதுபோல், 'தோற்பதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அதனை மறந்துவிடாது மனத்தில் நிறுத்துங்கள். தோல்விகளையே எண்ணி நினைத்துக் கொண்டிராமல், முடிந்தவரையில் அவற்றைப் பரிசோதனை செய்வதும், காரண காரியங்களைக் கண்டு பிடிப்பதுமே அறிவுள்ள மனிதனுக்கான அறிகுறிகளாகும்.
'என்ன தவறு செய்தேன்? என் தோல்விக்கு என்ன காரணம்? அதனை நிவர்த்திப்பது எப்படி?' என்பன போன்ற கேள்விகள். உங்களது ஒவ்வொரு தோல்வியின் போதும் உள்ளத்தில் எழட்டும்.
ஏனெனில் அந்தக் கேள்விகளின் விடைகளில் தாம் அடுத்த வெற்றியின் இரகசியம் ஒளிந்திருக்கிறது. இதனை உணர்ந்தே. 'ஒரு மனிதனின் வெற்றி, அவனது தோல்விகளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில், அவன் கீழே விழுகிற ஒவ்வொரு முறையும், வேகமாய் முன்னேறுகிறான்' என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொன்னான் ரால்ஃப் வால்டோ எமர்சன்.
'வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் நமது வேலையல்ல. தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குன்றாமல் ஏற்றுக் கொள்ளுவதும் நமது வேலைதான்' என்கிறார் ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன். இத்தகைய செழுமையான சிந்தனைகள் உங்களுக்குள் உற்பத்தியாகத் தொடங்கிவிட்டால், வெற்றியால் வெறிகொள்வதும், தோல்வியால் துவளுவதுமான சிறுபிள்ளைத்தனங்கள் உங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்ளும்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தபோது, அட்லாய் ஸ்டீவன்சன் சொன்ன வார்த்தை 'இந்தத் தோல்வியினால், சிரிக்கமுடியாத அளவுக்கு நான் பாதிக்கப்பட்டேன். ஆயினும், அழமுடியாத அளவுக்கு வயதாகியும்விட்டேன்' என்று கூறினார்.
நன்று கருது, நாளெல்லாம் வினை செய், நினைத்தது நடக்கும்! இது பாரதி வாக்கு, வாழ்க்கையை வாழ்ந்து முழுவதும் நுகர்வது என்பது ஒரு கலையாகும்.
மனிதப் பண்பாட்டுக் கலைகளுடனும் இதனை ஒன்றுபடுத்தலாம். அதற்கு வேண்டிய வாழ்க்கையின் அடிப்படைப் பண்பையும், நோக்கமும் பற்றிய அறிவையும், நாம் பெறவேண்டும். மற்றும் வாழ்க்கையின் நற்பண்புகளைப் பாராட்டி நுகர்ந்து சுவைத்து இன்பம் பெறும் திறமும் நமக்கு வேண்டும்.
'கண்களால் காண்பவனுக்கு வாழ்க்கை ஒரு சோக நாடகம் அறிவின் துணைகொண்டு சிந்திப்பவனுக்கு அது ஓர் இனிய நாடகம்' என்றார் மேல் நாட்டு அறிஞர் லாபுரூயர்.
நாம் நமது வாழ்க்கையை அறிவின் துணைகொண்டு அணுகு வோம். அனுபவத்தின் வழியாக அதை நாடுவோம். தோல்விப் படிகளை, வெற்றிப்படிகளாக மாற்றுவோம்.