

நல்ல செயல்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை மனம் திறந்து பாராட்டுங்கள். உடலுக்கு ஊட்டச்சத்து செய்யாததை மனதுக்கு பாராட்டு செய்கிறது. நல்ல செயல்களை பாராட்டினால் நல்ல செயல்கள் வளரும். நல்ல செயல்கள் வளர்ந்தால் தீயசெயல்கள் தானே தீர்ந்துபோகும்.
பக்குவமான சொற்களால் பாராட்டுங்கள். பக்தன் கடவுளை பாராட்டுகிறான். எந்தப் பாராட்டு பத்திரத்துக்காகவும் கடவுள் காத்திருக்கவில்லை.
வாழ்க்கைக்கு ஆதாரமான மனைவியைப் பாராட்டுங்கள். அவள் செய்யும் சின்னச் சின்ன உதவிகளுக்கும் நன்றி பாராட்டுங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை, தனக்கு கீழ் பணி செய்யும் பணியாளர்களை, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதற்கு பாராட்டே சிறந்த வழி.
சின்ன வயதில் கேட்ட பாடல்கள் மனத்திரையில் எப்போதும் சிறகடிப்பது போல, பாராட்டுகளை கேட்கிறவர்கள் பாராட்டுகிறவர்கள் மீது பற்றும் பாசமும் காண்பிப்பார்கள். அதுபோல் வாழ்க்கையில் முன்னேற , தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய ஒருவர் கூறும் பாராட்டானது சிறந்த டானிக் போன்றது . ஒருவரின் திறமையை வளர்த்துக் கொள்ள பாராட்டு எவ்வளவு தூரம் உதவியது என்பது பற்றிய குட்டிக்கதையைக் கீழே காண்போம்.
அர்னாட் பென்னட் என்ற ஆங்கில நாவலாசிரியர், தன் அந்தரங்கச் செயலர் குறித்து பிரமாதமாகப் புகழ்ந்துரைத்தார். பதிப்பகத்தார்கள் அந்தப் பெண்ணைச் சந்திக்க விரும்பினர். ‘உங்கள் செயல் திறனுக்கு என்ன காரணம்?’ அந்தப் பெண்ணிடமே கேட்டனர்.
அவர், ‘என் முதலாளிதான் காரணம். ஒரு சிறிய செயலை நான் சரியா செய்தாலும் மனம் திறந்து பாராட்டுவார் .என் குறைகளைப் பெரிது படுத்தாமல் என் நிறைகளை நினைவூட்டுவார். எனவே, நான் குறைகளைக் குறைத்து, திறமைகளை வளர்த்துக்கொண்டேன்’ என்று சொன்னார்.
‘பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆத்மார்த்த ஏக்கமாய் இருக்கிறது’ என்கிறார் வில்லியம் ஆலிஷா.
‘மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால் பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவதுதான்’ என்கிறார் தத்துவ ஞானி வில்லியம் ஜேம்ஸ்.
இவர்களின் கருத்துப்படி பாராட்டுதல் என்பது மனித முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு ஏணிப்படி. ஒரு ஊக்க மருந்து என்பதை உணரலாம்.
-இந்திராணி தங்கவேல்